
பலரும் விரும்பி சாப்பிடக்கூடிய ஒரு உணவு பொருளாக திகழ்வதுதான் தோசை. தோசையில் பல வகைகள் இருக்கிறது அதிலும் மிகவும் குறிப்பான ஒன்றாக திகழ்வதுதான் ரவா தோசை. இந்த ரவா தோசையை வீட்டில் முயற்சி செய்து சாப்பிடுவதை விட ஹோட்டலில் வாங்கி சாப்பிடும் நபர்களே அதிகமாக இருப்பார்கள். அதற்கு காரணம் ஹோட்டலில் இருக்கக்கூடிய அந்த மொறுகலான சுவை.
என்னதான் வீட்டில் எப்படி தயார் செய்தாலும் அந்த ஹோட்டல் ஸ்டைலில் ரவா தோசை வரவில்லை என்று நினைப்பவர்கள் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் கூறப்பட்டிருக்கும் முறையில் ரவா தோசை செய்து பாருங்கள். இனிமேல் ஹோட்டல் பக்கமே செல்ல மாட்டேன் என்று கூறும் அளவிற்கு ஹோட்டல் சுவையை விட அதிக சுவையில் ஆனியன் ரவா தோசை தயாராகிவிடும்.
தேவையான பொருட்கள்
ரவை – ஒரு கப்
மைதா – 3/4 கப்
அரிசி மாவு – 3/4 கப்
முந்திரி உடைத்தது – ஒரு கைப்பிடி அளவு
சீரகம் – 1/2 டீஸ்பூன்
மிளகு – 1/2 டீஸ்பூன்
இஞ்சி – 1/2 இன்ச்
பச்சை மிளகாய் – 5
கருவேப்பிலை – சிறிதளவு
சர்க்கரை – ஒரு டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
வெங்காயம் – 1
பெருங்காயத்தூள் – 1/2 டீஸ்பூன்
தண்ணீர் – 5 கப்
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு கப் அளவிற்கு ரவையை போடுங்கள். அந்த ரவையிலிருந்து ஒரு கைப்பிடி அளவு ரவையை மட்டும் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். மறுபடியும் அதே பாத்திரத்தில் மைதா, அரிசி மாவு இவற்றை சேர்த்துக் கொள்ளுங்கள். பொடியாக உடைத்து வைத்திருக்கும் முந்திரியும் அதில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
சீரகத்தை சேர்க்க வேண்டும். மிளகை ஒன்று இரண்டாக இடித்து அதில் சேர்க்க வேண்டும். இஞ்சியை பொடியாக நறுக்கி அதில் சேர்க்க வேண்டும். பச்சை மிளகாய் பொடியாக நறுக்கி அதில் சேர்த்துக் கொள்ளுங்கள். கருவேப்பிலையை கையிலே சிறிது சிறிதாக கிள்ளி போட்டு சேர்த்துக் கொள்ளுங்கள். இதனுடன் சர்க்கரை, உப்பு இவற்றை சேர்த்து நான்கு கப் அளவிற்கு தண்ணீரை ஊற்றி கட்டி விடாத அளவிற்கு நன்றாக கலந்து கொள்ளுங்கள்.
கலந்த இந்த மாவை அரை மணி நேரம் அப்படியே மூடி வைத்து விடுங்கள். அரை மணி நேரம் கழித்து ஒரு வெங்காயத்தை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள். இப்பொழுது இந்த மாவில் நாம் ஏற்கனவே எடுத்து வைத்திருக்கும் ஒரு கைப்பிடி அளவு ரவை மற்றும் ஒரு கப் அளவிற்கு தண்ணீர் ஊற்றி நன்றாக கலந்து கொள்ளுங்கள்.
இப்பொழுது அடுப்பில் ஒரு தோசை கல்லை வைத்து கல் நன்றாக சூடானதும் அதில் எண்ணெய் ஊற்றி நாம் பொடியாக நறுக்கி வைத்திருக்கும் வெங்காயத்தை எடுத்து தூவி விட வேண்டும். வெங்காயம் அந்த எண்ணெயில் வெந்து கொண்டு இருக்கும் பொழுது அடுப்பை குறைந்த தீயில் வைத்துவிட்டு நாம் தயார் செய்து வைத்திருக்கும் மாவை நன்றாக கலந்து வெளிப்புறத்தில் இருந்து உள்புறமாக ஊற்ற வேண்டும்.
கரண்டியில் ஊற்றத் தெரியாது என்பவர்கள் ஒரு டம்ளரில் எடுத்து அப்படியே ஊற்றி விடலாம். பிறகு அதன் மேலே நெய் அல்லது எண்ணெயை ஊற்றி தோசையை நன்றாக வேக விடுங்கள். குறைந்த தீயில் தான் இருக்க வேண்டும். தோசை நன்றாக சிவக்க ஆரம்பித்த பிறகு தோசையை மடக்கி எடுத்து வைத்து விடலாம். மிகவும் சுவையான ஆனியன் ரோஸ்ட் ரவா தோசை தயாராகிவிட்டது. இந்த தோசைக்கு வெங்காய சட்னி, தக்காளி சட்னி, புதினா சட்னி போன்றவை மிகவும் அருமையாக இருக்கும்.
இதையும் படிக்கலாமே:சமையல் பரபரப்பை குறைக்க உதவும் குறிப்புகள்
எதற்கெடுத்தாலும் ஹோட்டலுக்கு போவோம் ரவா தோசை சாப்பிடுவோம் என்று கூறிக்கொண்டு இருப்பவர்களுக்கு இந்த முறையில் ஒரே ஒரு முறை மட்டும் ரவா தோசை செய்து கொடுத்து பாருங்கள் இனிமேல் ஹோட்டலுக்கு போவோம் என்ற வார்த்தையே வாயிலிருந்து வராது.