
மிளகாய் செடியை பொருத்த வரையில் வளர்ப்பது கொஞ்சம் சிரமமான காரியம் தான். இந்தச் செடியில் நோய் தாக்குதல், பூச்சி தாக்குதல் போன்றவை அதிக அளவில் இருக்கும். இந்த வீட்டுத் தோட்டம் குறித்த பதிவில் உள்ள குறிப்புகள் கண்டிப்பாக உங்களுக்கு உதவியாக இருக்கும். இந்த குறிப்புகளை தெரிந்து கொண்டால், நல்ல முறையில் செடியை வளர்ந்து அதிக விளைச்சலை பார்க்க முடியும். வாங்க அது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம்.
மிளகாய் செடியை பொறுத்த வரையில் பயிரிடும் காலம் மிகவும் முக்கியம். அதிகமான வெப்பம் இருக்கும் காலத்தில் இதை பயிரிட்டால் செடிகள் தழைத்து வளராது. எனவே ஜூன் மாதத்திற்கு பிறகு டிசம்பர் மாதம் வரையிலான காலத்தில் இதை பயிரிட்டால் சரியாக இருக்கும்.
அடுத்து இந்த செடியை நடவு செய்வதற்கு முன்பு விதையை, விதை நேர்த்தி செய்து நட வேண்டும். அதாவது விதையை ஏதேனும் ஒரு உரத்தில் அரைமணி நேரம் வரை ஊற வைத்து அதன் பிறகு வெயிலில் காய வைத்த பிறகு நட வேண்டும் இதற்கு பஞ்ச காவியா, மீன் அமிலம் போன்ற உரங்களை பயன்படுத்தினால் நல்லது.
அடுத்து விதைகள் நடும் போது அதிக இடைவெளி விட்டு நட வேண்டும். ஏனென்றால் இந்த செடிக்கு காற்றோட்டம் மிகவும் முக்கியம். காற்றோட்டம் குறைவாக இருந்தாலும், செடிகளை நெருக்கமாக நட்டாலும் கண்டிப்பாக இலை அழுகல், பூச்சி தாக்குதல் வந்து செடியின் வளர்ச்சி பாதித்து விடும்.
இதற்கு அடி உரமாக மண் புழு உரம், கிச்சன் கழிவுகளை மட்டும் சேர்த்தால் கூட போதும். வாரத்திற்கு ஒரு முறை புளித்த மோரை ஊற்றி வந்தாலும் சரி அல்லது தேமோர் கரைச்சலை தெளித்து வந்தாலும் சரி, அதுவே இந்த செடி செழித்து வளர உதவி செய்யும்.
இவற்றுடன் கடலை புண்ணாக்கு கிடைத்தால் அதையும் நன்றாக கரைத்து திப்பி இல்லாமல் வடிகட்டி அதை செடிகளுக்கு உரமாக கொடுத்து வந்தாலும் அதிக அளவில் காய்கள் காய்க்கும்.
இதையும் படிக்கலாமே: இனி வரும் வெயில் காலத்தில் உங்கள் செம்பருத்தி செடி தாறுமாறாக பூக்க, இப்பவே இத கொடுத்துடுங்க அப்புறம் பாருங்க செடியே தெரியாத அளவுக்கு பூக்கள் பூத்துக் குலுங்கும்.
இந்த முறையில் மிளகாய் செடியை பயிரிட்டு வளர்த்தால் நீங்கள் எதிர்பார்க்காத அளவிற்கு செடி முழுவதும் கவலையாகவே காய்த்து தொங்கும்.