- Advertisement -
சமையல் குறிப்புகள்

தக்காளியுடன் கொத்தமல்லி சேர்த்து இப்படி சட்னி செய்தால் போதும். எத்தனை இட்லி கொடுத்தாலும் வேண்டாம் என்று சொல்லாமல் சாப்பிட்டுக்கொண்டே இருப்பார்கள்

- Advertisement -

காலை உணவாக அதிகம் செய்யப்படும் இட்லி, தோசையுடன் தொட்டுக்கொள்ள அதற்குத் தகுந்த சைடிஷ் செய்து கொடுத்தால் காலை உணவை மிகவும் அருமையாக சாப்பிட்டு முடிக்கலாம். அவ்வாறு இட்லி என்பது மிகவும் சாஃப்ட்டாக காரமில்லாத உணவாகும். எனவே அதனுடன் தொட்டுக்கொள்ள சற்று காரசாரமான சட்னி செய்து கொடுத்தால் மிகவும் அருமையாக இருக்கும். எனவே தக்காளி சட்னி, மிளகாய் சட்னி, வெங்காய சட்னி, காரச் சட்னி இதுபோன்ற சட்னியுடன் சாப்பிடும்பொழுது இரண்டு இட்லிக்கு பதிலாக நான்கு இட்லி சாப்பிடுவார்கள். அப்படி பலரும் விரும்பி சாப்பிடும் வகையில், காரமான சுவையில் சுடச்சுட சூப்பரான தக்காளி, கொத்தமல்லி சட்னி செய்து கொடுத்து பாருங்கள். எவ்வளவு கொடுத்தாலும் சாப்பிட்டுக்கொண்டே இருப்பார்கள். இந்த அருமையான தக்காளி கொத்தமல்லி சட்னியை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

தேவையான பொருட்கள்:
வெங்காயம் – 1, தக்காளி – 2, கொத்தமல்லி தழை – 2 கைப்பிடி, வர மிளகாய் – 5, உளுத்தம்பருப்பு – 2 ஸ்பூன், கருவேப்பிலை – ஒரு கொத்து, உப்பு – ஒரு ஸ்பூன், இஞ்சி சிறிய துண்டு – ஒன்று, பூண்டு – 4 பல், எண்ணெய் – 1 ஸ்பூன், கடுகு – அரை ஸ்பூன், சீரகம் – அரை ஸ்பூன்.

- Advertisement -

செய்முறை:
முதலில் வெங்காயம் மற்றும் தக்காளியை நான்கு துண்டுகளாக அரிந்து வைக்க வேண்டும். பிறகு இஞ்சி மற்றும் பூண்டை தோல் நீக்கி, சுத்தம் செய்து வைத்துக்கொள்ள வேண்டும். பின்னர் வரமிளகாயை காம்பு கிள்ளி வைக்க வேண்டும். பிறகு கொத்தமல்லி தழையை பொடியாக நறுக்கி வைக்க வேண்டும்.

பிறகு அடுப்பை பற்ற வைத்து, அதன் மீது ஒரு கடாயை வைக்க வேண்டும். பின்னர் கடாயில் 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்ற வேண்டும். எண்ணெய் நன்றாக காய்ந்ததும் இரண்டு ஸ்பூன் உளுத்தம் பருப்பை சேர்த்து பொன்னிறமாக வறுத்துக் கொள்ள வேண்டும். பிறகு நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை சேர்க்க வேண்டும்.

- Advertisement -

பின்னர் இதனுடன் உப்பு சேர்த்து பொன்னிறமாக வதக்கிக் கொள்ள வேண்டும். பிறகு நறுக்கிய தக்காளி மற்றும் வரமிளகாய் சேர்த்து அனைத்தையும் ஒன்றாக வதக்க வேண்டும். பிறகு வெட்டி வைத்துள்ள கொத்தமல்லி தழையும் சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ள வேண்டும். பிறகு இவை அனைத்தையும் ஆறவைத்து ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து சற்று கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவேண்டும்.

பிறகு இவை அனைத்தையும் ஒரு கிண்ணத்தில் மாற்றி கொள்ள வேண்டும். பின்னர் ஒரு தாளிப்பு கரண்டியை அடுப்பில் வைத்து, ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்ற வேண்டும். எண்ணெய் காய்ந்ததும் அதில் அரை ஸ்பூன் கடுகு, அரை ஸ்பூன் சீரகம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும். பிறகு இந்த தாளிப்பை சட்னியுடன் சேர்த்து கலந்து விடவேண்டும். தேவைப்பட்டால் இதனுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம். அவ்வளவுதான் சுவையான தக்காளி, கொத்தமல்லி சட்னி தயாராகிவிட்டது.

- Advertisement -