
இன்று தீபாவளி பண்டிகை திருநாள். காலையில் அனைவரும் எண்ணெய் தேய்த்து கங்கா ஸ்நானம் செய்துவிட்டு, பட்டாசு வெடித்து, புத்தாடை அணிந்து உங்களுடைய தீபாவளி பண்டிகையை சிறப்பாக கொண்டாடி இருப்பீர்கள். இதைத்தொடர்ந்து இந்த நாளில் நாம் மிக மிக முக்கியமாக செய்ய வேண்டிய பூஜை மகாலட்சுமி பூஜை.
இன்றைய தினம் மகாலட்சுமி பூஜை செய்தால், இந்த வருடம் முழுவதும் நமக்கு பணத்திற்கு பஞ்சம் வராது என்பது நம்முடைய சாஸ்திரம் சொல்லி வைத்திருக்கும் நம்பிக்கை. இதன் அடிப்படையில் இன்று மாலை மிக மிக எளிமையான முறையில் நாம் செய்ய வேண்டிய மகாலட்சுமி பூஜையை பற்றியும், நாம் சொல்ல வேண்டிய 11 மகாலட்சுமி நாமத்தையும் தான் இன்றைய ஆன்மீகம் சார்ந்த பதிவு மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.
இன்று மாலை பூஜை அறையில் கட்டாயம் வைத்து வழிபட வேண்டிய பொருள் வெட்டிவேர். மகாலட்சுமிக்கு பிடித்த பொருட்களின் பட்டியல் ஏராளம். மருதாணி இலை, மருதாணி பூ, தாமரைப்பூ, வெள்ளி நாணயங்கள், இப்படி நிறைய பொருட்களை வைத்து நம் மகாலட்சுமி தாயை வழிபாடு செய்தாலும், இன்று சிறிதளவு வெட்டிவேர் வாங்கி வந்து அதை ஒரு டம்ளர் தண்ணீரில் போட்டு மகாலட்சுமியின் முன்பு வைத்து, சாதாரணமாக வெள்ளிக்கிழமை பூஜை போலவே உங்கள் வீட்டில் மகாலட்சுமிக்கு பூஜை செய்யலாம்.
கொஞ்சம் உதிரி புஷ்பங்களை எடுத்து, மகாலட்சுமியின் மீது கொஞ்சம் கொஞ்சமாக போடுங்கள். அப்படி போடும்போது பின் சொல்லக்கூடிய இந்த மகாலட்சுமியின் நாமங்களை சொல்லி அர்ச்சனை செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
மகாலட்சுமியின் முன்பு ஒரு கண்ணாடி டம்ளரில் சுத்தமான தண்ணீரை நிரப்பி அதில் இந்த வெட்டிவேரை போட்டு வையுங்கள். அது 3 நாட்களுக்கு அப்படியே இருக்கட்டும். தண்ணீர் தூசி ஆகிவிட்டால் தண்ணீரை மட்டும் மாற்றிக் கொள்ளலாம். வெட்டிவேர் வாடி போகாது. கெட்டுப் போகாது. வெட்டிவேர் லேசாக நிறம் மாறி வரும்போது வெட்டிவேரையும் உங்கள் வீட்டு தோட்டத்திலேயே செடி கொடிகளுக்கு அடியில் போட்டு விடவும்.
தீபாவளி அன்று மாலை மகாலட்சுமிக்கு மிகவும் பிடித்த வாசம் நிறைந்த இந்த வெட்டிவேரை, பூஜை அறையில் வைத்தால் நமக்கு மகாலட்சுமி வசியம் ஏற்படும் என்பது நம்பிக்கையாக சொல்லப்பட்டுள்ளது. உங்களுக்கும் நம்பிக்கை இருந்தால் எளிமையான இந்த வழிபாட்டு முறைகளை பின்பற்றுங்கள். பூக்களை தூவி மந்திரத்தை சொல்லி வழிபாடு நிறைவு செய்துவிட்டு, தீப தூப ஆராதனைகளை காண்பித்து வழிபாட்டை நிறைவு செய்து கொள்ளவும்.
மகாலட்சுமிக்கு கட்டாயம் நாளைய தினம் வெள்ளை நிறத்தில் இருக்கக்கூடிய இனிப்பு நெய்வேதியம் வைப்பது சிறப்பு. குறிப்பாக பசும்பாலில் செய்த பாயாசத்தில், குங்குமப்பூ, நெய், ஏலக்காய் முந்திரி பருப்பு சேர்த்து வைப்பது சிறப்பான பலனை தரும் என்பதும் குறிப்பிடத்தக்க ஒரு விஷயம். இன்றைய தினம் நீங்கள் சொல்ல வேண்டிய மகாலட்சுமி மந்திரம் இதோ உங்களுக்காக.
ஓம் லட்சுமியை நமஹ
ஓம் வரதாயை நமஹ
ஓம் விஷ்ணு பத்தினியை நமஹ
ஓம் வசுப்பிரதாயை நமஹ
ஓம் ஹரிண்யரூபாயை நமஹ
ஓம் ஸ்வர்ணமாலினியை நமஹ
ஓம் ரஜதஸ்ரஜாயை நமஹ
ஓம் ஸ்வர்ண பிரியாயை நமஹ
ஓம் தனதாயை நமஹ
ஓம் ஸ்ரீயை நமஹ
ஓம் விதாத்திரியை நமஹ
இதையும் படிக்கலாமே: பிடித்த வேலை கிடைக்க எளிய பரிகாரம்
மகாலட்சுமி நாமங்கள் 32 இருக்கிறது. இருந்தாலும் இந்த 11 நாமத்தை உச்சரித்து இன்று நாம் பூஜையை நிறைவு செய்து கொண்டோமேயானால் போதும். மகாலட்சுமி அருட்கடாட்சம் உங்களுக்கு பரிபூரணமாக கிடைக்கும் என்ற இந்த தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.