
முருகப்பெருமான் விரதத்தில் மிகவும் சிறப்புக்குரியது கந்த சஷ்டி விரதம். பலரும் பல வேண்டுதலுக்காக இந்த விரதத்தை மேற்கொள்வார்கள். பல விதங்களின் இந்த விரதத்தை மேற்கொள்வார்கள். எப்படி விரதம் இருந்தாலும், எந்த வேண்டுதலுக்காக விரதம் இருந்தாலும் முழு மனதோடு விரதம் இருக்க வேண்டும். அப்படி விரதம் இருக்கும் பொழுது செய்ய வேண்டிய செயல்கள் மற்றும் செய்யக்கூடாத செயல்கள் என்ன என்பதை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் பார்க்கப்போகிறோம்.
அசுரனை வதம் செய்வதற்காக அவதரித்தவர் தான் முருகப்பெருமான். இந்த கலியுகத்தின் கண்கண்ட தெய்வமாகவும், கேட்ட வரத்தை தரும் தெய்வமாகவும் திகழ்கிறார். அவரை முழு மனதோடு வழிபாடு செய்து பல அற்புத பலன்களை பெற்றவர்கள் பல இருக்கிறார்கள். அவரை நினைத்து நாம் இருக்கக்கூடிய விரதங்களில் மிகவும் முக்கியமான விரதமாக திகழ்வது தான் கந்த சஷ்டி விரதம். கந்தசஷ்டி விரதம் இருந்து முருகப்பெருமானை வணங்கினால் தீராத நோய்கள் தீரும். திருமண பாக்கியம் கைகூடி வரும். புத்திர பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. சுக்குக்கு மிஞ்சிய மருந்தும் இல்லை, சுப்பிரமணியருக்கு மிஞ்சிய கடவுளும் இல்லை என்பார்கள். இந்த விரத நாட்களில் செய்ய வேண்டிய செயல்களை முதலில் தெரிந்துக்கொள்வோம்.
என்ன செய்யலாம்?
கந்தசஷ்டி ஆரம்பம் முதல் சூரசம்ஹாரம் வரை மிக எளிமையான சைவ உணவினை, குறைந்த அளவில் உட்கொண்டு எப்போதும் முருகப்பெருமானின் சிந்தனையிலேயே விரதம் இருப்பது அவசியம். விரதம் இருப்பவர்கள் குளிர்ந்த நீரில் தினமும் இரண்டு நேரம் குளித்து, வீட்டில் இருக்கும் முருகப்பெருமான் படத்திற்கு பூ வைத்து, தீபம் ஏற்றி, கற்பூரம் காட்ட வேண்டும். இந்த ஆறு நாட்களும் அருகிலுள்ள முருகப்பெருமான் கோயிலுக்கு சென்று தரிசனம் செய்வதும், கந்தபுராணத்தை கேட்பதும் அவசியம்.
ஆறு நாட்களும் உபவாசம் இருக்க முடியாதவர்கள். சஷ்டி அன்று மட்டும் எதுவும் சாப்பிடாமல் இருப்பது நல்லது. இரவு தரையில் கம்பளம் விரித்து தான் தூங்க வேண்டும். பாய் விரித்து படுப்பது, மெத்தையில் படுப்பது கூடாது. சூரசம்ஹார தினத்தன்று அதிகாலையில் எழுந்து குளித்து விட்டு, பூஜையறையில் விளக்கு ஏற்றி, குலதெய்வத்தை மனதார வணங்க வேண்டும். பிறகு சூரசம்ஹார நிகழ்ச்சியை முருகப்பெருமான் கோயிலுக்கு சென்று தரிசனம் செய்ய வேண்டும். மறுநாள் முருகனுக்கு திருக்கல்யாணம் நடைபெறும். அதை தரிசனம் செய்து விரதத்தை நிறைவு செய்ய வேண்டும்.
என்ன செய்யக்கூடாது?
சஷ்டி விரதம் இருக்கும் நாட்களில் எக்காரணம் கொண்டும் அசைவ உணவு சாப்பிடக்கூடாது. எந்த தீட்டு காரியத்திற்கும் செல்லக்கூடாது. தீய பழக்கங்களில் ஈடுபடக்கூடாது. யாரையும் திட்டக்கூடாது. எந்த காரணம் கொண்டும் கோபமாக பேசக்கூடாது. பிறர் மனம் புண்படும் படி நடக்கக்கூடாது. மாலை அணிந்து விரதம் இருப்பவர்கள் முடிந்த வரை காலணியை தவிர்ப்பது நல்லது.
இதையும் படிக்கலாமே:பணப்பிரச்சினை தீர்க்கும் ஐப்பசி மூன்றாம் பிறை பரிகாரம்
மிகவும் சக்தி வாய்ந்த முருகப்பெருமானுக்குரிய கந்த சஷ்டி விரதத்தில் இந்த வழிமுறைகளை பின்பற்றி முருகப்பெருமானின் அருளை பெறலாம் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்கிறோம். திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா!!!!