- Advertisement -
சமையல் குறிப்புகள்

பொட்டுக்கடலை இருக்கா உங்க வீட்ல. டக்குனு 10 நிமிடத்தில் இந்த ஸ்வீட் செஞ்சு குழந்தைகளுக்கு கொடுங்க. உடம்புக்கு ரொம்ப ரொம்ப ஆரோக்கியம் தரும் சிம்பிள் ஸ்வீட் ரெசிபி.

- Advertisement -

நாம் செய்யும் உணவுகள் அனைத்தையுமே நம் வீட்டு குழந்தைகளின் நலனை கருத்தில் கொண்டு தான் செய்வோம். ஏனென்றால் அவர்கள் வளரும் போதே நாம் கொடுக்கும் இந்த ஊட்டச்சத்தான உணவு தான் அவர்களின் எதிர்கால வாழ்வில் உடலிற்கு ஆரோக்கியத்தையும், தெம்பையும், கொடுக்கும். எனவே குழந்தைகளின் உணவு விஷயத்தில் மட்டும் நாம் எப்போதும் கவனமாகத்தான் இருக்க வேண்டும். அப்படி நாம் கவனமாக பார்த்து பார்த்து செய்து கொடுக்கும் அனைத்தையும் அவர்கள் சாப்பிட்டு விடுவதுமில்லை. ஆகையால் நல்ல பொருட்களை அவர்களுக்கு பிடித்த மாதிரி செய்து கொடுக்க வேண்டிய கடமை நமக்கு உள்ளது. இதோ அது போன்ற ஒரு ஆரோக்கியமான ஸ்வீட் தான் இந்த பொட்டுக்கடலை அல்வா.

தேவையான பொருட்கள்: பொட்டுக்கடலை – 1 கப், வெல்லம் – 1 கப், ஏலக்காய் பொடி- 1/4 டீஸ்பூன், உப்பு – 1 சிட்டிகை, நெய் – 4 டேபிள் ஸ்பூன், முந்திரி பருப்பு – 6.

- Advertisement -

முதலில் ஒரு கப் பொட்டுக்கடலையை எடுத்து ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து நைஸாக பவுடராக அரைத்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். பிறகு அடுப்பை பற்ற வைத்து ஒரு வாணலியை வைத்து, அதில் ஒரு கப் வெல்லத்துடன், ஒன்றை கப் தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்க விடுங்கள். வெல்லம் பாகுபதம் வர வேண்டிய அவசியம் இல்லை. வெல்லம் தண்ணீரில் கரைந்தாலே போதும். வெல்லம் கரைந்ததும் அடுப்பில் இருந்து கடாயை இறக்கி வைத்து வடிகட்டி வெல்லத் தண்ணீரை தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

அடுத்து மீண்டும் ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் 2 ஸ்பூன் நெய் ஊற்றி, 6 முந்திரிப் பருப்புகளை சேர்த்து வறுத்து தனியே எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அந்த கடாயில் மீதி இருக்கும் நெய்யிலே அரைத்து வைத்த பொட்டுக்கடலை மாவை சேர்த்து நன்றாக சிறிது நேரம் வறுத்து விடுங்கள். பிறகு கரைத்து வைத்திருக்கும் வெல்லக் கரைசலை இதில் ஊற்றி ஒரு சிட்டிகை உப்பையும், கால் டீஸ்பூன் ஏலக்காய் பொடியையும் சேர்த்து கைவிடாமல் நன்றாக கிளறிக் கொண்டே இருங்கள்.

- Advertisement -

வெல்லக்காரச்சலுடன் பொட்டுக்கடலை மாவு நன்றாக சேர்ந்து அல்வா போல் கடாயில் ஒட்டாமல் சுருண்டு வரும். இடையே மீதம் இருக்கும் நெய்யை சேர்த்து விடுங்கள். பேனில் ஒட்டாமல் வெல்லக்காரச்சலும் பொட்டுக்கடலை மாவு திரண்டு வந்தவுடன் அடுப்பை அணைத்து விடுங்கள். ஒரு தட்டில் சிறிது நெய் தடவி நீங்கள் செய்து வைத்திருக்கும் இந்த அல்வாவை அதில் ஊற்றி இரண்டு நிமிடம் ஆற விட்டு பின்பு இந்த முந்திரிகளை மேலே தூவி சிறு சிறு துண்டுகளாக கட் செய்து குழந்தைகளுக்கு சாப்பிட கொடுக்கலாம்.

இது வெளியிலே வைத்திருந்தால் இரண்டு நாட்கள் கூட நன்றாக இருக்கும். இதை பிரிட்ஜில் வைத்தால் ஒரு வாரம் வரை கூட கெடாமல் இருக்கும். இந்த பொட்டு கடலையில் அதிக அளவில் புரத சத்துக்களும், வைட்டமின் சத்துக்களும் அடங்கி இருக்கிறது. நரம்பு, எலும்பு, தசைகள், அனைத்தும் வலு பெரும். இப்படி ஏராளமான சத்துக்கள் இதில் உள்ளது.

இதில் சேர்த்திருக்கும் வெல்லம் பொட்டுக்கடலை முந்திரி அனைத்துமே குழந்தைகளின் உடலுக்கு மிகவும் ஆரோக்கியமான ஒன்று. இதை பெரியவர்கள் கூட பயமில்லாமல் சாப்பிடலாம். ஏனெனில் நாம் இதில் இனிப்பிற்கு வெல்லம் தான் சேர்த்து உள்ளோம். ஆகையால் ஆரோக்கியத்திற்கு எந்த கெடுதலும் கிடையாது. அனைவரும் செய்து சாப்பிட்டு பாருங்கள்.

- Advertisement -