
ஆடி மாதத்தில் வரும் சதுர்த்தி திதி நாக சதுர்த்தி என்றும் அதன் பிறகு வரும் பஞ்சமி திதி கருட பஞ்சமி என்றும் விசேஷமாக பக்தர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. அன்றைய நாளில் நாகருக்கு விசேஷமான பூஜைகளும், புனஸ்காரங்களும் செய்வது வழக்கம். பிரிந்த கணவன் மனைவி ஒன்று சேரவும், நீண்ட நாள் தடைபட்டு கொண்டிருக்கும் புத்திர பேறு பெறவும், குடும்பத்தில் இருக்கும் குழப்பங்கள் நீங்கவும், நாக தோஷம், கால சர்ப்ப தோஷம் ஆகிய தோஷங்கள் விலகவும் இந்த பூஜை முறையை தவறாமல் கடைப்பிடிப்பார்கள். நாக சதுர்த்தி மற்றும் கருட பஞ்சமியை எப்படி நம் வீட்டிலேயே எளிமையாக கொண்டாடுவது? இதனால் கிடைக்கும் பலன்கள் என்னென்ன? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணிப்போம்.
நாக சதுர்த்தி என்பது பாம்பு கடித்து இறந்தவரை கூட உயிர் பிழைக்க செய்யக்கூடிய அற்புதமான பலன்களை தரக்கூடிய விரத முறையாகும். கருடனை நோக்கி இவ்விரதம் இருந்து உயிர் பிச்சை கேட்க இறந்தவர் மீண்டு எழுந்து விடுவார் என்பது நம்பிக்கை. ஆயுள் குறைவாக உள்ளவர்கள், நாக தோஷத்தால் அவதிப்படுபவர்கள், சர்ப்ப தோஷத்தால் திருமணத்தடை உள்ளவர்கள் ஆகியோர் செய்ய வேண்டிய அற்புதமான எளிய பரிகார முறை தான் இந்த நாக சதுர்த்தி மற்றும் கருட பஞ்சமி விரத முறையாகும்.
ஒரு டம்ளர் பால் வைத்து நாகருக்கு வழிபாடு செய்ய தலைமுறை தலைமுறையாக இருக்கும் பாவங்கள் கூட நீங்குவதாக ஐதீகம் உண்டு. எனவே நாக சதுர்த்தி நாளாகிய நாளை வியாழக்கிழமை அன்று அதிகாலையிலேயே எழுந்து குளித்து முடித்து வீட்டில் நாகர் படம் வைத்திருந்தால் அதற்கு புஷ்பத்தால் அலங்காரம் செய்து கொஞ்சம் மஞ்சள் மற்றும் காய்ச்சாத பால் வைத்து தோஷங்கள் நீங்க மனதார பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும். கீழே கொடுக்கப்பட்டுள்ள நாகர் மந்திரத்தை மூன்று முறை உச்சரிக்க ராகு-கேது தோஷம், நாகதோஷம், காலசர்ப்ப தோஷம், சர்ப்ப தோஷம் ஆகிய எவ்வகையான தோஷங்களும் நீங்கும் என்பது நம்பிக்கை. இந்த தோஷங்கள் கொண்டுள்ளோர் சுப காரிய தடைகளை தொடர்ந்து சந்தித்துக் கொண்டே வருவார்கள். எனவே இத்தகைய தடைகள் நீங்க எளிமையாக நாகர் கோவிலுக்கு சென்று அங்குள்ள புற்றுக்கு பால் ஊற்றி விளக்கை ஏற்றி பிரார்த்தனை செய்து வழிபட்டு வரலாம்.
நாகர் மந்திரம்:
ஓம் அனந்தம் வாஸுகிம்
சேட்சம் பத்மநாபம்
ஸகம்பலம் ஸங்கபாலம்
த்ருதராஷ்டிரம்: தட்சகம்
காளியம்ததா: ஏதானி நவ
நாமானி சமகாத்மனாம்
சாயங்காலே படேநித்யம்
ப்ராதாகாரல விசேஷதக
நஸ்யவிஷ பயம் நாஸ்தி
ஸர்வத்ர விஜயூபவேத்
மறு நாள் கருட பஞ்சமி அன்று கருடனை நோக்கி விரதமிருக்க காலையில் எழுந்து நீராடி வீட்டில் கருடனுடன் கூடிய மகாவிஷ்ணு படம் வைத்திருந்தால் அவற்றை வைத்து துளசி தீர்த்தம், காய்ச்சாத பசும்பால் மற்றும் எலுமிச்சை சாதம் ஆகிய நைவேத்தியங்களை படைத்து கீழ்வரும் கருட மந்திரத்தை 27 முறை உச்சரித்தால் போதும்! சகல, சவுபாக்கியங்களையும் பெறலாம். பிரிந்த தம்பதிகள் ஒன்று இணைவார்கள். மேலும் குடும்பத்தில் இருக்கும் சண்டை, சச்சரவுகள் அனைத்தும் நீங்கும். பகைவர் தொல்லை ஒழியும், எமபயம் நீங்கும், வருமானம் உயரும், புத்திர பேறு உண்டாகும்.
கருட காயத்திரி மந்திரம்:
ஓம் தத்புருஷாய வித்மஹே
ஸூவர்ண பட்சாய தீமஹி
தன்னோ கருடஹ் ப்ரசோதயாத்!