
நாளை ஆவணி மாதத்தில் வரக்கூடிய வளர்பிறை ஏகாதசி நாள் ஆகும். இம்மாதம் வளர்பிறை ஏகாதசியை ஆடி மாதம் போன்றே ’புத்திரதா ஏகாதசி’ என்று கூறுவார்கள். அதாவது புத்திர பாக்கியத்தை தரக்கூடிய அருமையான நாளாக இந்து சாஸ்திரத்தில் கருதப்படுகிறது. இதே மாதம் தேய்பிறை ஏகாதசியை ’அஜா ஏகாதசி’ என்று கூறுவார்கள். அஜா ஏகாதசியில் விரதமிருப்பவர்களுக்கு பல ஜென்ம பாவங்கள் நீங்குவதாக ஐதீகம் உண்டு. அந்த வகையில் நாளை புத்திரதா ஏகாதசியில் புத்திர பாக்கியம் வேண்டுபவர்கள் எப்படி விரதம் இருக்க வேண்டும்? எனும் விரத முறையை தான் இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவில் பகிர்ந்து கொள்கிறோம்.
நாளை ஆவணி மாதம் வரக்கூடிய வளர்பிறை ஏகாதசி அன்று அதிகாலையில் எழுந்து நீராடி சுத்த பத்தமாக விரதம் இருந்து பெருமாளை வேண்டி வணங்க வேண்டும். விரதம் இருக்கும் பொழுது துளசி நீரை தவிர வேறு எந்த ஆகாரத்தையோ, நீரையோ பருக கூடாது. உடல்நிலை காரணமாக முழு விரதம் கடைபிடிக்க முடியாதவர்கள் பால், பழம் போன்ற எளிய உணவுகளை எடுத்துக் கொள்ளலாம். குழந்தை வரம் வேண்டுபவர்கள் தம்பதிகளாக விரதம் இருப்பது இந்நாளில் நல்ல பலன் தரும்.
பூஜை அறையை சுத்தம் செய்து தெய்வ விக்கிரகங்களுக்கும், படங்களுக்கும் வழக்கம்போல அலங்காரம் செய்து கொள்ளுங்கள். பச்சரிசி மாவினால் மாக்கோலம் இட்டு வையுங்கள். பெருமாள் படத்தை சுத்தம் செய்து மஞ்சள், குங்குமம் இட்டு, துளசி மாலை சாற்றுங்கள். இந்த நாளில் விரதம் இருப்பவர்கள், துளசி இல்லாமல் விரதம் இருக்கக்கூடாது. துளசி செடிக்கு காலையிலேயே நீர் விட்டு சுத்தம் செய்து அபிஷேகம் செய்து மஞ்சள், குங்குமம் வைத்துக் கொள்ளுங்கள். ஒரு விளக்கு அங்கு முதலில் ஏற்றி வையுங்கள். துளசி செடியில் விஷ்ணு பகவானும், மகாலட்சுமியும் வாசம் செய்கின்றனர். ஏகாதசியில் விரதம் இருப்பவர்கள், முதலில் துளசி செடிக்கு விளக்கு ஏற்ற வேண்டும்.
அடுத்து பூஜை அறையில் நெய் அல்லது சுத்தமான நல்லெண்ணெய் ஊற்றி பெருமாளுக்கு விளக்கு ஏற்றி வையுங்கள். மகாலட்சுமி தாயாருக்கும் நெய் தீபம் ஏற்றுவது சிறப்பு! நைவேத்தியம் படைக்க சக்கரை பொங்கல் படைத்தால் போதுமானது. கலசத்தில் துளசி நீர் வைத்து, அதில் சிறிதளவு பச்சைக் கற்பூரம், ஏலக்காய், கிராம்பு போன்றவற்றை போட்டு வைக்கலாம். இந்த புனிதமான தீர்த்தத்தை வைத்து பெருமாளுடைய மந்திரங்கள், ஸ்தோத்திரங்கள் போன்றவற்றை உச்சரித்து பூஜை செய்ய வேண்டும்.
’ஓம் நமோ நாராயணாய’ என்னும் மந்திரத்தையும் நீங்கள் விடாமல் அந்த நாள் முழுவதும் ஜெபிக்கலாம். வேலை செய்து கொண்டே இந்த மந்திரத்தை ஜெபித்து வாருங்கள். பூஜை செய்ததும் வழக்கம் போல உங்களுடைய வேலைகளை நீங்கள் செய்யலாம். அன்றைய நாள் முழுவதும் விரதம் இருக்க வேண்டும். இறைவனுடைய நாமத்தை ஜெபிக்க வேண்டும். பின்னர் மாலை வேளையில் பெருமாள் கோவிலுக்கு சென்று தீபம் போட்டு, இறைவனை தரிசனம் செய்யுங்கள்.
இதையும் படிக்கலாமே:
பொருளாதாரப் பிரச்சினையை தீர்க்கும் ஆவணி செவ்வாய்
துளசி மாலை வாங்கி சாமிக்கு சாற்றுங்கள். பின்னர் அங்கு வரும் ஏழை எளியவர் ஒருவருக்காவது அன்னதானம் செய்யுங்கள். விரதம் இருக்கும் பொழுது செய்யும் அன்னதானம் நம் வேண்டுதல்களை சீக்கிரமே பலிக்கச் செய்யும் அற்புதமான செயலாகும். தானத்தில் சிறந்த அன்னதானத்தை மனமுவந்து உண்மையிலேயே பட்டினியில் வாடுபவர்களுக்கு செய்யுங்கள். இந்த ஏகாதசியில் இவ்விதம் இருந்து இவ்வாறு பூஜை செய்பவர்களுக்கு, விரைவிலேயே புத்திர பாக்கியம் உண்டாகும் என்பது ஆசைக்க முடியாத நம்பிக்கை.