
திடீர் என்று வீட்டில் இருப்பவர்களுக்கு இனிப்பு சாப்பிட வேண்டும் என்று ஆசை வரும். அதாவது இனிப்பு போட்ட பலகாரம். கடையில் போய் தான் இனிப்பு பலகாரம் வாங்கி வர வேண்டும் என்று அவசியம் கிடையாது. உங்க வீட்டில் பழுத்த வாழைப்பழம், ரவை, வெல்லம் இருக்கா. யோசிக்காம பின் சொல்லக்கூடிய முறையில் இந்த ரவை இனிப்பு பணியாரம் செய்து பாருங்கள். சாப்பிடுவதற்கு அவ்வளவு ருசியாக இருக்கும். வெல்லம் சேர்த்து நம் வீட்டிலேயே ஆரோக்கியமான முறையில் செய்வதால் இதை குழந்தைகளுக்கு கொடுப்பதன் மூலம் வயிற்றுக்கும் எந்த கெடுதலும் இருக்காது. சட்டுனு செய்யக்கூடிய ஈவினிங் ஸ்நாக்ஸ் உங்களுக்காக இதோ.
ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் பழுத்த – 2 வாழைப்பழங்களை தோல் உரித்து வெட்டிப் போட்டுக் கொள்ள வேண்டும். ரவை – 1 கப், நாட்டு சர்க்கரை – 1/4 கப், தேங்காய் துருவல் – 1/4 கப், தண்ணீர் – 1/4 கப், ஊற்றி இந்த எல்லா பொருட்களையும் விழுது போல அரைக்க வேண்டும். (உங்களுடைய வீட்டில் வெல்லம் இருந்தால் அதை நன்றாக துருவி இதில் சேர்க்கலாம். அப்படி இல்லை என்றால் வெல்லத்தை தண்ணீரில் போட்டு கரைத்து இதில் சேர்த்துக் கொள்ளலாம். அது நம்முடைய விருப்பம் தான்.)
அரைத்த இந்த விழுதை ஒரு அகலமான பவுலில் மாற்றிக்கொள்ளுங்கள். இந்த மாவுடன் அரிசி மாவு – 2 டேபிள் ஸ்பூன், சோடா உப்பு – 2 சிட்டிகை, ஏலக்காய் தூள் – 1/4 ஸ்பூன், சேர்த்து எல்லாவற்றையும் ஒன்றாக கலந்தால் நமக்கு தேவையான பணியார மாவு தயார். இது ரொம்பவும் தண்ணியாக இருக்கக் கூடாது. இட்லி மாவு பதத்திற்கு ஓரளவுக்கு திக்காக இருக்க வேண்டும். அப்போதுதான் எண்ணெய் குடிக்காமல் வெந்து வரும்.
குழிப்பணியார கல்லை அடுப்பில் வைத்துக் கொள்ளுங்கள். அதில் நெய் அல்லது எண்ணெய் ஒவ்வொரு டேபிள் ஸ்பூன் ஊற்றி, அந்த எண்ணெய் சூடானதும் இந்த குழி பணியார மாவை, சிறிய சிறிய அளவுகளில் ஊற்றி மிதமான தீயில் ஒரு மூடி போட்டு இரண்டு நிமிடம் வரை வேக வைக்க வேண்டும். ஒரு பக்கம் நன்றாக சிவந்து வந்தது உடன், மீண்டும் திருப்பி போட்டு பொன்னிறமாக சிவந்து வரும் வரை காத்திருந்து, எடுத்து லேசாக ஆற வைத்து சாப்பிட்டு பார்த்தால், இதன் ருசி அவ்வளவு சூப்பராக இருக்கும்.
மிக மிக சுலபமான முறையில் நாவிற்கு சுவை தரும் இந்த ரெசிபியை செய்ய யாரும் மறக்காதீங்க. இதில் வாழைப்பழம் சேர்த்திருப்பதால் சோடா உப்பு அவசியம் சேர்க்க வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது. தேவைப்படுபவர்கள் சோடா உப்பு சேர்த்துக் கொள்ளலாம். வாழை மற்றும் பழம் மட்டும் சேர்த்து, சோடா உப்பு சேர்க்காமல் இந்த இனிப்பு பணியாரம் செய்யலாம்.
உங்களுடைய வீட்டில் வாழைப்பழம் இல்லை என்றால் வாழைப்பழத்தை தவிர்த்து விட்டு, சோடா உப்பு சேர்த்து மேல் சொன்னபடி ரவையை மட்டும் வைத்து பணியாரம் செய்தாலும் சூப்பராக தான் இருக்கும். உங்களுக்கு இந்த ரெசிபி பிடிச்சிருந்தா மிஸ் பண்ணாம ட்ரை பண்ணி பாருங்க.