
புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய நவராத்திரி மிகவும் சிறப்பு மிகுந்த நவராத்திரி ஆகவும் முப்பெரும் தேவியரையும் வழிபாடு செய்வதற்கு உகந்த நவராத்திரி ஆகவும் கருதப்படுகிறது. இதில் இருக்கக்கூடிய ஒன்பது நாட்களில் முதல் மூன்று நாட்கள் துர்க்கை அம்மனையும் இரண்டாவது மூன்று நாட்கள் மகாலட்சுமியும் கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதி தேவியையும் வழிபாடு செய்திருப்போம். இதை பூர்த்தி செய்யும் வகையில் கடைசியாக பத்தாவது நாளாக ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜையும் பதினோராவது நாளாக வெற்றியைக் கொண்டாடும் வகையில் விஜயதசமியையும் வழிபாடு செய்திருப்போம்.
இந்த நவராத்திரி வழிபாட்டை செய்வதற்காக பலரும் பல விதங்களில் வழிமுறைகளை பின்பற்றி இருப்பார்கள். ஒரு சிலர் கொலு வைத்திருப்பார்கள், இன்னும் சிலர் கலசம் வைத்து வழிபாடு செய்திருப்பார்கள், இன்னும் சிலரோ அகண்ட தீபம் ஏற்றி வைத்து வழிபாடு செய்திருப்பார்கள், இன்னும் சிலர் அம்மனின் படத்தை மட்டும் வைத்து வழிபாடு செய்திருப்பார்கள். இப்படி நாம் செய்த பூஜை முழுமையான பலனை பெறுவதற்கும் அந்த பூஜையை பூர்த்தி செய்யும் வகையில் கலசத்தையும் கொலுவையும் அகண்ட தீபத்தையும் எவ்வாறு கலைப்பது என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
கொலு வைத்து நவராத்திரி பூஜை செய்தவர்கள் விஜயதசமி நாளான அக்டோபர் மாதம் 2ஆம் தேதி விஜயதசமி வழிபாட்டை நிறைவு செய்த பிறகு கொலுவை கலைக்கலாம். ஒருவேளை அன்றைய நாளில் நேரமில்லை என்பவர்கள் அக்டோபர் மாதம் நான்காம் தேதி சனிக்கிழமை அன்று தான் கொலுவை கலைக்க வேண்டும். அன்றைய கொலுவை கலைப்பதற்கு முன்பாக தீபமேற்றி வழிபாடு செய்துவிட்டு ஒரு எலுமிச்சம் பழத்தை எடுத்து கொலுவிற்கு திருஷ்டி சுத்தி போட வேண்டும். பிறகு கொலுவில் இருக்கக்கூடிய பொம்மைகளில் மூன்று நான்கு பொம்மைகளை படுக்க வைத்து விட்டு பிறகு ஒவ்வொரு பொம்மையாக எடுத்து நாம் எப்பொழுதும் எப்படி கொலு பொம்மைகளை பத்திரப்படுத்துவோமோ அந்த வகையில் எடுத்து வைத்து பத்திரப்படுத்திக் கொள்ளலாம்.
கலசம் வைத்து வழிபாடு செய்தவர்கள் கலசத்தை அக்டோபர் மாதம் நான்காம் தேதி அன்றுதான் கலைக்க வேண்டும். அதுவும் குறிப்பாக காலை 7:45 மணியிலிருந்து 8:45 மணிக்குள்ளோ அல்லது 10:45 மணியிலிருந்து 11:45 மணிக்குள்ளோ கலைக்க வேண்டும். இந்த கலசத்தை கலைப்பதற்கு முன்பாக வீட்டில் தீபம் ஏற்றி வைத்து வழிபாடுகள் அனைத்தையும் பூர்த்தி செய்த பிறகு கலசத்திற்கு எலுமிச்சம் பழத்தை வைத்து திருஷ்டி கழித்த பிறகு கலைக்க வேண்டும். கலசத்தை கலைத்த பிறகு கலசத்திற்குள் இருக்கக்கூடிய பொருட்களை நாம் பயன்படுத்திக் கொள்ளலாம். தீர்த்தத்தை ஊற்றி கலசம் வைத்தவர்களாக இருக்கும் பட்சத்தில் தீர்த்தத்தை வீடு முழுவதும் தெரிவித்துவிட்டு செடிகளில் ஊற்றி விட வேண்டும். அரிசியை வைத்து கலசம் கட்டியவர்களாக இருக்கும் பட்சத்தில் அரிசியை பிரசாதம் செய்ய பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
அகண்ட தீபம் ஏற்றி வழிபாடு செய்தவர்கள் விஜயலட்சுமி வழிபாட்டை பூர்த்தி செய்த பிறகு அகண்ட தீபத்திற்கும் எலுமிச்சம்பழத்தை வைத்து திருஷ்டி கழித்துவிட்டு பிறகு மலர்களால் தீபத்தை குளிர வைத்து விட வேண்டும். இதே போல் தான் அம்மனின் படத்தை வைத்து பூஜை செய்தவர்கள் விஜயதசமி பூஜை நிறைவடைந்த பிறகு அம்மனின் படத்தை எடுத்து பழைய இடத்தில் வைத்து வழிபாட்டை பூர்த்தி செய்து கொள்ளலாம்.
இதையும் படிக்கலாமே: பணக்கஷ்டமும் மன கஷ்டமும் தீர துர்க்கை மந்திரம்
நவராத்திரியை தங்களுடைய வீட்டில் சிறப்பான முறையில் கொண்டாடியவர்கள் இந்த வழிமுறைகளைப் பின்பற்றி அதை நிறைவு செய்வதன் மூலம் நவராத்திரி பூஜையின் முழு பலனையும் பெற முடியும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.