- Advertisement -

திடீரென நம் முன்னோர்கள் கனவில் வந்தால் என்ன சொல்ல வருகிறார்கள்? முன்னோர்கள் கனவில் வருவது பித்ரு தோஷமா? அல்லது நல்ல சகுணமா?

நம் குடும்பத்தில் இறந்து போனவர்களை முன்னோர்கள் என்று கூறுகிறோம். நமக்கு முன் வாழ்ந்தவர்கள் என்பதால் இப்படி கூறப்படுகிறது. தாய் தந்தையர் முதல் மூதாதையர்கள் வரை நம்முடைய பித்ருக்கள் அனைவரையும் நாம் மனதார பிரார்த்தித்துக் கொண்டால் நிச்சயம் நமக்கு வரும் துன்பங்கள் எல்லாம் நீங்கும். அனைத்து தெய்வங்களுக்கும் முன்னால் நமக்கு உதவி செய்ய ஓடோடி வருவது குலதெய்வம்! குல தெய்வத்திற்கும் முன்னால் நமக்கு வந்து உதவி செய்வது நம் முன்னோர்கள் தான் என்கிறது சாஸ்திரம். இத்தகைய நம் முன்னோர்கள் கனவில் வருவதால் அவர்களுக்கு ஏதாவது குறை வைத்திருப்போமோ? என்கிற அச்சம் எல்லோருக்கும் இருக்கும். ஏன் நம் முன்னோர்கள் திடீரென கனவில் தோன்றுகிறார்கள்? அவர்கள் நமக்கு என்ன கூற வருகிறார்கள்? என்பதைத்தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம், வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

நம்முடன் இருந்த நம் தாய், தந்தையர், சகோதர, சகோதரிகள் அல்லது உறவினர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் திடீரென இறக்க நேர்ந்தால் அந்த நினைவுகளின் தாக்கம் சிறிது காலம் வரை நமக்குள் இருந்து செல்வதில்லை. அந்தக் குறிப்பிட்ட காலத்தில் அவர்கள் அடிக்கடி நம் கனவில் வருவது இயல்பான ஒரு விஷயம் தான். இது ஆழ் மனதில் அவர்களை பற்றிய நினைவுகள் மற்றும் அவர்கள் நம்மீது கொண்டுள்ள பிரியம் காரணமாக இது போல் அவர்கள் கனவில் அடிக்கடி தோன்றுவார்கள். ஆனால் நாளடைவில் அவர்கள் நம் கனவில் வருவதை நிறுத்தி விடுகிறார்கள்.

- Advertisement -

ஒரு வருடம், இரண்டு வருடம் நினைவில் இருக்கும் அந்த உறவுகளின் நினைவுகள் காலப்போக்கில் மெல்ல மெல்ல மறைய ஆரம்பிக்கிறது. இப்படி மறைந்த நம் முன்னோர்களுக்கு அமாவாசை திதிகளில் தர்ப்பணம் கொடுப்பது வழக்கம். அமாவாசை, மகாளய பட்சம், அவர்கள் இறந்த திதி என்று ஒவ்வொரு பித்ரு வழிபாடுகளையும் முறையாக செய்து வருகிறோம். இப்படி செய்ய முடியாதவர்கள் பெரிய அமாவாசைகளில் தர்ப்பணம் கொடுத்து அவர்களின் ஆசியை பெற்றுக் கொள்கிறார்கள். இப்படி அவர்களுக்கு எள்ளும், தண்ணீரும் இறைத்து தர்பணம் கொடுப்பதன் மூலம் அவர்கள் ஆன்மா பசியாறுகிறது என்பது நம்முடைய சாஸ்திர நம்பிக்கையாக இருந்து வருகிறது.

இறந்து போனவர்கள், தான் பசியாக இருப்பதை உணர்த்த திடீரென நம் கனவில் தோன்றுவார்கள் என்பதும் உண்மையாகும். இதுவரை நாம் கனவில் வராதவர்கள் திடீரென தோன்றினால் அவர்கள் பசியுடன் இருக்கிறார்கள் என்பதும் கூட காரணமாக இருக்கிறது. பசியுடன் இருக்கும் நம் முன்னோர்களுக்கு அப்போது பசு மாட்டிற்கு தானம் கொடுப்பதன் மூலம் அந்தப் பசியை தீர்த்து வைக்கலாம். பசு மாட்டிற்கு அகத்திக்கீரை, வாழைப்பழம், பச்சரிசியுடன் கலந்த வெல்லம் போன்றவற்றை தானம் கொடுத்தால் அவர்கள் கனவில் வர மாட்டார்கள்.

- Advertisement -

அதே போல உங்கள் வீட்டில் திருமணம் ஆகாத பெண்கள் அல்லது ஆண் பிள்ளைகள் இருந்தால் அவர்களுக்கு ஏன் இன்னும் திருமணம் செய்து வைக்கவில்லை? என்று நமக்கு நினைவு படுத்துவதற்கு கூட இவ்வாறு திடீரென நம் முன்னோர்கள் கனவில் தோன்றுவார்கள். குடும்பத்தில் சுபகாரியம் நடக்க வேண்டிய பொழுது இது போல் திடீரென நம் முன்னோர்கள் கனவில் தோன்றுவார்கள். எனவே நாம் என்ன செய்ய வேண்டும்? என்பதை சிந்தித்து அந்த நேரத்தில் சுபகாரிய முயற்சிகள் மேற்கொள்வது உசிதமானது.

முன்னோர்கள் கனவில் தோன்றினால் உடனே பித்ரு தோஷமாக இருக்குமோ? என்கிற அச்சம் இனி தேவையில்லை. பித்ருக்களுக்கு சரியான வகையில் நாம் தர்ப்பணம் கொடுக்காவிட்டால் அவர்கள் சாபம் கொடுத்து விடுவார்கள் என்பதெல்லாம் உண்மை அல்ல. நம் நலன் காப்பவர்கள் அவர்கள், அவர்களால் எந்த விதமான தீங்கும் நமக்கு எப்பொழுதும் நேராது. எனவே பித்ருக்கள் கனவில் தோன்றினால் நல்ல சகுணம் ஆகவும் இருக்கலாம் என்பதை கருத்தில் கொண்டு செயல்படுவது உத்தம்.

- Advertisement -