
மீதமான சாதத்தை வைத்து சூப்பரான ஒரு தோசை மாவு எப்படி அரைப்பது என்பதைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். சில பேர் மீதமான சாதத்தை, மாவில் போட்டு அரைத்து ஆப்பம் செய்வார்கள். ஆனால் இந்த ஆப்ப மாவு அரைப்பதற்கு பச்சரிசி பயன்படுத்துவார்கள். நாம் இட்லி அரிசியை வைத்து, மீதமான சாதத்தை சேர்த்து, தோசை மாவு அரைத்து சூப்பர் தோசை செய்ய போகின்றோம். வாங்க நேரத்தைக் கடத்தாமல் சூப்பரான தோசைமாவு ரெசிபியை தெரிந்துகொள்வோம்.
இதற்கு தேவையான பொருட்கள். இட்லி அரிசி – 3 கப், உளுந்து – 1/4 கப், வெந்தயம் – 1/2 ஸ்பூன், வடித்த சாதம் 1 1/2 கப். இட்லி அரிசியை எந்த கப்பில் அளந்து எடுத்தீர்களோ மற்ற பொருட்களையும் அதே கப்பில் அளந்து எடுத்துக் கொண்டால் சரியாக இருக்கும்.
ஒரு பெரிய பாத்திரத்தில் இட்லி அரிசி, உளுந்து, வெந்தயம் இந்த 3 பொருட்களையும் சேர்த்து மூன்றிலிருந்து நான்கு முறை நன்றாகக் கழுவி விட்டு, நல்ல தண்ணீரை ஊற்றி 4 மணி நேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். நன்றாக ஊறிய அரிசி பருப்பை அப்படியே ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி விழுது போல நைசாக அரைத்துக் கொள்ளுங்கள். அதாவது 90% இந்த தோசை மாவு அரைந்தால் போதும். இந்த மாவை ஒரு பெரிய பாத்திரத்திற்கு மாற்றிக் கொள்ள வேண்டும்.
அதன் பின்பு வடித்த சாதத்தை எடுத்து மிக்ஸியில் போட்டு கொஞ்சம் தண்ணீர் ஊற்றி இதையும் விழுது போல அரைத்து கொள்ள வேண்டும். இப்போது அரைத்த இந்த சாப்பாட்டு விழுதையும், பெரிய பாத்திரத்தில் இருக்கும் அரிசி உளுந்து மாவோடு சேர்த்து உங்கள் கையை வைத்து நன்றாக கரைத்து விடுங்கள். அவ்வளவு தான். ஒரு மூடியைப் போட்டு, மாவை மூடி 8 மணி நேரம் புளிக்க வைக்க வேண்டும்.
மாவு 8 மணி நேரம் கழித்து புசுபுசுவென பொங்கி வந்திருக்கும். மாவுக்கு தேவையான அளவு உப்பை போட்டு கரண்டியை வைத்து இந்த மாவை நன்றாக கலந்துவிட்டு தோசைக்கல்லில் மெல்லிசாக தோசையாக வார்த்து சாப்பிட்டுப்பாருங்கள். நாம் எப்போதும் சாப்பிடும் தோசை போல இல்லாமல் இந்த தோசை சாப்டாக லேசான மொறுமொறுப்பு தன்மையுடன் சாப்பிடுவதற்கு அத்தனை ருசியாக இருக்கும்.
இந்த தோசைக்கு தொட்டுக்கொள்ள பர்ஃபெக்ட்டான ஒரு சைட்டிஷ் பார்க்கலாமா. அடுப்பில் ஒரு கடாயை வைத்து 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்ததும் கடலைப் பருப்பு – 1 டேபிள் ஸ்பூன், மிளகாய் – 2 சேர்த்து பொன்நிறம் வரும் வரை வறுக்க வேண்டும். அதன் பின்பு 1 பெரிய வெங்காயத்தை வெட்டிப்போட்டு வெங்காயத்தை நன்றாக வதக்கி, அதன் பின்பு பொடியாக நறுக்கிய 1 தக்காளி பழத்தை போட்டு, தக்காளி பழம் வேகும் வரை வதக்கி அடுப்பை அணைத்துவிடுங்கள்.
இந்த விழுது நன்றாக ஆறிய பின்பு அப்படியே ஒரு மிக்ஸி ஜாரில் மாற்றி, தோல் உரித்த பூண்டு பல் 1, சிறிய துண்டு புளி, தேவையான அளவு உப்பு, 1/4 கப் அளவு தண்ணீர் ஊற்றி இந்த சட்னியை அப்படியே நைசாக அரைத்து ஒரு சிறிய பௌலில் மாற்றி, 2 ஸ்பூன் நல்லெண்ணெயில் கடுகு கருவேப்பிலை தாளித்து போட்டு இந்த தோசைக்கு தொட்டு சாப்பிட்டால் அத்தனை அருமையாக இருக்கும்.