
அசைவ பிரியர்களுக்கு இந்த இறால் என்றால் ரொம்பவும் பிடிக்கும். ஆனால் அதை வாங்கி எப்படி சுவையாக சமைப்பது என்பது வீட்டில் இருப்பவர்களுக்கு தெரியாது. அதனாலயே பெரும்பாலும் அதிக விலை கொடுத்து இந்த இறாலை ஹோட்டலுக்கு சென்று வாங்கி சாப்பிடுவார்கள். ஒரு முறை உங்களுடைய வீட்டிலேயே இறால் எடுத்து இந்த கிரேவியை செய்து பாருங்கள். நிச்சயமாக ருசியாக வரும். அசைவ பிரியர்களுக்காக பிரான் கிரேவி ரெசிபி இதோ உங்களுக்காக.
இந்த கிரேவிக்கு 1/4 கிலோ அளவு இறால் வாங்கி தோல் உரித்து அதன் உள்ளே இருக்கும் குடலை எடுத்து கொஞ்சமாக மஞ்சள் தூள் போட்டு நன்றாக கழுவி தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அதன் பின்பு இந்த கிரேவிக்கு ஒரு ஸ்பெஷல் மசாலா அரைக்க வேண்டும். அதற்கு 5 வர மிளகாய்களை வெந்நீரில் போட்டு 10 நிமிடம் ஊற வைத்துக் கொள்ளுங்கள்.
ஒரு மிக்ஸி ஜாரில் மிளகு – 1 ஸ்பூன், சீரகம் – 1/2 ஸ்பூன், சோம்பு – 1/2 ஸ்பூன், வர மல்லி – 1/2 ஸ்பூன், மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன், ஊற வைத்த மிளகாயை அப்படியே தண்ணீரோடு போட்டு, இந்த எல்லா பொருட்களையும் விழுதாக அரைத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
அடுப்பில் ஒரு கடாயை வைத்து 2 ஸ்பூன் – எண்ணெய் ஊற்றி, சோம்பு – 1/2 ஸ்பூன், பச்சை மிளகாய் – 1, கருவேப்பிலை – 1 கொத்து, மிகப் பொடியாக நறுக்கிய வெங்காயம் – 2, இஞ்சி பூண்டு விழுது – 1 டேபிள் ஸ்பூன், சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். இஞ்சி பூண்டு விழுதின் பச்சை வாடை நீங்கியதும் மிகப் பொடியாக நறுக்கிய தக்காளி பழம் – 2, இந்த மசாலாவுக்கு தேவையான அளவு உப்பு தூவி, நன்றாக வதக்கி விடுங்கள்.
வெங்காயம் தக்காளி எல்லாம் சேர்ந்து வதங்கி வந்த பிறகு அரைத்து வைத்திருக்கும் மசாலாவை ஊற்றி கிரேவிக்கு தேவையான அளவு தண்ணீரை ஊற்றி, தேவையான உப்பு போட்டு, நன்றாக கலந்து விட்டு ஒரு மூடி போட்டு இதை பச்சை வாடை போக கொதிக்க வைக்க வேண்டும். 5 லிருந்து 6 நிமிடம் அடுப்பை சிம்மில் வைத்து விடுங்கள். இடையிடையே மூடியை திறந்து கிளறி விடுங்கள்.
இந்த கிரேவி கொஞ்சம் கொதித்து, திக்காகி வந்ததும் சுத்தம் செய்து வைத்திருக்கும் இறாலை இதில் போட்டு, நன்றாக கலந்து விட்டு மூடி போட்டு மூன்றில் இருந்து நான்கு நிமிடங்கள் வேக வைத்து எடுத்தால் சூப்பரான பிரான் கிரேவி தயார். பொதுவாகவே இறால் சீக்கிரம் வெந்துவிடும். அதனால் அதை நீண்ட நேரம் வேக வைக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. உங்களுக்கு இந்த கிரேவி ரெசிபி பிடிச்சிருந்தா மிஸ் பண்ணாம ட்ரை பண்ணி பாருங்க. சுட சுட சாதம், சப்பாத்தி, தோசை, நான், பரோட்டா இவைகளுக்கு சூப்பரான சைடிஷ் ஆக இருக்கும்.