
பலவிதமான பாவங்களை செய்த அசுரனை வதம் செய்வதற்காக அம்பிகை முப்பெரும் தேவியரின் சக்தியை ஒன்று சேர்த்து அசுரனை வதம் செய்த நாட்களாக தான் நவராத்திரி நாட்கள் திகழ்கின்றன. அப்படிப்பட்ட அசுரனின் பாவத்தை நீக்கிய அம்பிகையை நாம் நவராத்திரியின் ஆறாம் நாள் இந்திராணியாக வழிபாடு செய்யும்பொழுது நாம் செய்த பாவங்களும் நீங்கும். மேலும் நாம் எடுக்கக்கூடிய நியாயமான முயற்சிகளில் வெற்றிகளும் கிடைக்கும். அப்படிப்பட்ட ஒரு வழிப்பாட்டு முறையை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
நவராத்திரியில் ஐந்து நாட்கள் நிறைவடைந்து விட்டது. ஆறாவது நாளாக செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி புரட்டாசி மாதத்தின் 11 ஆம் நாள் திகழ்கிறது. அன்றைய தினம் சனிக்கிழமை. புரட்டாசி மாதத்தின் சனிக்கிழமை என்பது பெருமாளை வழிபாடு செய்வதற்கு உகந்த நாளாக கருதப்படுகிறது. அன்றைய தினம் மகாலட்சுமி தாயாரை இந்திராணி தேவியாகவும், சண்டிகா தேவியாகவும் நாம் வழிபாடு செய்யும்பொழுது நம் வாழ்வில் வெற்றிக்கு மேல் வெற்றிகள் உண்டாகும். மேலும் துர்க்கை அம்மனை காத்யாயினி துர்க்கையாக வழிபாடு செய்யும்பொழுது நம்முடைய பாவங்கள் அனைத்தும் நீங்கும்.
இந்த வழிபாட்டை செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி மாலை 5:30 மணியிலிருந்து 10:30 மணிக்குள் செய்ய வேண்டும். இன்றைய தினம் அம்பிகைக்கு கிளி பச்சை நிறத்திலான ஆடைகளை அணிவித்து அலங்காரம் செய்வது வீட்டிற்கு வரக்கூடிய சுமங்கலி பெண்களுக்கு இந்த கிளி பச்சை நிறத்தில் ஆன ரவிக்கை துணியை தருவது மிகவும் சிறப்பு வாய்ந்தது. அன்றைய தினம் நாம் அர்ச்சனைக்காகவும் அலங்காரத்துக்காகவும் செம்பருத்தி பூக்களையும், ஜாதி மல்லி பூவையும், சந்தன இலைகளையும் உபயோகப்படுத்தலாம்.
நெய்வேத்தியத்திற்காக திராட்சை பழங்களை வைப்பதோடு தேங்காய் சாதம், வேர்க்கடலை சுண்டல், ஏதாவது ஒரு இனிப்பு வகைகளையும் நெய்வேத்தியமாக வைக்க வேண்டும். அன்றைய தினம் அம்மன் படத்திற்கு முன்பாகவோ கலசத்திற்கு முன்பாகவோ 5 நல்லெண்ணெய் தீபங்களை வடக்கு திசை பார்த்தவாறு ஏற்றி வைத்துக் கொண்டு மலர்களையும், இலையையும் பயன்படுத்தி “ஓம் க்லீம் இந்திராணி தேவியே நமோ நம” என்னும் மந்திரத்தை 108 முறை கூறி அர்ச்சனை செய்ய வேண்டும்.
பிறகு துர்க்கை அம்மனின் மந்திரமான “ஓம் நமோ காத்யாயினி நம” என்னும் மந்திரத்தை 48 முறை கூறி அர்ச்சனை செய்ய வேண்டும். பிறகு கற்பூர தீப தூப ஆராதனை காட்டி வழிபாட்டை நிறைவு செய்து கொள்ளலாம். வீட்டிற்கு வந்த சுமங்கலி பெண்களுக்கு ரவிக்கை துணி, வேர்க்கடலை சுண்டல், தேங்காய் சாதம் போன்றவற்றோடு தாம்பூல செட்டையும் சேர்த்து வைத்து தர வேண்டும்.
இதையும் படிக்கலாமே: நல்ல காலம் பிறக்க வாங்க வேண்டிய பொருட்கள்
நவராத்திரியின் ஆறாம் நாள் மகாலட்சுமி தாயாரை இந்த முறையில் வழிபாடு செய்பவர்களுக்கு வெற்றிக்கு மேல் வெற்றி உண்டாகும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.