
இன்றைய உலகம் நூற்றுக்கு தொண்ணூறு சதவீதம் சுயநலம் மற்றும் பொறாமை எண்ணத்துடன் தான் இருக்கிறது. படித்து முடித்து வேலைக்கு முயற்சி செய்திருப்பவன் மற்றவருக்கு வேலை கிடைத்து விட்டால் அவனை பார்த்து பொறாமை படுகிறான். ஒரு தொழிலைத் துவங்க வேண்டும் என்று நினைத்து அதனை செய்ய முடியாதவன் ஒரு தொழிலை சிறப்புடன் செய்து நல்ல வசதியாக இருப்பவர்களைப் பார்த்து பொறாமைப்படுகிறான். ஏழை பணக்காரர்களைப் பார்த்து பொறாமைப்படுகிறார்கள். இப்படி ஒவ்வொருவரும் தங்கள் ஆசையின் காரணமாக மற்றவரை பார்த்து பொறாமைப்படுகிறார்கள். இயலாமை எங்கு இருக்கிறதோ அங்கு பொறாமையும் இருக்கிறது. இவ்வாறான பொறாமையினால் மற்றவர்களுக்கு உண்டாகும் கண் திருஷ்டி அவர்களுக்கு பல வித தீய விளைவுகளை ஏற்படுத்துகிறது. இவ்வாறு கண்திருஷ்டியினால் உண்டாகும் விளைவுகள் காரணமான சில விஷயங்களை நாம் மற்றவர்களிடம் சொல்லாமல் இருப்பது தான் நமக்கும், நம்மைச் சுற்றி உள்ளவர்களுக்கும் நன்மை தரக்கூடியதாக இருக்கிறது. அவ்வாறு எந்தெந்த விஷயங்களை மற்றவர்களிடம் சொல்ல வேண்டும், சொல்ல கூடாது என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.
ஒருசிலர் கள்ளம் கபடம் இல்லாமல் தான் செய்யக்கூடிய சின்ன சின்ன விஷயங்களையும் தன்னைச் சுற்றி இருப்பவர்களிடம் பகிர்ந்து கொண்டிருப்பார்கள். ஒரு சிலரோ மற்றவர்களின் இயலாமையை தெரிந்துகொண்டு அவர்களை காயப்படுத்தும் வகையில் தனக்கான பெருமைக்குரிய விஷயங்களை பகிர்ந்து கொண்டிருப்பார்கள். இப்படி இரண்டு விதமான நபர்கள் இருக்க தான் செய்கிறார்கள்.
ஆனால் எப்படியாக இருந்தாலும் இவ்வாறு செய்வது அவர்களுக்கு தீமையை மட்டுமே விளைவிக்கிறது. நமக்கு எதிரில் இருப்பவர்கள் இவர்களால் மட்டும் எப்படி முடிகிறது? நம்மால் முடியவில்லையே, என்று எண்ணும் பொழுது அது நமக்கு கண் திருஷ்டியாக மாறிவிடுகிறது. இதற்காக முதலில் நாம் ஏதாவது புதிய விஷயத்தை துவங்குவதாக இருந்தால் அதனை அனைவரிடமும் சொல்ல வேண்டிய அவசியம் கிடையாது. நம்மை முழுமையாக நேசிக்கும் சிலரிடம் மட்டும் அதனை சொன்னால் போதும்.
அடுத்ததாக நீங்கள் நிலம் வாங்கியதாக இருந்தாலும், உங்கள் பேங்க் அக்கவுண்டில் பணம் இருப்பதையும் மற்றவர்களிடம் சொல்ல வேண்டிய அவசியம் கிடையாது. நீங்கள் உங்கள் சந்தோஷத்தை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ள நினைப்பீர்கள் ஆனால் அவர்களோ இவர்கள் இந்த நிலத்தை வாங்க எப்படி பணத்தை சேர்த்திருப்பார்கள் என்று எண்ணும் பொழுது அந்த எண்ணம் உங்களுக்கு தீமை விளைவிக்கக் கூடிய கண் திருஷ்டியாக மாறிவிடுகிறது.
வலதுகை செய்வது இடது கைக்கு தெரியக்கூடாது என்பது போல நீங்கள் மற்றவர்களுக்கு செய்யும் தான தர்மங்களை பற்றி பிறரிடம் பகிர்ந்து கொள்ளக் கூடாது பொதுவாக தானம் செய்வது உங்களுக்கு புண்ணியத்தை சேர்க்கும் ஆனால் அது நீங்கள் இதனைப் பற்றி மற்றவர்களுக்கு தெரியப்படுத்தாமல் இருந்தால் மட்டுமே நடக்கும் நீங்கள் தானம் செய்வதை பெருமையாக மற்றவரிடம் கூறும் பொழுது அது உங்களுக்கு புண்ணியம் சேர்க்காமல் பாவத்தை மட்டுமே சேர்க்கிறது.
அடுத்ததாக நமது வீட்டில் பின்பற்றப்படும் உணவு முறை, வாழ்க்கை முறை மற்றும் ஆரோக்கியம் இவற்றைப் பற்றி பிறரிடம் பேசுவதைக் நிச்சயம் தவிர்க்க வேண்டும். நாம் உண்ணும் உணவு முறையை மற்றவர்களிடம் சொல்லும் பொழுது அவர்களின் இயலாமை காரணமாக இப்படி எல்லாம் சாப்பிடலாமா? என்று அவர்கள் ஏங்கும் பொழுது அந்த எண்ணம் நமக்கு திருஷ்டியாக மாறிவிடுகிறது. எனவே நீங்கள் பெருமையாக நினைத்து பேசும் பல விஷயங்கள் உங்களுக்கு ஆபத்தான விஷயங்களை சேர்க்கிறது. ஆகவே இவ்வாறு பேசுவதை தவிர்த்துக் கொள்வது உங்களுக்கு நன்மையை சேர்க்கும்.