- Advertisement -
சமையல் குறிப்புகள்

வீட்டில் இருக்கும் இந்த பொருட்கள் போதும். இவற்றை வைத்து சுவையான பட்டணம் பக்கோடாவை நினைத்த உடனே செய்திடலாம்

- Advertisement -

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான சுவை பிடிக்கும். ஆனால் டீ கடை போண்டா, பஜ்ஜி என்றால் மட்டும் பாரபட்சம் இல்லாமல் அது அனைவருக்குமே பிடித்தமானதாக இருக்கும். வீட்டில் இருக்கும் பொழுது இப்படி சுடச்சுட உணவு வகைகள் சாப்பிட ஆசை வந்தது என்றால், உடனே வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து இப்படி சமைத்து விடலாம். அதாவது பஜ்ஜி செய்வதற்கு வாழைக்காய், உருளைக்கிழங்கு போன்ற காய்கறிகள் தேவை. ஆனால் போண்டா, பக்கோடா செய்வதற்கு இதுபோன்ற காய்கறித் தேவைப்படுவதில்லை. எனவே வீட்டில் இருக்கும் வெங்காயம், கடலை மாவு, அரிசி மாவு இவற்றை வைத்தே இந்த பட்டணம் பக்கோடாவை சட்டென செய்திடலாம். இதன் சுவை கடையில் வாங்கும் அதே சுவையில் அருமையாக இருக்கும். இதனை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விருப்பமாக சாப்பிடுவார்கள். இதனை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்:
கடலை மாவு – 100 கிராம், அரிசி மாவு – 75 கிராம், மைதா மாவு – 50 கிராம், வெங்காயம் – 3, பச்சை மிளகாய் – 3, தனி மிளகாய் தூள் – கால் ஸ்பூன், பெருங்காயத்தூள் – கால் ஸ்பூன், சோடா உப்பு – கால் ஸ்பூன், நெய் – 2 ஸ்பூன், எண்ணெய் – கால் லிட்டர், உப்பு – ஒரு ஸ்பூன், புதினா – ஒரு கொத்து, கொத்தமல்லித்தழை – ஒரு கொத்து.

- Advertisement -

செய்முறை:
முதலில் வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு மிக்ஸி ஜாரில் 5 பல் பூண்டு, ஒரு துண்டு இஞ்சி மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து சற்று கொரகொரப்பாக அரைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் இதனை ஒரு கிண்ணத்தில் சேர்த்துக்கொள்ள வேண்டும்

பிறகு அதனுடன் நறுக்கிய வெங்காயத்தையும் சேர்க்க வேண்டும். பின்னர் இவற்றுடன் உப்பு, மிளகாய்த்தூள் மற்றும் பொடியாக நறுக்கிய கொத்தமல்லித் தழை மற்றும் புதினா தழை சேர்த்து அனைத்தையும் ஒன்றாக கலந்து கொள்ள வேண்டும். பிறகு மற்றொரு கிண்ணத்தில் இரண்டு ஸ்பூன் நெய் சேர்க்க வேண்டும். பிறகு அதனுடன் சோடா உப்பு சேர்த்து நன்றாகக் கரைத்துக் கொள்ள வேண்டும். இதனை ஐந்து நிமிடம் விடாமல் கைவைத்து கரைக்க வேண்டும்.

- Advertisement -

பிறகு இவற்றில் கடலை மாவு, அரிசி மாவு மற்றும் மைதா மாவு சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும். பின்னர் இவற்றுடன் கிளறி வைத்துள்ள மசாலா கலவையை சேர்த்து, நன்றாக பிசைந்து கொள்ளவேண்டும். பின்னர் இவற்றுடன் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து கெட்டியான மாவு பதத்திற்கு கலந்து கொள்ள வேண்டும்.

பின்னர் இந்த மாவிலிருந்து சிறு சிறு உருண்டைகளாக பிடித்து தனியாக ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு அடுப்பை பற்ற வைத்து, அதன் மீது ஒரு கடாயை வைத்து, எண்ணெய் ஊற்றிக் கொள்ள வேண்டும். எண்ணெய் நன்றாக காய்ந்ததும் உருண்டைகளை ஒவ்வொன்றாக சேர்த்து பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும். அவ்வளவுதான் சுடச்சுட சூப்பரான சுவையில் பட்டணம் பக்கோடா தயாராகி விட்டது.

- Advertisement -