
காலை உணவிற்கு எப்போதும் இட்லி, தோசை, பொங்கல் இவை மட்டுமே அதிகமாக அனைவரது வீட்டிலும் சமைப்பதுண்டு. என்றாவது ஒரு நாள் பூரி செய்தோம் என்றால் அன்றைக்கு வீட்டிலுள்ள சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை குஷியாகி விடுவார்கள். அந்த அளவிற்கு பூரி என்றாலே அனைவருக்கும் மிகவும் பிடித்தமான ஒரு உணவாக உள்ளது. பூரி செய்வதற்கு நேரம் சற்று அதிகமாகும் என்ற காரணத்திற்காகவே அதனை அனைவரும் அடிக்கடி செய்வதில்லை. ஆனால் கோதுமை மாவு, மைதா மாவு இல்லாத சமயங்களிலும் இந்த இன்ஸ்டன்ட் பூரியை பத்தே நிமிடத்தில் செய்துவிடலாம். அதற்கு தொட்டுக்கொள்ள பட்டாணி, உருளைக்கிழங்கு மசாலாவை சேர்த்து சாப்பிடும் பொழுது இதன் சுவை அவ்வளவு அருமையாக இருக்கும். அதனை எவ்வாறு செய்வது என்பதை பற்றி தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.
பூரி செய்ய தேவையான பொருட்கள்:
ரவை – ஒன்றரைக் கப், எண்ணெய் – கால் லிட்டர், உப்பு – அரை ஸ்பூன்.
பட்டாணி உருளைக்கிழங்கு செய்ய தேவையான பொருட்கள்:
பெரிய உருளைக்கிழங்கு – 2, வெங்காயம் – 2, தக்காளி – 1, இஞ்சி பூண்டு விழுது – ஒரு ஸ்பூன், பச்சை மிளகாய் – 2, மிளகாய் தூள் – ஒரு ஸ்பூன், கரம் மசாலா – ஒரு ஸ்பூன், மஞ்சள் தூள் – அரை ஸ்பூன், உப்பு – முக்கால் ஸ்பூன், எண்ணெய் – 3 ஸ்பூன், கருவேப்பிலை – ஒரு கொத்து, கொத்தமல்லித்தழை – ஒரு கொத்து.
பூரி செய்முறை:
ஒரு மிக்ஸி ஜாரில் ஒன்றரைக் கப் ரவை சேர்த்து, நன்றாக மாவு பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு கிண்ணத்தில் அரைத்த மாவினை எடுத்துக்கொண்டு அதனுடன் அரை ஸ்பூன் உப்பு, சிறிதளவு தண்ணீர் சேர்த்து, அதனுடன் 2 ஸ்பூன் காய்ச்சிய எண்ணெய் சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ள வேண்டும். எப்போதும் பிசையும் சப்பாத்தி, பூரி மாவை விட சற்று இளகலாக பிசைய வேண்டும். அப்போது தான் மாவு சற்று ஊறி கெட்டியாகும். பிசைந்த மாவினை 10 நிமிடம் அப்படியே ஊற வைத்துவிட வேண்டும்.
பின்னர் ஊறிய மாவினை சிறு சிறு உருண்டைகளாக பிடித்துக் கொண்டு, எப்பொழுதும் பூரிக்கு மாவு தேய்ப்பது போல் தேய்த்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றவேண்டும். எண்ணெய் நன்றாக காய்ந்ததும், ஒவ்வொரு புரியாக எண்ணெயில் போட்டு பொரிக்க வேண்டும்.பூரி நன்றாக உப்பி வரும்வரையில் இரண்டு புறமும் திருப்பிப் போட்டு எடுக்க வேண்டும்.
பட்டாணி, உருளைக்கிழங்கு மசாலா செய்முறை
பின்னர் ஒரு கடாயை அடுப்பில் வைத்து, இரண்டு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து, அதனுடன் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், பச்சை பட்டாணி மற்றும் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து நன்றாக வதக்கி கொள்ள வேண்டும். பின்னர் மிளகாய்த்தூள், கரம் மசாலா மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து ஒரு முறை நன்றாக கிளறி விட்டு நறுக்கிய தக்காளியை சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ள வேண்டும்.
பின்னர் மசித்து வைத்துள்ள உருளைக்கிழங்கை சேர்த்து, அவற்றுடன் இரண்டு டம்ளர் தண்ணீர் மற்றும் முக்கால் ஸ்பூன் உப்பு சேர்த்து, நன்றாக கிளறி, 10 நிமிடம் கழித்து எடுத்து வைத்தால் சுவையான பட்டாணி, உருளைக்கிழங்கு தயாராகிவிடும். இறுதியாக கொத்தமல்லி மற்றும் கருவேப்பிலை தூவி, செய்து வைத்துள்ள பூரியுடன் சேர்த்து பரிமாறிக் கொடுத்தால் போதும். இதன் சுவை எத்தனை பூரி கொடுத்தாலும் அனைவரையும் சலிக்காமல் சாப்பிட வைக்கும்.