
கல்யாண வீடுகளில் மோர்க்குழம்பு கேட்டு கேட்டு சாப்பிடுபவர்களும் உண்டு. உடலுக்கு குளிர்ச்சியை தரும் இந்த மோர்குழம்பு மற்ற சில பொருட்களுடன் சேரும் பொழுது மிகுந்த ருசி பெறுகிறது. குழந்தைகள் கூட விரும்பி சாப்பிடும் இந்த மோர் குழம்பை செய்யும் பொழுது சிலர் மோரை திரித்து விடுவது உண்டு. முதல் முறை மோர் குழம்பு சமைப்பவர்கள் இந்த முறையில் காய்கறிகள் எதுவும் சேர்க்காமல் செய்து பார்த்தால் மோர்க்குழம்பு திரியாமல் அலாதியான மணம் மற்றும் சுவையுடன் பத்தே நிமிடத்தில் செய்துவிடலாம். அதை எப்படி செய்வது? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணிப்போம்.
வெங்காய மோர் குழம்பு செய்ய தேவையான பொருட்கள்:
மோர் – 300ml, வெங்காயம் – 2, துவரம் பருப்பு – ஒரு டேபிள்ஸ்பூன், அரிசி – ஒரு டேபிள்ஸ்பூன், பெரிய பச்சை மிளகாய் – 3, வர மிளகாய் – 2, சீரகம் – ஒரு டீஸ்பூன், வெந்தயம் – அரை டீஸ்பூன், கடுகு – கால் டீஸ்பூன், மஞ்சள் மஞ்சள் தூள் – அரை டீஸ்பூன், பெருங்காயத்தூள் – கால் டீஸ்பூன், கறிவேப்பிலை – ஒரு கொத்து, உப்பு – தேவையான அளவிற்கு.
வெங்காய மோர் குழம்பு செய்முறை விளக்கம்:
காய்கறிகள் எதுவும் சேர்க்காததால் சின்ன வெங்காயம் அரை கப் அளவிற்கு சேர்த்துக் கொள்ளலாம். சின்ன வெங்காயம் இல்லை என்றால் பெரிய வெங்காயம் இரண்டை பொடி பொடியாக நறுக்கிச் சேர்த்துக் கொள்ளலாம். முதலில் மோர் குழம்பு செய்ய சற்று புளித்தும், புளிக்காமலும் இருக்கும் தயிரை மிக்ஸியில் போட்டு ஒரு சுற்று சுற்றி எடுத்துக் கொள்ளுங்கள். அப்போது தான் ஆங்காங்கே தயிர் திரி திரியாக இல்லாமல் ஒரே மாதிரியாக நைசாக இருக்கும்.
துவரம் பருப்பு மற்றும் அரிசியை களைந்து 10 நிமிடம் ஊற வைத்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு அதை மிக்ஸியில் போட்டு அதனுடன் 3 பச்சை மிளகாய் மற்றும் ஒரு டீஸ்பூன் சீரகம் சேர்த்து நன்கு நைஸாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். பின்னர் அடுப்பை பற்ற வைத்து ஒரு வாணலி ஒன்றை வைத்துக் கொள்ளுங்கள். அதில் தேவையான அளவிற்கு எண்ணெய் ஊற்றி காய விடுங்கள்.
எண்ணெய் காய்ந்ததும் கடுகு போட்டு பொரிய விடுங்கள். கடுகு பொரிந்து வந்ததும் அடுப்பை சிம்மில் வைத்துக் கொள்ளுங்கள். சமைத்து முடிக்கும் வரை அடுப்பை கூட்டி வைக்கக் கூடாது. இப்போது வெந்தயம் சேர்த்துக் கொள்ளுங்கள். வெந்தயம் கருகி விடக்கூடாது. அதனுடன் ஒரு கொத்து கறிவேப்பிலை, வர மில்காய்களை கிள்ளிப் போட்டு சேர்த்து வதக்கிக் கொள்ளுங்கள். பின்னர் நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து லேசாக வதக்கி வாருங்கள்.
பின்னர் வெங்காயம் வதங்கி சிறிதளவு உப்பு மற்றும் மஞ்சள் தூள், பெருங்காயத்தூள், ஆகியவற்றை சேர்த்து வதக்க வேண்டும். வெங்காயம் வதங்கியதும் அரைத்து வைத்துள்ள அரிசி, பருப்பு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசம் போக நன்கு வதக்குங்கள். சிறிதளவு தண்ணீர் ஊற்றி மூடி வைத்து விடுங்கள். 2 நிமிடம் கழித்து மூடியை திறந்து ஒரு கிளறு கிளறி விட்டு நீங்கள் நைஸாக அரைத்து வைத்துள்ள மோரை ஊற்றுங்கள்.
இப்பொழுது தேவையான அளவிற்கு உப்பு சேர்த்து அப்படியே பத்து நிமிடத்திற்கு விட்டு விடுங்கள். மோர் குழம்பு கொதித்து வரும் சமயத்தில் அடுப்பை அணைத்து விட வேண்டியது தான். இந்த முறையில் மோர் குழம்பு செய்தால் மோர் திரியாமல், சுவையும் அதிகமாக இருக்கும். மேலும் எந்த விதமான காய்கறிகளும் சேர்க்காமல் ரொம்ப ரொம்ப சுலபமா பத்தே நிமிடத்தில் வெங்காய மோர் குழம்பு செய்து விடலாம். நீங்களும் செய்து அசத்துங்கள்.