
தானத்தில் சிறந்தது அன்னதானம் என்று கூறுவார்கள். ஒருவர் பசியாற நீங்கள் ஒரு உணவு பொட்டலம் வாங்கி கொடுத்தால் கூட, உங்களுடைய புண்ணிய பலன்கள் பன்மடங்கு அதிகரிப்பதாக சாத்திரங்கள் குறிப்பிடுகிறது. அந்த வகையில் நீங்கள் கோவிலுக்கு கொடுக்கக்கூடிய பொருட்களால் உண்டாகக்கூடிய பலன்கள் என்னென்ன? என்று தெரிந்து கொள்வது ரொம்பவே நல்லது. கோவிலுக்கு நாம் தானமாக கொடுக்கக்கூடிய பொருட்களின் பலன்கள் என்னென்ன? என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.
முதலாவதாக கோவிலுக்கு நீங்கள் சாமிக்கு அணிவிக்கக்கூடிய நெற்றி பட்டையை தானமாக வாங்கி கொடுத்தால், உங்களுடைய பதவி எந்த வகையிலும் பறிக்கப்படாமல் நீண்ட காலம் தக்க வைத்துக் கொள்ளலாம். பதவி பறிபோவதை தடுக்கவும், பதவி நிலைத்து நிற்கவும் நெற்றி பட்டையை கோவிலுக்கு தானம் செய்யுங்கள். கோவிலுக்கு கண்மலர் வாங்கிக் கொடுப்பதை நாம் பார்த்திருப்போம். எந்த வகையான கண் நோய்களையும் தீர்க்கக்கூடிய ஒரு தானம் கண்மலர் தானம்.
கண் சார்ந்த பிரச்சனைகள், பார்வை பிரச்சனைகள் இருப்பவர்கள் வேண்டுதல் வைத்து கண் மலரை சாற்றி வழிபடுதல் நல்லது. அபிஷேகம் செய்யக்கூடிய கலசம் அல்லது கும்பம் நீங்கள் எந்த உலோகத்தில் வாங்கி கொடுத்தாலும், உங்களுடைய செல்வமானது பரிபூரணமாக நிறையும் என்று நம்பப்படுகிறது. கும்பம் மட்டுமல்லாமல் சுவாமிக்கு அணிவிக்க கூடிய கிரீடம், ஆபரணங்கள் போன்றவற்றை தானமாக வழங்கினாலும் உங்களுடைய செல்வங்கள் பெருகும். அடுத்தடுத்த சந்ததியினருக்கு சொத்துக்கள் சேரும் என்பது ஐதீகம்.
குடும்பத்தில் பிரச்சனைகளும், நிம்மதி இன்மையும் அதிகரிக்கும் பொழுது நீங்கள் கோவிலுக்கு நெய் அல்லது நல்லெண்ணையை தானமாக கொடுத்துப் பாருங்கள், விரைவாக பிரச்சனைகள் தீர்ந்து குடும்பத்தில் ஒற்றுமையும், மகிழ்ச்சியும் பெருக்கெடுக்கும். அவ்வளவு சக்தி வாய்ந்த ஒரு தானமாக இந்த தானம் கருதப்படுகிறது. விளக்கு தானம், குத்து விளக்கு தானம் செய்து கோவிலுக்கு அர்ப்பணித்தால் நீங்கள் எத்தகைய நோயிலிருந்தும் விடுபடலாம் என்கிறது சாஸ்திரங்கள் எனவே தீராத பிணிகள் தீர விளக்கு தானம் செய்யுங்கள்.
கோவில் கட்டுவதற்கும், கும்பாபிஷேகம் செய்வதற்கும், கோவில் கோபுரம் அமைப்பதற்கும் உங்களால் முடிந்த உதவிகளை செய்தால் விரைவாகவே சொந்த வீடு கட்டி குடியேறும் யோகம் உங்களுக்கு நிச்சயம் வந்து சேரும். மனம் உவந்து நீங்கள் கோவில் கோபுரம் கட்டுவதில் பங்கெடுத்து பாருங்கள், வாடகை வீட்டில் கஷ்டப்பட வேண்டிய அவசியமே இல்லை, உங்களுக்கென ஒரு வீடு நிச்சயம் அமைந்துவிடும். அந்த அளவிற்கு சக்தி வாய்ந்த ஒரு பரிகாரமாக இப்பரிகாரம் இருக்கும்.
கோவிலில் சுத்தம் செய்யக்கூடிய பொருட்கள் அல்லது நீங்கள் தண்ணீர் வரக்கூடிய பைப்புகள் அமைப்பது அல்லது டாங்குகள் பொருத்துவது போன்ற பணிகளை செய்து கொடுத்தால் குடும்பத்தில் செல்வ விருத்தி ஏற்படும், நகை சேரும். கோவிலில் சமைக்கப்படும் உணவுப் பொருட்கள், அரிசி, பருப்பு போன்றவற்றை தானமாக மாதம் தோறும் நீங்கள் உங்களால் முடிந்த அளவிற்கு உதவி செய்து வந்தால் அன்னபூரணியின் அருள் பரிபூரணமாக உங்களுக்கு மட்டுமல்லாமல் உங்களுடைய சந்ததியினருக்கு அடுத்தடுத்து வரும் காலங்களில் போய் சேரும் என்பது நம்பிக்கை. எந்த விதத்திலும் உங்களுக்கு வறுமை என்பதே ஏற்படாமல் பாதுகாக்க கூடிய ஒரு எளிய பரிகாரமாக இப்பரிகாரம் இருக்கும்.
தொழிலில் முன்னேறவும், வருமானம் விருத்தியாகவும், பொருளாதார ஏற்றம் காணவும் நீங்கள் அஸ்திர தானம் செய்யலாம். ஒவ்வொரு கடவுளருக்கும் ஒவ்வொரு விதமான அஸ்திரங்கள் உண்டு. இந்த அஸ்திரங்கள் எனப்படும் ஆயுதங்களை நீங்கள் உங்களால் முடிந்த உலோகங்களில் தானம் செய்தால் பயம் நீங்கி, பகை ஒழிந்து, வருமானம் ஊற்றெடுக்கும். மாதத்தில் ஒரு நாள் நீங்கள் அபிஷேகம் செய்வதில் பங்கெடுத்தால், மாதம் முழுவதும் நீங்கள் வழிபாடு செய்த பலன் உங்களை வந்தடையும் என்கிறது சாஸ்திரங்கள். எனவே அபிஷேகத்தில் பங்கு கொள்ளுங்கள். அது மட்டும் அல்லாமல் யாகங்கள் வளர்ப்பதிலும் நீங்கள் உதவி செய்தால் ஏழேழு பிறவிக்கும் நீங்கள் துன்பப்படாமல் இன்பத்தை அடையலாம்.