
கார்த்திகை தீபம் என்பது சிவபெருமானை நினைத்து வழிபடும் ஒரு திருநாள் ஆகும். திருவண்ணாமலையில் தீப ஜோதி ஏற்றிய பின்னர் அனைத்து இல்லங்களிலும் தீபம் ஏற்றி வீடு முழுவதும் அலங்கரிக்கப்படுகிறது. இந்த தீப ஒளியில் மனதில் உள்ள அனைத்து தீய எண்ணங்களும், குழப்பங்களும் விலகி ஒளிமயமாக இருக்க வேண்டும் என்பதே தீபத் திருநாளில் அர்த்தமாக பார்க்கப்படுகிறது. அன்றைய நாள் விசேஷ நைவேத்தியங்கள் படைத்து பூஜை செய்யப்படுகிறது. அவ்வாறு தீபத்திருநாள் அன்று செய்யப்படும் பூஜைக்குத் தேவையான நைவேத்தியங்கள் என்னென்ன? அவற்றை எப்படி செய்ய வேண்டும்? என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.
இனிப்பு அவல் பொறி:
முதலில் 6 கப் அவல் பொரியை பெரிய துளை உள்ள சல்லடையில் வைத்து சலித்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதில் இருக்கும் உமி, நெல் போன்றவற்றை சுத்தமாக நேம்பி எடுத்துக் கொள்ள வேண்டும். பிறகு இதனுடன் ஒரு கப் பொட்டுக்கடலை சேர்த்துக் கொள்ள வேண்டும். பின்னர் கால் மூடி தேங்காயை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.
பின்னர் அடுப்பை பற்ற வைத்து, ஒரு கடாயை வைத்து, ஒரு ஸ்பூன் நெய் சேர்க்க வேண்டும். இந்த நெய்யில் நறுக்கி வைத்துள்ள தேங்காயை சேர்த்து மிதமான தீயில் பொன்னிறமாக வறுத்துக் கொண்டு, அதனை ஒரு தட்டிற்க்கு மாற்றி ஆர வைக்க வேண்டும். அதன் பின்னர் ஒரு பாத்திரத்தில் 2 கப் வெல்லம் சேர்த்து அதனுடன் அரை கப் தண்ணீர் சேர்த்து அதனை அடுப்பின் மீது வைத்து நன்றாக கரைத்துக் கொள்ள வேண்டும்.
சற்று நேரத்தில் வெல்லப்பாகு கெட்டியாகி வர ஆரம்பிக்கும். அப்போது ஒரு சிறிய தட்டில் தண்ணீர் எடுத்துக்கொண்டு அதில் இந்தப் பாகை ஊற்றி பார்க்க வேண்டும். அப்பொழுது பாகு கெட்டியான பதத்திற்கு வந்துவிட்டது என்றால் அடுப்பை அனைத்துவிட்டு வெல்லப் பாகு சூடாக இருக்கும் பொழுதே அவல் பொரியில் சேர்த்துக்கொள்ளவேண்டும். அதனுடன் வறுத்து வைத்த தேங்காய், கால் ஸ்பூன் சுக்குப் பொடி, கால் ஸ்பூன் ஏலக்காய் பொடி சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும். அவ்வளவுதான் இனிப்பு அவல் பொரி தயாராகிவிட்டது.
தினை மாவிளக்கு:
முதலில் ஒரு கப் திணை அரிசியை நன்றாக கழுவி, வடிகட்டி அதனை ஒரு சுத்தமான துணியில் பரப்பி நிழலில் உலர வைக்க வேண்டும். அரிசியில் ஈரப்பதம் காய்ந்ததும் அதனை மிக்ஸி ஜாரில் சேர்த்து கட்டிகளில்லாமல் நைஸாக அரைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் மாவை சல்லடை வைத்து சலித்துக்கொள்ள வேண்டும்.
பிறகு இந்த மாவுடன் அரை ஸ்பூன் ஏலக்காய் தூள், ஒரு ஸ்பூன் நெய் மற்றும் கால் கப் வெல்லம் சேர்த்து நன்றாக பிசைய வேண்டும். சிறிது நேரத்தில் வெள்ளம் இளகி மாவு கெட்டியாக ஆரம்பிக்கும். அந்த நேரத்தில் இதனுடன் ஒன்றரை ஸ்பூன் தேன் கலந்து மறுபடியும் நன்றாக பிசைய வேண்டும். இப்பொழுது மாவு கொழுக்கட்டை பிடிக்கும் பதத்திற்க்கு வந்திருக்கும். அப்பொழுது மாவினை இரண்டாகப் பிரித்துக் கொண்டு உங்களுக்கு ஏற்ற வடிவத்தில் இரண்டு மாவிளக்குகளை செய்துகொள்ள வேண்டும். கார்த்திகை தீபம் அன்று முதலில் இந்த விளக்கில் எண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றி விட்டு, அதன் பிறகு தான் மற்ற தீபங்களை ஏற்ற வேண்டும்.