- Advertisement -

பாவங்களை நீக்கும் இராம நவமி வழிபாடு

- Advertisement -

சுப நிகழ்வுகளை தவிர்க்கக்கூடிய திதியாக திகழும் நவமி திதி அன்று ராமர் அவதரித்ததால் அந்த நவமி திதிக்கு பெருமை உண்டானது என்று புராணங்கள் கூறுகின்றன. அப்படி ராமர் அவதரித்த நவமி என்பதை நாம் ராமநவமி என்று கூறுகிறோம். புனர்பூச நட்சத்திரமும் சேர்ந்து வரக்கூடிய அன்றைய நாளில் ராமபிரானை நாம் வழிபாடு செய்யும்பொழுது நம்முடைய பாவங்கள் முற்றிலும் நீங்கும் என்று கூறப்படுகிறது. அப்படி ராமரை வழிபாடு செய்வதற்குரிய ஒரு எளிமையான வழிபாட்டு முறையை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.

இராம நவமி வழிபாடு

ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி முழுவதும் ராம நவமி திதி என்பது இருக்கிறது. ஆனால் ராமர் அவதரித்த நட்சத்திரமான புனர்பூசம் என்பது ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி காலை 10:31 மணி வரை தான் இருக்கிறது என்பதால் ராம நவமி வழிபாட்டை செய்பவர்கள் புனர்பூச நட்சத்திரம் முடிவதற்குள் செய்வது என்பது மிகவும் சிறப்பு. ஒரு வேளை விரதம் இருந்து வழிபாடு செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள் விரதம் இருந்து மாலை நேரத்தில் இந்த வழிபாட்டை செய்து கொள்ளலாம். முடிந்த அளவிற்கு ராமநவமி வழிபாட்டை காலை நேரத்தில் செய்வது என்பது மிகவும் சிறப்பு.

- Advertisement -

வீட்டில் ராமரின் பட்டாபிஷேக படம் இருக்கும் பட்சத்தில் அந்த படத்தை சுத்தம் செய்து சந்தனம் குங்குமம் வைத்துக்கொள்ளுங்கள். ஒருவேளை ராமரின் படம் இல்லை என்று கூறுபவர்கள் பெருமாளின் படத்திற்கு முன்பாக இந்த வழிபாட்டை செய்யலாம். ராமருக்கு மிகவும் பிடித்தமான நெய்வேத்தியமாக கருதப்படுவது பால் பாயாசம் என்பதால் கண்டிப்பான முறையில் ராம நவமி அன்று பால்பாயசத்தை செய்து வைக்க வேண்டும். இதோடு துளசி தீர்த்தம் மற்றும் பானகத்தையும் தயார் செய்து வைக்க வேண்டும்.

ராமபிரானுக்கு துளசி மாலை சாற்றுவது, வாசனை மிகுந்த மலர்களால் அலங்காரம் செய்வது, தாமரை மலரை சாற்றுவது போன்றவற்றை மேற்கொள்ளலாம். பிறகு ஒரு சிறிய தாம்பாள தட்டை ராமரின் படத்திற்கு முன்பாக வைத்துக் கொள்ளுங்கள். அந்த தாம்பாள தட்டில் துளசி இலைகளை பரப்பி அதற்கு மேல் ஒரு அகல் விளக்கை வைத்து நெய் ஊற்றி பஞ்சுத்திரி போட்டு தீபம் ஏற்ற வேண்டும். துளசி இலைகள் ஒவ்வொன்றிலும் விஷ்ணு பகவான் வீற்றிருக்கிறார் என்று புராணங்கள் கூறுகிறது. அந்த இலைக்கு மேலே நாம் தீபம் ஏற்றும் பொழுது பெருமாளின் அருளை நம்மால் பரிபூரணமாக பெற முடியும். மேலும் அன்றைய தினத்தில் ராமபிரானின் நாமங்களை கூறுவது விஷ்ணு சகஸ்ர நாமத்தை பாராயணம் செய்வது போன்றவற்றை செய்வதன் மூலம் ராமபிரானின் பரிபூரணமான அருளை நம்மால் பெற முடியும் அவரின் அருளை பெற்று விட்டாலே நம்முடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய கஷ்டங்களும் பாவங்களும் முற்றிலும் நீங்கும்.

- Advertisement -

இதையும் படிக்கலாமே:ராம நவமி அன்று வாங்க வேண்டிய பொருள்

எளிமையான இந்த ராமநவமி வழிபாட்டை முழுமனதோடு ராமபிரானை நினைத்து செய்பவர்களுக்கு அவர்கள் வாழ்க்கையில் இதுவரை அனுபவித்த கஷ்டங்களும், தெரிந்தோ தெரியாமலோ செய்த பாவங்களும் முற்றிலும் நீங்கும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

- Advertisement -