
கார்மேகக் கூந்தல் என்று முடியை வர்ணிப்பார்கள் கவிஞர்கள். மழைக்கு முன்பாக இருக்கின்ற கருமையான மேகத்திற்கு இணையாக கூந்தலை ஒப்பிடுகிறார்கள். அந்த அளவுக்கு கருமையாகவும் அதே சமயம் அடர்த்தியாகவும் முடி இருக்க வேண்டும் என்று தான் பெண்களும், ஆண்களும் ஆசைப்படுவார்கள். அவர்களின் ஆசையை நிறைவேற்றுவதற்கான ஒரு அற்புதமான ஹேர் பேக்கை தான் இன்று நாம் பார்க்கப் போகிறோம். எந்தவித பாகுபாடும் இன்றி அனைவரும் உபயோகப்படுத்த கூடிய அற்புதமான கருஞ்சீரகத்தை வைத்து ஹேர் பேக் எப்படி செய்வது என்று தான் இந்த அழகு குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்கப் போகிறோம்.
பலவிதமான மருத்துவ குணங்களைக் கொண்ட கருஞ்சீரகத்தை நாம் தொடர்ந்து நம் தலைக்கும், உடம்பிற்கு எடுத்துக் கொண்டால் அதனால் பல அற்புதமான பலன்கள் நமக்கு கிடைக்கும் என்று பல ஆராய்ச்சிகள் கூறுகின்றன. கருஞ்சீரகத்தை தலைக்கு உபயோகப்படுத்தும் பொழுது முடி உதிர்தலை அது முற்றிலும் தவிர்த்து, வேர்க்கால்களை வலுவடையச் செய்து அடர்த்தியாக வளர தூண்டுகிறது. இதே கருஞ்சீரகத்தை நாம் தொடர்ந்து தினமும் உள்ளுக்குள் எடுத்து வந்தால் புற்றுநோய் முதற்கொண்ட அபாயகரமான நோய்களையும் தடுக்கும் ஆற்றல் இதற்கு உண்டு என்றும் கூறப்படுகிறது.
இவ்வளவு அற்புத மருத்துவ குணம் நிறைந்த கருஞ்சீரகத்தை நாம் தலைக்கு எவ்வாறு உபயோகப்படுத்த வேண்டும் என்று பார்ப்போம். இதற்கு கருஞ்சீரகம் 2 டேபிள் ஸ்பூன் எடுத்துக்கொள்ள வேண்டும். அதனுடன் 2 டீஸ்பூன் அளவிற்கு வெந்தயத்தை எடுத்துக் கொள்ள வேண்டும். அளவை நன்றாக கவனித்துக் கொள்ளுங்கள். இவை இரண்டையும் நன்றாக வெயிலில் காய வைத்து மிக்ஸி ஜாரில் போட்டு பொடி செய்து வைத்துக் கொள்ள வேண்டும். பொடி செய்த பிறகு அதை சல்லடையில் வைத்து சலித்து நைசான பொடியாக எடுத்து வைத்துக் கொண்டால் ஹேர்பேக் செய்யும் பொழுது உங்களுக்கு எளிதாக இருக்கும்.
ஒருமுறை இந்த பொடியை தயார் செய்து வைத்துக் கொண்டால் பல மாதங்கள் ஆனாலும் நாம் இதை உபயோகப்படுத்திக் கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது. ஹேர் பேக் தயார் செய்வதற்கு முன்பாக ஒரு முழு கற்றாழை கீற்றை நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும். அதில் இருக்கும் மஞ்சள் திரவியம் முழுவதும் சென்ற பிறகு அதை சுத்தமாக கழுவி அதற்குள் இருக்கும் சதை பகுதியை மிக்ஸி ஜாரில் போட்டு நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
இப்பொழுது ஒரு பவுலை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஹேர் பேக்கிற்கு தேவையான கருஞ்சீரகப் பொடியை சேர்த்துக் கொள்ளுங்கள். அதனுடன் ஒரு டேபிள்ஸ்பூன் அளவிற்கு நீங்கள் தலைக்கு உபயோகப்படுத்தும் தேங்காய் எண்ணெயை சேர்த்துக் கொள்ள வேண்டும். அதனுடன் தேவையான அளவு கற்றாழை சாறையும் சேர்த்து பேஸ்ட் போல கலந்து கொள்ள வேண்டும். வேர் கால்களில் நன்றாக படும் அளவிற்கு தடவி க்கொள்ள வேண்டும். பத்து நிமிடம் கழித்து தலையை அலசி விடலாம்.
இவ்வாறு நாம் வாரத்திற்கு இரண்டு முறை செய்வதன் மூலம் நம் தலையில் இருக்கக்கூடிய பொடுகு போன்ற இன்ஃபெக்ஷன் இருந்தால் அது சரியாகிவிடும். முடி உதிர்வை தடுக்கும். முடிவேர்கால்களை தூண்டிவிட்டு முடியை வேகமாக வளரச் செய்யும். நரை முடியை தடுக்க உதவும்.
இதையும் படிக்கலாமே: வீட்டில ஸ்வீட் செய்ய வெல்லம் கரைச்சது மிச்சம் இருக்கா? அப்போ அந்த வெல்லக் கரைசலை வச்சு ஒரு சூப்பரான ஃபேஸ் பேக் செஞ்சு உங்க முகத்தை பிரகாசம் ஆக்குங்க.
கற்றாழை ஜூஸை சேர்க்க விரும்பாதவர்கள் சாதம் வடித்த கஞ்சியையும் சேர்த்து இந்த ஹேர் பேக்கை உபயோகப்படுத்தலாம். பல அற்புதமான மாற்றங்களை ஒரே உபயோகத்தில் காண முடியும் என்பதை மனதில் நிறுத்தி உபயோகப்படுத்தி பயன் அடையுங்கள்.