
வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே இந்த பூண்டு தொக்கை சுலபமாக செய்துவிடலாம். மணக்க மணக்க நாவிற்கு காரசாரமான ருசியை தரும் இந்த பூண்டு தொக்கு மூன்று நாட்கள் வரை கெட்டுப் போகாது. அருமையான இந்த ரெசிபியை கட்டாயம் எல்லோரும் ட்ரை பண்ணி பெறுங்கள். சுடச்சுட இட்லி, சுட சுட சாதம், சுட சுட தோசை, சுடச்சுட சப்பாத்திக்கு இது அவ்வளவு அருமையான சைட் டிஷ் ஆக இருக்கும். சந்தேகமே வேண்டாம். எல்லாரும் ட்ரை பண்ணி பாருங்க. செய்யறதும் ரொம்ப ரொம்ப ஈஸி தான்.
முதலில் அடுப்பில் ஒரு கடாயை வைத்து எண்ணெய் – 1 ஸ்பூன் ஊற்றிக் கொள்ள வேண்டும். தோல் உரித்த பூண்டு பல் – 50 கிராம், சின்ன வெங்காயம் தோல் உரித்தது – 100 கிராம், தக்காளிப் பழம் – 2 வெட்டியது, இந்த பொருட்களை எல்லாம் போட்டு நன்றாக வதக்க வேண்டும். வெங்காயம் தக்காளி பூண்டு அனைத்தும் வெந்து லேசாக சுருங்கி வரும் போது 1 கைப்பிடி – அளவு தேங்காய் துருவல் போட்டு மீண்டும் எல்லா பொருட்களையும் நன்றாக வதக்கி அடுப்பை அணைத்து விடுங்கள். இந்த பொருட்கள் எல்லாம் நன்றாக ஆறிய பின்பு, மிக்ஸி ஜாரில் போட்டு கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி விழுது போல அரைத்து இந்த பேஸ்ட்டை ஓரமாக வைத்து விடுங்கள்.
அடுத்தபடியாக அடுப்பில் ஒரு கடாயை வைத்துக் கொள்ள வேண்டும். அதில் 4 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி, வெந்தயம் – 1/2 ஸ்பூன், கடுகு – 1/2 ஸ்பூன், மிளகு – 1/2 ஸ்பூன், சீரகம் – 1/2 ஸ்பூன், பொடியாக நறுக்கிய பூண்டு பல் – 10 போட்டு நன்றாக வதக்க வேண்டும். பூண்டு வறுபட்ட வாசம் வரும் போது மிகவும் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் – 1, பெருங்காயம் – 1/4 ஸ்பூன், கருவேப்பிலை – 2 கொத்து, இந்த பொருட்களை எல்லாம் போட்டு நன்றாக வதக்க வேண்டும். வெங்காயம் நன்றாக வதங்கி வந்தவுடன் மிக்ஸி ஜாரில் அரைத்து வைத்திருக்கும் விழுதை கடாயில் சேர்த்து இரண்டு நிமிடம் போல நன்றாக வதக்கி விடுங்கள்.
விழுது எண்ணெயில் இரண்டு நிமிடம் போல வதங்கியவுடன், மிளகாய் தூள் – 2 ஸ்பூன், மல்லித்தூள் – 1 ஸ்பூன், சீரகத்தூள் – 1/4 ஸ்பூன், மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன், உப்பு தேவையான அளவு, இந்த பொருட்களை போட்டு நன்றாக கலந்து விடுங்கள். இது நமக்கு கிரேவி பக்குவத்தில் தான் இருக்கும். மசாலா பொருட்கள் எல்லாம் கிரேவியில் நன்றாக கலந்து வந்த உடனேயே நெல்லிக்காய் அளவு – புளிக்கரைசலை, இதில் ஊற்றி நன்றாக கலந்து விட்டு தேவைப்பட்டால் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி, அடுப்பை மிதமான தீயில் வைத்து ஒரு மூடி போட்டு 7 லிருந்து 8 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும். இடையிடையே மூடியை திறந்து கிளறி விட வேண்டும். இல்லை என்றால் லேசாக அடி பிடிக்கும்.
இந்த கிரேவி நன்றாக கொதித்து நாம் ஊற்றிய எண்ணெய் எல்லாம் பிரிந்து மேலே வத்தக் குழம்புக்கு வருவது போல வரும். அப்போது அடுப்பை அணைத்துவிட்டு மேலே மல்லி தழை தூவி விடுங்கள்.
கொதிக்கும் போதே இதனுடைய வாசம் அப்படியே தூக்கும். சாப்பிட தூண்டும். சுட சுட இதை சுட சுட சாதத்தில் பிசைந்து சாப்பிட்டால் அவ்வளவு தான். காரசாரமான இந்த ரெசிபியை ஒரு முறை செஞ்சு வீட்டில் இருப்பவர்களிடம் பாராட்டை பெறுங்கள்.