
ரேஷன் கடையில் கொடுக்கும் துவரம் பருப்பை வைத்து சாம்பார் செய்வது வழக்கம் ஆனால் இந்த துவரம் பருப்பை வைத்து சூப்பரான மொறு மொறு வடையும் நாம் தயாரிக்க முடியும். ரொம்பவே ஆரோக்கியமும், ருசியும் நிறைந்துள்ள இந்த துவரம் பருப்பு வடை எப்படி ரேஷன் பருப்பிலும் தயாரிக்க இருக்கிறோம்? இதற்கு என்னென்ன தேவை? எப்படி சுடப் போகிறோம்? என்பதை பற்றிய சமையல் குறிப்பு தகவல்களை இந்த பதிவின் மூலம் இனி தெரிந்து கொள்வோம் வாருங்கள்.
துவரம் பருப்பு வடை செய்ய தேவையான பொருட்கள்:
ரேஷன் துவரம் பருப்பு – ஒரு கப், பெரிய வெங்காயம் – ஒன்று, பச்சை மிளகாய் – ஒன்று, பூண்டு பல் – 3, துருவிய இஞ்சி – அரை ஸ்பூன், நறுக்கிய கருவேப்பிலை, கொத்தமல்லி – சிறிதளவு, உப்பு – தேவையான அளவு, சோம்பு – ஒரு டீஸ்பூன்.
துவரம்பருப்பு வடை செய்முறை விளக்கம்:
முதலில் ரேஷன் துவரம் பருப்பை நன்கு சுத்தம் செய்ய வேண்டும். அதில் மற்ற பொருட்களும் சேர்ந்து இருக்க வாய்ப்புகள் உண்டு. நன்கு புடைத்து சுத்தம் செய்த பின்பு தண்ணீர் ஊற்றி நான்கைந்து முறை நன்கு கழுவி கொள்ளுங்கள். பின்னர் சுத்தமான தண்ணீர் ஊற்றி இரண்டு மணி நேரம் ஊற விட வேண்டும். இரண்டு மணி நேரம் ஊறிய துவரம் பருப்பை நன்கு தண்ணீர் இல்லாமல் வடிகட்டி எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
மற்ற தேவையான எல்லா பொருட்களையும் தயாராக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள். வடைக்கு எப்பொழுதும் போல பெரிய வெங்காயம், பச்சை மிளகாய் போன்றவற்றை பொடி பொடியாக நறுக்கி வைக்க வேண்டும். இஞ்சி பூண்டு பேஸ்ட் இதில் சேர்க்கக்கூடாது. இஞ்சி மற்றும் பூண்டை தனியாக நசுக்கி சேர்க்க வேண்டும். இஞ்சியை துருவி கொள்ளுங்கள் அல்லது சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள். பூண்டை தோலுடன் அப்படியே எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அப்போது தான் ஃப்ளேவர் சூப்பராக இருக்கும்.
இப்போது நீங்கள் ஒரு மிக்ஸி ஜாரை கழுவி எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஊறிய துவரம் பருப்பை சேர்த்து ஒன்றும் பாதியுமாக கொரகொரவென்று அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். அரைத்து எடுத்த துவரம் பருப்பு விழுதை ஒரு பாத்திரத்தில் மாற்றிக் கொள்ளுங்கள். அதில் நறுக்கிய வெங்காயம், நறுக்கிய பச்சை மிளகாய் பொடிப்பொடியாக நறுக்கி வைத்துள்ள இஞ்சி மற்றும் நசுக்கிய பூண்டு பற்களாகியவற்றை சேர்த்துக் கொள்ளுங்கள். பின்னர் இதனுடன் நீங்கள் நன்கு சுத்தம் செய்து கழுவி பொடி பொடியாக நறுக்கி வைத்துள்ள கருவேப்பிலை மற்றும் கொத்தமல்லி தழைகளையும் சேர்க்க வேண்டும்.
இதையும் படிக்கலாமே:
மணக்க மணக்க சவுத் இந்தியன் ஸ்டைல் வேர்க்கடலை சட்னி! வித்தியாசமான சுவையில் இப்படி ஒருமுறை ஈசியாக செஞ்சு பாருங்க 10 இட்லி கூட சலிக்காம சாப்பிடலாம்.
பின்னர் வடை நன்கு வாசமாக இருக்க சோம்பை கைகளால் கசக்கி சேருங்கள் அல்லது ஓரிருமுறை உரலில் இட்டு இடித்து சேர்க்கலாம். பின்னர் இதற்கு தேவையான அளவிற்கு உப்பு போட்டு கைகளால் நன்கு கலந்து கொள்ளுங்கள். பின்னர் வடை போல தட்டி சூடான எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்க வேண்டும். அதற்கு அடுப்பை பற்ற வைத்து அதில் வாணலியை வையுங்கள். தேவையான அளவுக்கு எண்ணெய் விட்டு சூடாக எண்ணெய் காய்ந்ததும், அடுப்பை மீடியமாக வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் ஒவ்வொரு வடைகளாக போட்டு இரண்டு புறமும் சிவக்க பொன்னிறமாக வறுத்து எடுத்து சாப்பிட்டு பாருங்கள், அவ்வளவு ருசியாக இருக்கும். ரேஷன் கடையில் கொடுக்கும் இந்த துவரம் பருப்பை வடை ரெசிபியாக இப்படியும் சுட்டு சாப்பிடலாமே!