
சமையல் என்பதே ஒரு கலை தான்,ஆனால் அந்த கலை சமையலோடு முடிந்து விடுவது இல்லை.சமையல் மட்டுமல்ல நம் வீட்டில் பார்த்து பார்த்து ரசித்து செய்யும் ஒவ்வொரு வேலையும்கலை தான். இந்த வீட்டு வேலைகளை அழகாக, நிதானமாக செய்யும் போது வீடும் பார்க்க நன்றாக இருக்கும் அதை பார்க்க நமக்கும் ஒரு சந்தோஷமாக இருக்கும். அப்படி வீட்டில் இருக்கும் பொருட்களை எல்லாம் சுத்தமாக பார்க்க பளிச்சென்று இருந்தால், அந்த சந்தோஷத்தை சொல்ல வார்த்தைகள் இல்லை. இந்த பதிவில் வீட்டில் உள்ள சமையல் பாத்திரங்களை சுத்தப்படுத்துவதை பற்றி தான் தெரிந்து கொள்ளப் போகிறோம்.
நம் அடுக்களையில் உள்ள பாத்திரங்கள் எல்லாம் எப்போதும் பளிச்சென்று மின்னி கொண்டு இருக்க வேண்டும் என்றால், அதை நாம் சுத்தமாக தேய்த்து பராமரிக்க வேண்டும். இப்போது அதை சுத்தமாக வைத்திருக்க பயன்படுத்தும் லிக்விடை கடைகளில் அதிக விலை கொடுத்து வாங்கி கடைகளில் வாங்கி பயன்படுத்தாமல், குறைந்த செலவிலே நாமே தயாரித்து மாதம் முழுவதும் பயன்படக்கூடிய வகையில் எப்படி பயன்படுத்துவது என்று தெரிந்து கொள்ளலாம்.
இதற்கு ஒரு பத்து ரூபாய் துணி சோப்பு எடுத்துக் கொள்ளுங்கள் (ரின், சர்ப் எக்ஸெல் )உங்களிடம் எந்த சோப்பு இருக்கிறதோ அதை எடுத்துக் கொள்ளுங்கள். அந்த சோப்பை காய் சீவும் சீவலில் துருவி எடுத்துக் கொள்ளுங்கள். இப்படி செய்ய காரணம் லிக்விட் செய்யும் போது இப்படி இருந்தால் கரைக்க சுலபமாக இருக்கும் அதற்காக தான்.
அடுத்ததாக நான்கு எலுமிச்சை பழத்தை எடுத்து நன்றாக பிழிந்து வைத்துக் கொள்ளுங்கள். இதுக்கு புதிதாக வாங்கி எலுமிச்சை பழம் தான் வேண்டும் என்று இல்லை என்று உங்க வீட்டில் காய்ந்த எலுமிச்சை பழம் இருந்தால் கூட அதை வீணாக்காமல் சாறு பிழிந்து எடுத்துக் கொள்ளுங்கள். (அழுகிய பழத்தை பயன்படுத்த வேண்டாம்)
இப்போது துருவி வைத்த சோப்பு பவுடர்யுடன் இந்த எலுமிச்சை சாறை கலந்த பிறகு, நான்கு டேபிள் ஸ்பூன் சமையல் சோடா, ஒரு கைப்பிடி கல் உப்பு சேர்த்து நன்றாக கலந்து வைத்து கொள்ளுங்கள். ஒரு பாத்திரத்தில் ஒரு லிட்டர் அளவிற்கு தண்ணீரை ஊற்றி கொதிக்க வைத்து அந்த தண்ணீரையும் இதில் சேர்த்து ஸ்பூன் வைத்து நன்றாக கலந்து விடுங்கள். அவ்வளவு தான் நீங்கள் பாத்திரம் தேய்க்க பயன்படுத்தும் லிக்விட் தயார். இதை ஒரு பாட்டிலில் ஊற்றி மூடி போட்டு பத்திரப்படுத்தி வைத்துக் கொள்ளுங்கள்.
இந்த லிக்விட் ஒரு மாதத்திற்கு மேலே உங்களுக்கு வரும் இதை செய்ய அதிகபட்சம் 20 ரூபாய் செலவாகும் அவ்வளவு தான். ஆனால் இதை கொண்டு தேய்க்கும் போது எவ்வளவு கறை படிந்த பாத்திரங்களாக இருந்தாலும் அதிகம் அழுத்தம் கொடுத்து தேய்க்க வேண்டிய அவசியமே இல்லாமல்,லேசாக தேய்த்தால் போதும் பளிச்சென்று மாறி விடும்.
பாத்திரம் தேய்க்க பயன் படுத்தும் இதே லிக்விடை பயன்படுத்தி உங்கள் வீட்டின் சிங்க், கிச்சன் மேடை எல்லாம் கூட சுத்த படுத்த பயன்படுத்திக் கொள்ளலாம். ஒரே லிக்விடை பயன்படுத்தி இரண்டு செலவையும் குறைத்துக் கொள்ளலாம். நீங்களும் இந்த லிக்விடை உங்கள் வீட்டில் செய்து பயன்படுத்தி பாருங்கள்.