
கோவில்களில் கோமுகம் என்பது, கருவறையிலிருந்து தெய்வங்களுக்குச் செய்யப்படும் அபிஷேக நீர் வெளியே வரும் ஒரு வடிகால் போன்ற அமைப்பு. பெரும்பாலான சிவாலயங்கள் அல்லது பெருமாள் ஆலயங்களில் இந்த கோமுகம் இருக்கும். இது பொதுவாக ஒரு மாட்டு முகம் போல வடிவமைக்கப்பட்டிருக்கும், அதனாலேயே கோமுகம் (கோ – மாடு, முகம் – முகம்) என்று பெயர் பெற்றது. இந்த கோமுக தீர்த்தத்தின் மகிமைகளை பற்றிய ஆன்மீகம் சார்ந்த தகவல்களை இந்த பதிவில் பகிர்ந்து கொள்கிறோம்.
கோமுக நீரின் மகிமைகள்:
கோமுகத்திலிருந்து வரும் நீர் சாதாரண நீர் அல்ல; அது தெய்வ திருமேனியின் மீது பட்டு வரும் அபிஷேக நீர். அபிஷேகம் செய்யும் போது, பல்வேறு புனிதப் பொருட்கள் (பால், தயிர், தேன், சந்தனம், பன்னீர், இளநீர், விபூதி, பஞ்சாமிர்தம் போன்றவை) இறைவனின் திருமேனி மீது பட்டு, அதிலிருந்து வழிந்து கோமுகம் வழியாக வெளியேறுகிறது. இந்த நீரில், தெய்வத்தின் சக்தி, அருள் மற்றும் தெய்வீக அதிர்வுகள் கலந்து இருப்பதாக நம்பப்படுகிறது.
இந்த கோமுக நீரின் முக்கிய மகிமைகள் சில கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
பாவங்களை நீக்கும் கோமுக நீர்! கங்கை, யமுனை போன்ற புண்ணிய நதிகளின் நீரை விடவும், கோமுக தீர்த்தம் மிகவும் சக்தி வாய்ந்தது என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. இந்த தீர்த்தத்தை தலையில் தெளித்துக் கொள்வதன் மூலமோ அல்லது அருந்துவதன் மூலமோ நம்முடைய தீவினைகள், பாவங்கள் அனைத்தும் நீங்கும் என்பது நம்பிக்கை. மனிதர்களின் பாவங்களை சுமக்கும் புண்ணிய நதிகளும், கோமுக தீர்த்தத்தை தலையில் தெளித்து தன் பாவங்களை போக்கிக் கொள்வதாக புராணங்கள் கூறுகிறது.
பல்வேறு வகையான தோஷங்கள், குறிப்பாக பூர்வ ஜென்ம பாவங்கள், கண் திருஷ்டி, காத்து கருப்பு, பில்லி, சூனியம் போன்ற எதிர்மறை சக்திகள் இந்த கோமுக நீரைத் தெளிப்பதால் விலகும் என்று நம்பப்படுகிறது. கோமுக தீர்த்தத்தைத் தெளித்துக் கொள்வதன் மூலம் மனம் தூய்மை அடையும், நேர்மறை எண்ணங்கள் பெருகும். சில தீராத வியாதிகளும், பிணிகளும் கோமுக தீர்த்தத்தை அருந்துவதன் மூலம் குணமாகும் என்று கூறப்படுகிறது.
குறிப்பாக திருமணத் தடை உள்ளவர்கள், கோமுகத்தையும், கோமுக நீர்ப் பாதையையும் சுத்தப்படுத்துவதன் மூலமும், அதற்கு மஞ்சள், குங்குமம் வைப்பதன் மூலமும், கோமுக நீரை அபிஷேகத்தின் போது பருகி இறைவனிடம் பிரார்த்தனை செய்வதன் மூலமும் திருமணத் தடைகள் நீங்கும் என்று நம்பப்படுகிறது. குழந்தை இல்லாத தம்பதியர், குறிப்பிட்ட நட்சத்திர நாட்களில் (உதாரணமாக, ரோகிணி நட்சத்திரம்) கோமுக தீர்த்தத்தைத் தெளித்துக் கொள்வதன் மூலம் குழந்தை பாக்கியம் பெறலாம்.
இதையும் படிக்கலாமே:
ஆன்மீகத்தின் மேஜிக் டேஸ்! எந்தக் கிழமையில் என்ன செய்தால் அதிர்ஷ்ட பலன் கிடைக்கும் தெரிந்து கொள்ளலாமா?
கோமுக நீரை வீட்டில், வியாபார ஸ்தலங்களில், பணம் வைக்கும் இடங்களில் விசாக நட்சத்திரத்தன்று தெளிப்பதன் மூலம் வளம் பெருகி செல்வ செழிப்பு உண்டாகும். கார்த்திகை நட்சத்திரத்தன்று கோமுக தீர்த்தத்தைத் தெளித்துக் கொள்வதன் மூலம் பிரிந்த தம்பதியர் விரைவில் ஒன்று சேருவார்கள். திருவாதிரை நட்சத்திரத்தன்று தெளித்துக் கொள்வதால் ஆரோக்கியம் சீர்படும். சில கோவில்களில், இந்த கோமுகத்திற்கு மேலே பிரம்ம தேவரின் சிலை அமைக்கப்பட்டிருக்கும். சிவபெருமானின் சதுராங்க சக்திகள் பிரம்மாவின் நான்கு தலைகளிலும் நிலைபெற்று, அந்த சக்தி அபிஷேக நீரில் கலந்து, கோமுகம் வழியாக வெளியேறி பக்தர்களுக்கு அருளாக கிடைக்கிறது என்றும் சொல்லப்படுகிறது. ஆகவே, அடுத்த முறை நீங்கள் கோவிலுக்குச் செல்லும் போது, கோமுக நீரின் மகிமையை உணர்ந்து, அதைப் புனிதமாக மதித்து பயன்படுத்திக் கொள்ளுங்கள்.