
நாம் எவ்வளவுதான் ரத்தம் சிந்தி உழைத்தாலும், நமக்கு அதிர்ஷ்டம் இல்லை என்றால் நம்மால் எதுவுமே சாதிக்க முடியாது. அதிர்ஷ்டம் என்பது வேறொன்றும் இல்லை, கடவுளின் ஆசீர்வாதத்தையே அதிர்ஷ்டம் என்கிறோம். இறையருள் இல்லாதவர்களால் எவ்வளவு முண்டியடித்துக் கொண்டு முன்னேற நினைத்தாலும், நினைத்தது நடக்காது. உழைத்த உழைப்பு வீணாய் போகாமல் அதிர்ஷ்டமாய் மாற செய்யக் கூடிய மூலை, குபேர மூலை! இங்கு என்ன வைக்க வேண்டும்? என்பதை தொடர்ந்து இந்த ஆன்மீகம் சார்ந்த பகுதியின் மூலம் அறிந்து கொள்வோம் வாருங்கள்.
ஒரு வீட்டில் எத்தனை திசைகள் இருந்தாலும் குபேர திசையை குறிப்பது தென்மேற்கு ஆகும். தென்மேற்கு திசையில் தான் ஒருவருக்கு அதிர்ஷ்ட காற்றும் வீசுகிறது. நமக்கும் அதிர்ஷ்டம் வர தென்மேற்கு திசையான குபேர மூலையில் எந்தெந்த மாதிரியான பொருட்களை வைக்க வேண்டும்? என்பதை தான் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.
வீட்டின் தென்மேற்கு திசையில் இருக்கக் கூடிய குபேர மூலையில் குபேரன் படத்தை வைத்து அல்லது குபேரனுடைய சிலையை வைத்து பிரதிஷ்டை செய்யுங்கள். பின்பு அந்த இடத்தில் மூன்று பானைகளை வைக்க வேண்டும். இந்த மூன்று பானைகளும் வறுமை இல்லாத வாழ்வை நமக்கு கொடுக்கக் கூடியது. திகட்டாத செல்வத்தையும், பணத்தையும் வாரி வழங்கக் கூடியது.
குபேர மூலையில் மூன்று மண்பானைகளை வைக்க வேண்டும். ஒவ்வொரு பானைகளையும் நன்கு கழுவி சுத்தம் செய்துவிட்டு மஞ்சள் அல்லது சந்தனத்தால் முழுவதுமாக தடவி உலர விடுங்கள். பின்பு முதல் பானையில் கல் உப்பை சேர்த்துக் கொள்ளுங்கள். சிறு சிறு பானைகளாக தேர்ந்தெடுத்து வாங்கிக் கொள்வது நல்லது. முதல் பானையில் உப்பு போட்டதும், அடுத்த பானையில் துவரம் பருப்பை சேர்த்துக் கொள்ள வேண்டும். அதற்கு அடுத்த மூன்றாவது பானையில் ஒரு ரூபாய் மற்றும் ஐந்து ரூபாய் நாணயங்களை போட்டு நிரப்ப வேண்டும்.
மூன்று பானைகளும் நிரம்ப பொருட்களை போட்டதும் மஞ்சள், குங்குமம் பானைக்கு வைத்து பொருட்களின் மீது, பானையின் வாய் பகுதியில் மலர் ஒன்றை வைத்து ஒவ்வொன்றாக அடுக்கி வைக்க வேண்டும். ஒவ்வொரு பானையின் மீதும் இன்னொரு பானையை வைத்து அடுக்க வேண்டும். முதலில் கல் உப்பு இருக்கும் பானையையும், அடுத்து துவரம் பருப்பு இருக்கும் பானையையும், அதற்கு அடுத்து மேற்பகுதியில் நாணயங்கள் உள்ள பானையையும் அடுக்க வேண்டும். இதை அப்படியே கீழே விழாதபடி குபேர மூலையில் குபேரன் படத்திற்கு அருகில் வைத்து விடுங்கள்.
இதையும் படிக்கலாமே:
21-11-2024 கார்த்திகை மாத தேய்பிறை சஷ்டி விரதம்
ஒவ்வொரு வியாழன் அன்றும் இந்த குபேர மூலையில் குபேர விளக்கில் நெய் அல்லது நல்லெண்ணெய் ஊற்றி, வெண் பஞ்சு திரியிட்டு தீபம் ஏற்றி வர வேண்டும். இப்படி தொடர்ந்து செய்து வரும் பொழுது குபேரனுடைய அருளால் உங்களுடைய உழைப்பு வீணாகாமல் அப்படியே உங்களுக்கு அதிர்ஷ்டமாக மாறும். நீங்கள் நினைத்தது நடக்கும். உங்கள் தேவைக்கு ஏற்ப வருமானத்தை நீங்களே சம்பாதிக்க தொடங்குவீர்கள். குபேரன் எல்லா வகையான நிதிகளுக்கும் அதிபதியாக இருக்கிறவர். இவரை இப்படி வழிபடும் பொழுது, குறைவில்லாத செல்வமும், அதிர்ஷ்டமும் நம்மை தேடி வரும் என்பது ஐதீகம். நம்பிக்கையுடன் உழைத்து முயல்பவர்களுக்கு என்றும் குபேரன் அருள் புரிவது நிச்சயம்.