
இன்றிலிருந்து உடல் எடையை குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள், ஏற்கனவே டயட்டில் இருப்பவர்கள் இந்த தோசையை தாராளமாக முயற்சி செய்து பார்க்கலாம். டயட்டில் இருப்பவர்களால் வயிறு ரொம்பவும் சாப்பிட முடியாது. ருசியாகவும் சாப்பிட முடியாது. டயட்டில் இருந்து அவதி படுபவர்களுக்காக வயிறு ரொம்பவும், ருசியாகவும் சாப்பிட அருமையான ஓட்ஸ் ரவா தோசை எப்படி செய்வது என்பதை பற்றிய குறிப்பைதான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இந்த சமையல் குறிப்பு நிச்சயம் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
முதலில் 1 கப் ஓட்ஸ் எடுத்துக் கொள்ளுங்கள். உங்கள் விருப்பம் தான். எந்த பிராண்டில் எந்த ஃபிளேவர் ஓட்ஸ் வாங்கினாலும், அது உங்களுடைய விருப்பம். அடுப்பில் ஒரு கடாயை வைத்து, அதில் எடுத்து வைத்திருக்கும் 1 கப் ஓட்ஸ் போட்டு இரண்டிலிருந்து மூன்று நிமிடங்கள் வறுத்துக் கொள்ள வேண்டும். வறுத்த இந்த ஓட்ஸ் நன்றாக ஆறியதும் மிக்சியில் போட்டு நைசாக பொடி செய்து கொள்ளுங்கள். கொரகொரப்பாக ஓட்ஸ் இருக்கக் கூடாது. நைசாக அரைச்சுக்கோங்க.
அடுத்து அகலமான ஒரு பாத்திரத்தில் அரைத்த ஓட்ஸ் 1 கப், ரவை 1/2 கப், அரிசி மாவு 1/2 கப், புளித்த தயிர் 2 டேபிள் ஸ்பூன், தண்ணீர் 2 கப், இந்த பொருட்களை எல்லாம் போட்டு கட்டி இல்லாமல் கரைத்து ஒரு மூடி போட்டு 10 நிமிடம் அப்படியே ஊற வைத்து விடுங்கள். ஏனென்றால் இதில் ரவை சேர்த்திருக்கின்றோம். அதில் இருக்கும் தண்ணீர் கொஞ்சம் உறிஞ்சி மாவு திக்காக நமக்கு கிடைத்திருக்கும்.
கரைத்து வைத்த மாவு 10 நிமிடம் ஊறிய பின்பு இந்த மாவில் பொடியாக நறுக்கிய வெங்காயம் – 1, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் – 2, பொடியாக நறுக்கிய கருவேப்பிலை – 1 கொத்து, இஞ்சி துருவல் – 1/2 ஸ்பூன், சீரகம் – 1/2 ஸ்பூன், பெருங்காயம் – 1/4 ஸ்பூன், பொடியாக நறுக்கிய மல்லி தழை – 1/2 கைப்பிடி அளவு, உப்பு தேவையான அளவு, போட்டு மாவை நன்றாக கலந்து விட்டு, மீண்டும் இந்த தோசை மாவில் தண்ணீரை ஊற்றி கரைக்க வேண்டும். இந்த தோசை மாவு ரவை தோசை மாவு பக்குவத்தில் நமக்கு நீர்க்க இருக்க வேண்டும்.
அடுப்பில் ஒருதோசை கல்லை வைத்து அந்த கல் நன்றாக சூடானதும், எண்ணெய் தொட்டு துடைத்து விடுங்கள். அதன் பின்பு இந்த மாவை எடுத்து ரவா தோசை ஊற்றுவது போலவே அப்படியே தோசை கல்லில் தெளித்து ஊற்ற வேண்டும். தோசை ஓட்டை ஓட்டையாக கிடைக்கும். மேலே எண்ணெய் விட்டு மிதமான தீயில் தோசையை பொறுமையாக வேக வையுங்கள். ஒரு பக்கம் பொன்னிறம் வந்ததும் தோசையை திருப்பி போட்டு மறுபக்கமும் வேகவைத்து சுட சுட எடுத்து பரிமாறினால் அருமையான மொறு மொறு தோசை தயார்.
இரவு உணவாகவும் இதை எடுத்துக் கொள்ளலாம். காலை உணவாகவும் இந்த தோசையை எடுத்துக் கொள்ளலாம். நல்ல ஆரோக்கியம் தரக்கூடிய ருசியை தரக்கூடிய சூப்பரான தோசை இது. தொட்டுக்கொள்ள கருவேப்பிலை சட்னி, கொத்தமல்லி சட்னி, புதினா சட்னி, என்று வைத்துக் கொண்டால் அது இன்னும் உடலுக்கு ஆரோக்கியம் தான். இந்த சிம்பிள் ரெசிபி பிடிச்சிருந்தா உங்க வீட்ல ட்ரை பண்ணி பாருங்க.