
ரம்ஜான் நோன்பு காலத்தில் மாலையில் பள்ளிவாசலில் இந்த கஞ்சி மணக்க மணக்க, நோன்பு திறப்பவர்களுக்காகவே தயாராகும். பள்ளிவாசலைக் கடந்து செல்லும் போதே எல்லோருக்கும் அந்த கஞ்சியை சுவைக்க வேண்டும் என்ற ஆர்வம் இருக்கும். நோன்பு கஞ்சியை இஸ்லாமியர்கள் மட்டும் தான் குடிக்க வேண்டும் என்ற எந்த கட்டுப்பாடும் கிடையாது. ஆரோக்கியம் தரக்கூடிய இந்த கஞ்சியை எல்லா மதத்தவரும் குடிக்கலாம். பள்ளிவாசல் கஞ்சியை நம்முடைய வீட்டில் சுலபமாக எப்படி செய்வது தெரிந்து கொள்வோமா. இன்று நாம் தெரிந்துகொள்ள போகும் கஞ்சி ரெசிபியில் அசைவம் சேர்க்க போவது கிடையாது. சைவ நோன்பு கஞ்சியை எப்படி வைப்பது. ரெசிபிக்குள் போகலாம் வாங்க.
முதலில் ஒரு குக்கரை எடுத்துக்கொள்ள வேண்டும். அதில் பச்சரிசி – 1 கப், பாசிப்பருப்பு – 1/4 கப், வெந்தயம் – 1/4 ஸ்பூன், இந்த மூன்று பொருட்களையும் போட்டு தண்ணீரில் நன்றாக கழுவி விடுங்கள். தண்ணீரை வடித்துவிட்டு இந்த குக்கரில் இருக்கும் பொருட்கள் வேக 8 கப் அளவு தண்ணீர் ஊற்ற வேண்டும். அதாவது பச்சரிசியை அளந்து எடுத்து இருப்பீர்கள் அல்லவா அதே கப்பில் தண்ணீர் அளந்து சேர்த்துக் கொண்டால் சரியாக இருக்கும். (தண்ணீர் கூடுதலாக இருக்க வேண்டும். அப்போதுதான் கஞ்சி வேகும்போது அடி பிடிக்காது.)
அடுத்தபடியாக குக்கரில் இருக்கும் பொருட்களோடு தோலுரித்த சின்ன வெங்காயம் – 20 பல், பொடியாக நறுக்கிய தக்காளி பழம் – 1, பச்சை மிளகாய் – 3, பூண்டு பொடியாக நறுக்கியது – 10 பல், இஞ்சி துருவல் – 1 டீஸ்பூன், மல்லித்தழை – 1/2 கைப்பிடி அளவு, உப்பு தேவையான அளவு இந்த பொருட்களை போட்டு நன்றாக கலந்து விட்டு, அடுப்பை பற்ற வைத்து ஒரு கொதி வந்ததும் அடுப்பை மீடியமாக வைத்து விட்டு ஒரு மூடி போட்டு 8 லிருந்து 10 விசில் வைக்க வேண்டும். அப்போதுதான் அரிசி பருப்பு மற்ற பொருட்கள் எல்லாம் குழையக் குழைய வெந்து கஞ்சி பதத்திற்கு வந்திருக்கும்.
விசில் வந்ததும் அடுப்பை அணைத்துவிடுங்கள். 1/2 மூடி தேங்காயைத் துருவி தேங்காய் பாலை எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். பிரஷர் அடங்கியதும் குக்கரைத் திறந்து தயாராக வைத்திருக்கும் தேங்காய் பாலை கஞ்சியில் ஊற்றி மீண்டும் குக்கரை அடுப்பில் வைத்து கஞ்சியை லேசாக கொதிக்க வையுங்கள். இதற்கு ஒரு தாளிப்பு கொடுக்க வேண்டும்.
மற்றோரு அடுப்பில் ஒரு தாளிப்பு கரண்டியை வைத்து 4 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி கொள்ள வேண்டும். அதில் பட்டை – 2, கிராம்பு – 4, கறிவேப்பிலை – 2 கொத்து, மல்லித் தழை சிறிதளவு, சேர்த்து தாளித்து மணக்க மணக்க அப்படியே கஞ்சியில் கொட்டி கலந்து கொள்ள வேண்டும்.
தேங்காய்ப்பால் சேர்த்த கஞ்சி லேசாக சூடாக்கி ஒரே ஒரு கொதி வந்ததும், அடுப்பை அணைத்து விடுங்கள். அவ்வளவு தான். பள்ளிவாசல் கஞ்சி தயார். பள்ளிவாசலில் நிறைய கஞ்சி செய்யும் போது அவர்கள் கொஞ்சம் வித்தியாசமாக செய்வார்கள்.
உதாரணத்திற்கு பச்சரிசியை அப்படியே போட்டால் சீக்கிரம் வேகாது அல்லவா, நிறைய கஞ்சி காய்ச்சும் போது. பச்சரிசியை நொய் போல அரைத்து சேர்ப்பார்கள். தேங்காய்ப்பால் ஊற்றாமல் சில பேர் துருவிய தேங்காயை தூவி விடுவார்கள். சிலபேர் காரத்திற்காக மிளகாய்த்தூள் சேர்ப்பார்கள். சிலபேர் மஞ்சள்தூள் சேர்த்து மஞ்சள் நிறத்தில் கஞ்சி வைப்பார்கள். அது அவரவருடைய விருப்பம் தான். சில பேர் தேங்காய் பால் சேர்க்காமல் கூட கஞ்சி செய்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. உங்கள் விருப்பம் போல இதில் ஒரு சில மாற்றங்களை செய்தும் கஞ்சி வைத்தால் ருசியாக தான் இருக்கும். உங்களுக்கு இந்த ரெசிபி பிடிச்சிருக்கா. உங்க வீட்ல ஒரு முறை ட்ரை பண்ணி பாருங்க.