- Advertisement -
சமையல் குறிப்புகள்

செய்யும் போதே நாக்கில் எச்சில் ஊற வைக்கும் நல்லாம்பட்டி நாட்டுக்கோழி வறுவல். இதை செய்த கைக்கு நிச்சயம் தங்க வளையல் உண்டுங்க.

- Advertisement -

ருசியாக சமயத்து கொடுத்தால் நிஜமாக தங்கவளை வாங்கி தருவார்களோ இல்லையோ. வீட்டில் இருக்கும் ஆண்கள் இதை சமைத்த கைக்கு பொன் வளையல் போட்டே ஆக வேண்டும் என்று சொல்லுவார்கள் அல்லவா‌. அந்த ஒரு வார்த்தை பெண்களுக்கு மன மகிழ்ச்சியை கொடுக்கும்‌. அப்படிப்பட்ட பாராட்டை கொடுக்கக் கூடிய ஒரு ரெசிபியை தான் இன்று தெரிந்து கொள்ளப் போகின்றோம். ஈரோடு பக்கம் பிரபல்யமாக இருக்கும் நல்லாம்பட்டி நாட்டுக்கோழி வறுவல் எப்படி செய்வது. தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

முதலில் அடுப்பில் ஒரு கடாயை வைத்துக் கொள்ளுங்கள். அதில் வரமல்லி – 2 ஸ்பூன், சீரகம் – 1 ஸ்பூன், மிளகு – 1/2 ஸ்பூன், பட்டை – 2 துண்டு, கிராம்பு – 2, சோம்பு – 1/2 ஸ்பூன், கருவேப்பிலை – 1 கொத்து, இந்த பொருட்களை எல்லாம் போட்டு எண்ணெய் ஊற்றாமல் மணக்க மணக்க வறுத்து இதை அப்படியே ஒரு தட்டில் கொட்டி ஆற வைத்து மிக்ஸி ஜாரில் போட்டு நைஸாக அரைத்து வைத்துக் கொள்ளுங்கள். இந்த மசாலா பொடி அப்படியே இருக்கட்டும்.

- Advertisement -

10 வரமிளகாய்களை எடுத்து காம்பை கிள்ளிவிட்டு, சிறிய சிறிய துண்டுகளாக உடைத்து விதையை மட்டும் தனியாக நீக்கி வைத்துக் கொள்ளுங்கள். விதை நமக்கு தேவைபடாது. வெறும் உடைத்த சின்ன சின்ன மிளகாய்கள் தான் நமக்கு தேவைப்படும். இதுவும் அப்படியே இருக்கட்டும்.

1 கிலோ நாட்டுக்கோழியை வாங்கி சுத்தம் செய்து கழுவி தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இதுவும் அப்படியே இருக்கட்டும். 250 கிராம் அளவு சின்ன வெங்காயத்தை தோலுரித்து பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள். இதுவும் அப்படியே இருக்கட்டும். இப்போது நாட்டுக் கோழி வறுவலை செய்ய தொடங்கலாம்.

- Advertisement -

அடுப்பில் ஒரு கடாயை வைத்துக்கொள்ள வேண்டும். அதில் நல்லெண்ணெய் – 4 ஸ்பூன் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் உடைத்து வைத்திருக்கும் வர மிளகாய் – 10, கருவேப்பிலை – 2 கொத்து, பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் – 250 கிராம், மஞ்சள் தூள் – 1/2 ஸ்பூன், இஞ்சி பூண்டு விழுது – 2 ஸ்பூன், சேர்த்து வெங்காயத்தை நன்றாக வதக்கி விடுங்கள்.

வெங்காயம் வதங்கி வந்தவுடன் பொடியாக நறுக்கிய தக்காளி பழம் – 3, தேவையான அளவு உப்பு, போட்டு தக்காளி பழத்தை இரண்டு நிமிடம் போல நன்றாக வதக்க வேண்டும். அதன் பின்பு சுத்தம் செய்து வைத்திருக்கும் நாட்டுக்கோழியை கடாயில் போட்டு எண்ணெயில் இரண்டு முறை கலந்து விட்டு தனி மிளகாய்த்தூள் – 1/2 ஸ்பூன் போட்டு, தண்ணீர் 1/2 லிட்டர் ஊற்றி இதை தளதளவென இரண்டு நிமிடங்கள் கொதிக்க வைக்க வேண்டும்.

- Advertisement -

அடுத்தபடியாக இந்த இடத்தில் மிக்ஸி ஜாரில் அரைத்து வைத்திருக்கும் மசாலா பொடியை போட்டு, நன்றாக கலந்து விட்டு, ஒரு மூடி போட்டு நாட்டுக்கோழியை 25 லிருந்து 30 நிமிடங்கள் வேக வைக்க வேண்டும். (மூடியை திறந்து இடையே கரண்டியை வைத்து கலந்து கொடுக்க வேண்டும். இல்லை என்றால் அடி பிடித்து விடும்.) அடுப்பை மிதமான தீயில் இருந்து கொஞ்சம் வேகமாக வைத்துக் கொள்ளுங்கள். குழம்பு நன்றாக கொதித்து கோழி வெந்து அப்படியே செமி கிரேவியாக எண்ணெய்ப் பிரிந்து நமக்கு வரும். அதன் பின்பு அடுப்பை அணைத்து விடுங்கள்.

அடுத்து ஒரு சிறிய தாளிப்பு கரண்டியில் 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி அதில் தோலுரித்து பொடியாக நறுக்கிய பூண்டு பல் – 5, சீரகம் – 1 ஸ்பூன், வர மிளகாய் – 1, கருவேப்பிலை – 1 கொத்து, போட்டு மணக்க மணக்க தாளித்து இந்த தாளிப்பை அப்படியே நாம் செய்து வைத்திருக்கும் நாட்டுக்கோழி வறுவல் மேல் ஊற்றி கலந்து சுட சுட சாப்பிட்டு பாருங்கள். அத்தனை ருசியாக இருக்கும். இந்த கிரேவியை அப்படியே சுடு சாதத்தில் போட்டு பிசைந்து சாப்பிட்டால் இதன் ருசி சொல்லவே வேணாங்க. ஒரு குண்டான் சோறு காலியாகி விடும். காரசாரமான இந்த ரெசிபியை யாரும் மிஸ் பண்ணாதீங்க ட்ரை பண்ணி பாருங்க.

பின்குறிப்பு: உங்களுக்கு நாட்டுக்கோழி பிடிக்காது என்றால் ப்ராய்லர் சிக்கனிலும் இந்த வறுவலை செய்யலாம். ஆனால் 1/2 லிட்டர் அளவு தண்ணீர் ஊற்ற வேண்டிய இடத்தில் லேசாக தண்ணீர் தெளித்து மூடி பத்து நிமிடங்கள் அந்த ப்ராய்லர் சிக்கனை வேக வைத்தாலே போதும் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -