
எப்போது பார்த்தாலும் ஒரே சுவையில் ஒரே விதமான சட்னிகள். எல்லாவற்றையும் ஒதுக்கி வைத்து விடுங்கள். கொஞ்சம் வித்தியாசமாக கத்திரிக்காயை வைத்து புதுவிதமான சுவையில் புதுவிதமான சட்னி செய்வது எப்படி என்பதை பற்றித்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம். கத்தரிக்காய் நம்முடைய உடல் ஆரோக்கியத்துக்கு ரொம்ப ரொம்ப நன்மை தரக்கூடிய ஒரு காய். குழந்தைகள் சாம்பார் வைத்து கொடுத்தாலும் பொரியல் செய்து கொடுத்தாலும் நிச்சயம் சாப்பிட மாட்டாங்க. கத்தரிக்காயே கண்ணுக்கு தெரியாமல் இப்படி சட்னியாக அரைத்துக் கொடுத்து விடுங்கள். கத்திரிக்காய் சைலன்டாக வயிற்றுக்குள் சென்று விடும். வாங்க ரெசிபியை பார்க்கலாம்.
முதலில் அடுப்பில் ஒரு கடாயை வைத்து எண்ணெய் – 1 ஸ்பூன் ஊற்றி, கடலைப்பருப்பு – 1 ஸ்பூன், உளுந்தம் பருப்பு – 1 ஸ்பூன், வெந்தயம் – 1/4 ஸ்பூன், சீரகம் – 1/2 ஸ்பூன், மிளகு – 10, வரமிளகாய் – 4, பச்சை மிளகாய் – 2, இந்த பொருட்களை எல்லாம் போட்டு பொன்னிறமாக வறுத்து எடுத்து, இதை அப்படியே மிக்ஸி ஜாரில் போட்டு தண்ணீர் எதுவும் ஊற்றாமல் பொடியாக அரைத்து தனியாக அப்படியே வைத்துக் கொள்ளுங்கள்.
அடுத்து அதே கடாயில் 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி பொடியாக நறுக்கிய – 1/4 கிலோ அளவு கத்திரிக்காய் போட்டு நன்றாக வதக்க வேண்டும். வதக்கி மூடி மூன்று நிமிடம் லேசாக கத்திரிக்காய் வெந்தவுடன், நறுக்கிய பெரிய பழுத்த தக்காளிப் பழம் – 1, நறுக்கிய – 1/2 கைப்பிடி கொத்தமல்லி தழை, மஞ்சள் தூள் – 1/2 ஸ்பூன், பெரிய நெல்லிக்காய் அளவு – புளி, உப்பு தேவையான அளவு, இந்த பொருட்களை எல்லாம் போட்டு குழைய வதக்க வேண்டும்.
எல்லா பொருட்களும் வெந்து வந்தவுடன் இறுதியாக மிக்ஸி ஜாரில் அரைத்து வைத்திருக்கும் மசாலா பொடியை கடாயில் போட்டு, ஒரு நிமிடம் நன்றாக கலந்து விட்டு, அடுப்பை அணைத்து விடுங்கள். இந்த விழுது ஆறிய பின்பு மிக்ஸி ஜாரில் போட்டு கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி வெங்காய சட்னி அரைப்பது போல கொஞ்சம் திக்காக அரைத்து வைத்துக் கொள்ளுங்கள்.
அடுப்பில் ஒரு கடாயை வைத்து 2 ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி, ஜீரகம் – 1/2 ஸ்பூன், வரமிளகாய் – 1, கருவேப்பிலை – 1 கொத்து, கொஞ்சமாக பெருங்காயம் போட்டு தாளித்து இதில் அரைத்து வைத்திருக்கும் சட்னியை கொட்டி அடுப்பை அணைத்து விடுங்கள்.
அந்த சூட்டிலேயே ஒரு முறை சட்னியை கலந்து சுட சுட இட்லி தோசைக்கு பரிமாறினால் அட்டகாசமான வித்தியாசமான சுவையில் ஒரு சட்னி தயார். உங்களுக்கு இந்த ரெசிபி பிடிச்சிருந்தா மிஸ் பண்ணாம ட்ரை பண்ணி பாருங்க.