
காலை உணவான இட்லி, தோசையுடன் தொட்டுக்கொண்டு சாப்பிட பெரும்பாலும் சட்னி, சாம்பார், தக்காளி தொக்கு, குருமா இவற்றை தான் தொடர்ந்து செய்து கொண்டிருக்கின்றோம். காலை உணவு சமைக்க சில நேரங்களில் வீட்டில் தக்காளி, வெங்காயம் கூட இல்லாமல் இருக்கும். அப்போது என்ன செய்வது என்று யோசிக்காமல் உடனே வீட்டில் இருக்கும் பூண்டை வைத்து ஒரு சுவையான கிரேவியை செய்திடலாம். இவ்வாறு பத்தே நிமிடத்தில் இந்த பூண்டு கிரேவியை எப்படி செய்வது என்பதை தெரிந்து கொள்வோம் வாருங்கள்.
தேவையான பொருட்கள்:
பூண்டு – 20 பல், நல்லெண்ணெய் – 3 ஸ்பூன், கடுகு – அரை ஸ்பூன், சீரகம் – அரை ஸ்பூன், உளுத்தம் பருப்பு – ஒரு ஸ்பூன், கடலைப்பருப்பு – ஒரு ஸ்பூன், தனி மிளகாய் தூள் – ஒரு ஸ்பூன், தனியா தூள் – ஒன்றரை ஸ்பூன், உப்பு – அரை ஸ்பூன், தயிர் – ஒரு கப், வெல்லம் – சிறிய துண்டு, கொத்தமல்லி – ஒரு கொத்து.
செய்முறை:
முதலில் 20 பல் பூண்டினை தோல் உரித்து கழுவி வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதனை சிறிய உரலில் வைத்து நன்றாக நசுக்கி வைத்துக் கொள்ள வேண்டும். பூண்டு மிகவும் குழைந்து விடாமல் சற்று கொரகொரப்பாக இருக்குமாறு நசுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி என்னை நன்றாக காய்ந்ததும் அதில் கடுகு, சீரகம் போட்டு தாளித்து அதன் பின் உளுத்தம் பருப்பு மற்றும் கடலைப் பருப்பை சேர்த்து நன்றாக வறுத்துக் கொள்ள வேண்டும். பிறகு நசுக்கி வைத்துள்ள பூண்டினை சேர்த்து நன்றாக சிவந்து வருமாறு வறுத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் மிளகாய்த்தூள் மற்றும் தனியா தூள் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை எண்ணெயிலேயே வதக்கிக் கொள்ள வேண்டும். அதன் பின்னர் ஒரு கப் தயிரை கட்டிகளில்லாமல் கரைத்துக் கொண்டு இவற்றுடன் சேர்க்கவேண்டும். பிறகு அரை ஸ்பூன் உப்பு சேர்த்து நன்றாக கொதிக்க விட வேண்டும்.
இவை நன்றாக கொதித்து வரும்போது இதனுடன் சிறிய துண்டு வெல்லம் சேர்த்து நன்றாக கிளறி விட வேண்டும். வெல்லம் சேர்ப்பதால் இதன் சுவை சற்று அதிகரிக்கும். இறுதியாக கொத்தமல்லி இலைகளை தூவி விட்டு இறக்க வேண்டும்.
இந்த கிரேவியை இட்லி, தோசையுடன் சேர்த்து சாப்பிட்டு பாருங்கள். இதுவரை நீங்கள் செய்த காரச் சட்னி, தக்காளி சட்னி இவற்றைவிடவும் மிகவும் அற்புதமான சுவையில் இருக்கும். இனி வீட்டில் தக்காளி, வெங்காயம் இல்லையே என்ற கவலை உங்களுக்கு வேண்டாம். பத்தே நிமிடத்தில் சுலபமாக செய்யக்கூடிய இந்த பூண்டு சட்னியை உடனே செய்திடலாம்.
பயன்கள்:
இதில் நல்லெண்ணெய் சேர்த்து சமைப்பதால் செரிமானம் சீர்பட்டு மலச்சிக்கல் பிரச்சனை தீரும். இதில் கால்சியம் மற்றும் துத்தநாகம் இருப்பதால் எலும்புகள் பலப்படும். அதேபோல் இதில் சேர்க்கப்படும் பூண்டில் சல்பர் நிறைந்துள்ளதால் வாய்வு பிரச்சனை மற்றும் உடம்பில் தோன்றும் அலர்ஜி பிரச்சனை போன்றவற்றிற்கு தீர்வாக இருக்கும்.