
பெண்களுக்கே உரித்தான ராத்திரியாக நவராத்திரி திகழ்கிறது என்று நம் அனைவருக்குமே தெரியும். வருடத்திற்கு நான்கு முறை நவராத்திரிகள் வந்தாலும் மிகவும் சிறப்பு வாய்ந்த நவராத்திரி ஆக புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய நவராத்திரி திகழ்கிறது. இந்த நவராத்திரி சமயத்தில் முப்பெரும் தேவியருடையும் வழிபாடு செய்யும் வழக்கத்தை வைத்திருப்போம். அப்படி வழிபாடு செய்பவர்கள் நவராத்திரியின் கடைசி நாள் அதாவது ஒன்பதாவது நாள் அன்று எந்த முறையில் வழிபாடு செய்தால் நினைத்த காரியங்களில் வெற்றிகள் உண்டாகும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
நவராத்திரியின் நிறைவு நாளான ஒன்பதாம் நாள் நாம் சரஸ்வதி தேவியை சாமுண்டி தேவியாகவும், பரமேஸ்வரி ஆகவும் வழிபாடு செய்ய வேண்டும். அதேபோல் நவ துர்கைகளில் சித்திராத்திரி துர்க்கையை வழிபாடு செய்ய வேண்டும். இவர்களை நாம் அன்றைய தினத்தில் வழிபாடு செய்வதன் மூலம் நினைத்த காரியங்களில் வெற்றிகள் உண்டாவதோடு நம்முடைய குழந்தைகளின் எதிர்காலம் சிறப்பாக அமையும் என்று கூறப்படுகிறது. அப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த வழிபாட்டு முறையைப் பற்றி இப்பொழுது பார்ப்போம்.
இந்த வழிபாட்டை செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி செய்ய வேண்டும். இந்த வழிபாட்டை செய்வதற்கு உகந்த நேரமாக மாலை 5:30 மணியில் இருந்து இரவு 10:30 மணி திகழ்கிறது. இன்றைய நாளில் நாம் அம்மனை அலங்காரம் செய்வதற்கு வெந்தய நிற துணிகளை பயன்படுத்த வேண்டும். மேலும் மல்லிகைப்பூ, தாமரைப்பூ போன்ற மலர்களை அர்ச்சனைக்கும் அலங்காரத்திற்கும் பயன்படுத்திக் கொள்ளலாம். அம்மனுக்கு முன்பாக ஏழு அகல் விளக்கில் நல்லெண்ணெய் ஊற்றி பஞ்சு திரி போட்டு கிழக்கு அல்லது வடக்கு திசை பார்த்தவாறு தீபத்தை ஏற்றி வைக்க வேண்டும். அம்மனுக்கு நெய்வேத்தியமாக நாவல் பழம், சர்க்கரை பொங்கல், ஏதாவது ஒரு சுண்டல் வகையை வைக்க வேண்டும்.
பிறகு சாமுண்டி தேவியின் மந்திரமான “ஓம் க்லீம் சாமுண்டி தேவியே போற்றி” என்னும் மந்திரத்தை 108 முறையும் சித்திராத்ரி துர்க்கையின் மந்திரமான “ஓம் நமோ சித்திராத்ரி தேவியே போற்றி” என்னும் மந்திரத்தை 54 முறையும் கூறி மலர்களால் அர்ச்சனை செய்து வழிபாடு செய்ய வேண்டும். அர்ச்சனையை நிறைவு செய்த பிறகு கற்பூர தீப தூப ஆராதனை காட்டி வழிபாட்டை நிறைவு செய்து கொள்ளலாம். வீட்டிற்கு அழைத்த சுமங்கலி பெண்களுக்கு துணி, பழம், இனிப்பு, சுண்டல் போன்றவற்றை கொடுப்பதோடு மாங்கல்ய செட்டையும் கொடுத்து அவர்களிடம் ஆசிர்வாதத்தையும் வாங்க வேண்டும். மேலும் அன்றைய தினத்தில் தங்களால் இயலும் பட்சத்தில் பிறருக்கு அன்னதானம் செய்வது கூடுதல் பலனைத் தரும்.
இதையும் படிக்கலாமே: கேட்டதை தரும் துர்காஷ்டமி வழிபாடு
முழு நம்பிக்கையோடு துர்க்கை அம்மனுக்குரிய முப்பெரும் தேவியருக்குரிய நவராத்திரியின் இறுதி நாளன்று இந்த முறையில் வழிபாடு செய்பவர்களுக்கு நினைத்த காரியங்களில் வெற்றிகள் உண்டாவதோடு அவர்களின் எதிர்கால சந்ததியினர் சிறப்பான வாழ்க்கை வாழ்வார்கள் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.