
ஒவ்வொரு ஜென்மத்திலும் நாம் செய்த பாவத்தின் தொடர்ச்சியால் தான் பிறப்பெடுத்து கஷ்டப்பட்டு கொண்டு இருக்கிறோம். ஒவ்வொருவரும் அவரவர்கள் செய்த பாவ புண்ணியத்திற்கு ஏற்றார் போல் தான் அவர்களுடைய கர்ம வினை என்பது அமையும். அந்த கர்ம வினையின் அடிப்படையில்தான் சனீஸ்வர பகவான் நமக்கு சங்கடங்களை தருகிறார் என்று கூறப்படுகிறது. அப்படிப்பட்ட சனீஸ்வரர் பகவானையே சங்கடத்திற்கு உள்ளாக்கியவர் தான் சங்கடஹர சதுர்த்தி நாயகர் விநாயகப் பெருமான். அதனால் தான் விநாயகப் பெருமானை வழிபாடு செய்பவர்களுக்கு சனீஸ்வர பகவானால் எந்தவித பிரச்சினைகளும் ஏற்படாது என்று கூறப்படுகிறது.
அந்த அளவிற்கு சிறப்பு வாய்ந்த விநாயகர் பெருமானுக்குரிய சங்கடகர சதுர்த்தி என்பது இந்த முறை சனீஸ்வர பகவானுக்குரிய சனிக்கிழமை அன்று வருவது கூடுதல் சிறப்பை தரும் என்றே கூறலாம். அந்த நாளில் நாம் ஏற்றக்கூடிய ஒரே ஒரு தீபம் நம்முடைய ஏழு ஜென்ம பாவத்தையும் நீக்கும் செல்வ வளத்தை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. அந்த தீபத்தை எப்படி ஏற்றுவது என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.
சனிக்கிழமை என்பது சனீஸ்வர பகவானுக்கு உகந்த கிழமை என்றும் பெருமாள் வழிபாட்டிற்கு உகந்த கிழமை என்றும் கூறப்படுகிறது. பெருமாளுக்கு உகந்த கிழமையான சனிக்கிழமை அன்று பெருமாளை நாம் வழிபாடு செய்வதோடு அன்றைய தினம் சங்கடஹர சதுர்த்தி என்பதால் மாலை நேரத்தில் விநாயகப் பெருமானையும் நாம் வழிபாடு செய்ய வேண்டும். இந்த வழிபாட்டை நாம் நம்முடைய வீட்டு பூஜை அறையில் செய்தால் போதும்.
இதற்கு ஒரு தாம்பாள தட்டை எடுத்துக் கொள்ளுங்கள். அதற்கு சந்தனம் குங்குமம் வைத்துக் கொள்ளுங்கள். அதில் பெருமாளுக்கு உகந்த இலையாக கருதப்படக் கூடிய துளசி இலையை ஒரு கைப்பிடி எடுத்து தட்டின் மீது பரப்பிக் கொள்ளுங்கள். விநாயகப் பெருமானை நாம் முழுமனதோடு நினைத்து எந்த ஒரு பொருளை எடுத்து வைத்தாலும் அந்த பொருளில் விநாயகப் பெருமான் வீற்றிருப்பார் என்று கூறி கேள்விப்பட்டிருக்கிறோம்.
செல்வ செழிப்புடன் வாழ வேண்டும் என்றால் நம்மை தேடி மங்களங்கள் அனைத்தும் வரவேண்டும். மங்களங்களுக்கு உரியதாக தான் மஞ்சள் கிழங்கு திகழ்கிறது. அதிலும் பெண்கள் உபயோகப்படுத்தக்கூடிய குண்டு மஞ்சள் அதி அற்புதமான பலனை தரும். குண்டு மஞ்சள் கிழங்கு ஒன்றை விநாயகராக நினைத்து அந்த துளசி இலையின் மேல் வைத்துக் கொள்ளுங்கள். அதற்கு குங்குமத்தை வைத்து மலரையும் வைத்துக் கொள்ளுங்கள். அந்த மஞ்சள் பிள்ளையாருக்கு முன்பாக ஒரு அகல் விளக்கை வைத்து நெய் ஊற்றி பஞ்சுத்திரி போட்டு கிழக்கு பார்த்தவாறு தீபம் ஏற்ற வேண்டும்.
பிறகு “விக்ணங்களை தீர்க்கும் விநாயகரே போற்றி” என்னும் மந்திரத்தை 108 முறை கூறி வாசனை மிகுந்த மலர்களால் அந்த மஞ்சள் பிள்ளையாருக்கு அர்ச்சனை செய்ய வேண்டும். இப்படி நாம் செய்வதன் மூலம் சனீஸ்வர பகவானால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் நீங்குவதோடு மங்களங்கள் பெருகும். அதே சமயம் செல்வ செழிப்பும் உயரும் குறைந்தபட்சம் 48 நிமிடம் இந்த தீபம் எறிய வேண்டும். பிறகு அதை குளிர வைத்துக் கொள்ளலாம்.
அன்று இரவு முழுவதும் இந்த தாம்பாள தட்டு அப்படியே பூஜை அறையில் இருக்கட்டும். மறுநாள் காலையில் எப்பொழுதும் போல் சுத்தமாக குளித்து முடித்துவிட்டு வீட்டு பூஜை அறையில் தீபம் ஏற்றும் பொழுது அந்த தட்டை எடுத்து விடலாம். விளக்கை சுத்தம் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். மஞ்சளை பெண்கள் உபயோகப்படுத்திக் கொள்ளலாம் அல்லது நகை வைக்கும் இடத்தில் வைத்துக் கொள்ளலாம். துளசி இலையை கால்படாத இடத்திலோ அல்லது ஓடுகின்ற தண்ணீரிலோ போட்டு விட வேண்டும்.
இதையும் படிக்கலாமே: பிள்ளைகள் பெற்றோர் பேச்சை கேட்க
ஒரே ஒரு தீபம் கர்ம வினைகளை அடிப்படையாகக் கொண்டு கஷ்டங்களை தரக்கூடிய சனிஸ்வர பகவானின் தாக்கத்திலிருந்து விடுபட செய்யும். அப்படிப்பட்ட தீபத்தை முழு நம்பிக்கையுடன் விநாயகப் பெருமானை நினைத்து ஏற்றி வழிபாடு செய்வோம் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.