- Advertisement -
சமையல் குறிப்புகள்

பிள்ளையார்பட்டி ஸ்பெஷல் மென்மையான மோதகம் சுலபமாக செய்வது எப்படி? இனி மோதகம் செய்ய கஷ்டப்பட்டு மாவு கிளற வேண்டும் என்ற அவசியமே கிடையாது.

- Advertisement -

ஒரு சில நாட்களில் விநாயகர் சதுர்த்தி வரப்போகின்றது. விநாயகருக்கு பிடித்த மோதகம் எப்படி செய்வது என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். நேரடியா ரெசிபிக்கு போயிரலாம் வாங்க. முதலில் மோதகம் செய்வதற்கு தேவையான பொருட்கள் என்னென்ன என்பதை பார்த்துவிடுவோம்.

மாவு பச்சரிசி – 1 கப், பாசிப்பருப்பு – 1/4 கப், வெல்லம் – 1 கப், தேங்காய் துருவல்- 1/2 கப், தண்ணீர் – 3 1/2 கப், ஏலக்காய் பொடி – 2 சிட்டிகை, எந்த கப்பில் அரிசியை அளந்து எடுத்துக் கொள்கிறீர்களோ அதே கப்பில் மற்ற பொருட்களையும் அளந்து எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.

- Advertisement -

முதலில் பச்சரிசியை தண்ணீரில் போட்டு நன்றாக கழுவிக்கொள்ள வேண்டும். கழுவி தயாராக இருக்கும் பச்சரிசியில் நல்ல தண்ணீரை ஊற்றி, 30 நிமிடம் அரிசியை நன்றாக ஊறவைத்து விடுங்கள். அரிசி நன்றாக ஊறியதும் தண்ணீரை முழுமையாக வடித்துவிட்டு, இந்த அரிசியை ஒரு துணி மேலே பரப்பி ஃபேன் காற்றிலேயே நன்றாக ஆறவைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

ஆறிய பச்சரிசியை மிக்ஸியில் போட்டு ரவை போல் அரைத்துக் கொள்ள வேண்டும். சிறிய ரவை பதத்திற்கு பச்சரிசியை அரைத்து இந்த மாவை ஒரு கடாயில் போட்டு அடுப்பில் வைத்து, ஒரு நிமிடம் போல வறுத்துக் கொள்ள வேண்டும். இப்போது நமக்கு மோதகம் செய்வதற்கு அரிசி மாவு தயார். இந்த மாவு அப்படியே இருக்கட்டும்.

- Advertisement -

அடுத்தபடியாக பாசிப்பருப்பை கடாயில் போட்டு நன்றாக வறுத்து, பாசிப்பருப்பையும் 20 நிமிடங்கள் தண்ணீரில் போட்டு ஊற வைத்துவிடுங்கள். இதுவும் அப்படியே இருக்கட்டும்.

அடுத்தபடியாக ஒரு குக்கரை எடுத்து அடுப்பில் வைத்து விடுங்கள். அதில் 3 1/2 கப் அளவு தண்ணீரை ஊற்றி நன்றாக கொதிக்கவிடுங்கள். தண்ணீர் நன்றாக சூடானதும், ஊற வைத்திருக்கும் பாசிப்பருப்பையும், அரைத்து வைத்திருக்கும் பச்சரிசி மாவையும் சுடுதண்ணீரில் போட்டு, ஒருமுறை பாசிப்பருப்பையும் அரிசி மாவையும் நன்றாக கலந்து விட்டு குக்கரை மூடி விசில் போட்டு அடுப்பை மிதமான தீயில் வைத்து, ஒரு விசில் மட்டும் வையுங்கள் போதும். குக்கர் விசில் வரட்டும். இதற்குள் வெல்லக் கரைசலை தயார் செய்து கொள்வோம்.

- Advertisement -

அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் தயாராக எடுத்து வைத்திருக்கும் வெல்லத்தை போட்டு, 1/4 கப் தண்ணீர் ஊற்றி வெல்லத்தை நன்றாக கரைத்து தூசி இல்லாமல் வடிகட்டி தயாராக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

இதற்குள் அடுப்பில் குக்கர் விசில் வந்து, பிரஷர் அடங்கியிருக்கும். குக்கரை திறந்து வெந்து வந்திருக்கும் மாவை நன்றாக ஒரு கரண்டியை வைத்து கட்டியில்லாமல் கலந்து விட்டு, தயாராக எடுத்து வைத்திருக்கும் வெல்லக் கரைசலை இந்த மாவில் ஊற்றி, தயாராக துருவி வைத்திருக்கும் தேங்காய் துருவலையும் ஏலக்காய் பொடியையும் இந்த மாவில் சேர்த்து, இந்த குக்கரை அப்படியே மீண்டும் அடுப்பில் வைத்து 5 நிமிடங்கள், மாவை நன்றாக கலந்து கொடுக்க வேண்டும். இப்படி செய்தால் மாவும் வெல்லமும் தேங்காய் அனைத்தும் சேர்த்து கலந்து, நன்றாக இறுகி மோதகம் பிடிக்கும் பக்குவத்திற்கு மாவு கெட்டியாக வந்துவிடும். (ஐந்து நிமிடங்கள் அடுப்பில் மாவை வைத்து வெல்லக் கரைசலை சேர்த்து கலந்து விட்டால் போதும்).

அடுப்பை அணைத்து விடுங்கள். குக்கரில் மோதகம் செய்ய தயாராக இருக்கும் இந்த மாவு கை பொறுக்கும் சூடு வரும் வரை காத்திருங்கள். கையில் நெய் அல்லது எண்ணெயை தடவி இந்த மாவிலிருந்து சிறிய சிறிய உருண்டைகளாக எடுத்து, மோதகம் வடிவிலோ கொழுக்கட்டை வடிவிலோ உங்கள் இஷ்டம் போல பிடித்து இட்லி பானையில் ஆவியில் ஐந்திலிருந்து ஏழு நிமிடங்கள் வேக வைத்து எடுத்தால் போதும். சுவையான மெதுவான மோதகம் தயார். இந்த விநாயகர் சதுர்த்திக்கு விநாயகருக்கு பிடித்த இந்த ரெசிபியை ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -