
கந்த சஷ்டி கவசம் முருக பக்தர்களுக்கு உரிய சக்தி கவசமாக விளங்குகிறது. இதன் பாடல் வரிகள் படிக்கும் பொழுதே மனதை ஒருமுகப்படுத்த செய்து விடும் அற்புதம் கொண்டது. கந்த சஷ்டி கவசம் என்றால் தெரியாதவர்கள் கூட, “காக்க காக்க கனகவேல் காக்க” என்னும் வரிகளை அறிந்திருக்க மறப்பதில்லை. இதை 36 முறை படிப்பவர்களுக்கு எதிர்காலத்தை கூட முன்கூட்டியே கணித்து சொல்லக் கூடிய சக்திகள் கிடைக்கும் என்பது நம்பிக்கை. கந்த சஷ்டி கவசத்தை எப்படி படிக்க வேண்டும்? அதனால் கிடைக்கக் கூடிய பலன்கள் என்னென்ன? என்பதைத் தான் இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவை நோக்கி பயணித்து தெரிந்து கொள்ள இருக்கிறோம்.
ஒரு நாள் முப்பத்தாறுரு கொண்டு ஓதியே,
ஜெபித்து உகந்து நீரணிய,
அஷ்டதிக்குள்ளோர் அடங்கிலும் வசமாய்த்..
கந்த சஷ்டி கவசத்தின் பாடல் வரிகளில் மேற்கூறிய இந்த மறைமுகமான கருத்து சூட்சமமாக சொல்லப்பட்டுள்ளது. அதாவது ஒரு நாளைக்கு 36 முறை கந்த சஷ்டி கவச பாடல்களை முழுவதுமாக ஜபித்து முடித்து நெற்றியில் விபூதி (திருநீறு) பூசிக் கொண்டு முருகனை வணங்கி வழிபடுபவர்களுக்கு மிகப் பெரிய பலன்கள், சக்திகள் எல்லாம் கிடைக்கும் என்று ஆன்மீகப் பெரியோர்கள், சான்றோர்கள் பலரும் கூறியுள்ளார்கள்.
கந்த சஷ்டி கவசம் சிறு பாடல் அல்ல, அது மிகப் பெரும் பாடல். பாடல் வரிகள் முழுவதுமாக படித்து முடிக்க குறைந்தது 15 லிருந்து 20 நிமிடங்கள் வரை எடுக்கும். பாடல் தெரியாதவர்கள் பார்த்து படித்து முடிக்க 25 நிமிடங்கள் கட்டாயம் எடுக்கும். அப்படி இருக்கும் பொழுது 36 முறை படிப்பதற்கு எவ்வளவு நேரம் எடுக்கும்? நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள். குறைந்தபட்சம் ஒன்பது மணி நேரத்தில் இருந்து பத்து மணி நேரம் வரை எடுக்கக் கூடிய இந்த சவால் நிறைந்த ஆன்மீக வழிபாட்டை ஒருவர் நம்பிக்கையுடன் முருகனை நினைத்து, முழு பக்தியுடன் எதிர்கொண்டு செய்து முடித்தால், அவர்களுக்கு எண்ணிலடங்கா பலன்கள் கிடைக்கும் என்பது உறுதி.
கந்த சஷ்டி கவச பாடல் வரிகளில் சூட்சமமான மந்திர வரிகளும், வரிகளை திருப்பி போட்டு பல்வேறு வகைகளில் சொல்ல கூடிய முறைகளிலும் அமைய பெற்றுள்ளன. இந்த மந்திர அமைப்பு ரொம்பவும் வித்தியாசமான மற்றும் சக்தி வாய்ந்த அமைப்பாகும். ஒரு நாளில் 36 முறை சொல்லி நேரத்தை விரயம் செய்ய முடியாதவர்கள், எளிமையாக அதன் பலன்களை அடையக் கூடிய வகையில் மற்றொரு விஷயமும் கூறப்பட்டுள்ளது. “சரவணபவ” என்னும் முருகனின் இந்த 6 எழுத்து சக்தி வாய்ந்த மந்திரத்தை ஆறு முறை திருப்பிப் போட்டு சொல்ல வேண்டும். ஒவ்வொரு மந்திரத்தையும் ஆறு முறை சொல்ல 36 முறை ஆகிவிடும்.
1. சரவணபவ
2. ரவணபவச
3. வணபவசர
4. ணபவசரவ
5. பவசரவண
6. வசரவணப
இதையும் படிக்கலாமே:
சனி வக்கிர நிவர்த்தி 2024
மேலும் பல மர்மமான சில மனித அறிவிற்கு எட்டாத மகத்துவமான விஷயங்கள் அடங்கியுள்ள இந்த கந்த சஷ்டி முருக கவச மந்திர பாடல்களை செவ்வாய், சஷ்டி மற்றும் கிருத்திகை நாட்களில் மட்டுமாவது உச்சரித்து எண்ணிப் பார்க்க முடியாத வியப்பிற்குரிய பலன்களை எல்லாம் நாம் பெறலாம்.