
வளரும் குழந்தைகளுக்கு அவர்களின் வளர்ச்சிக்கு தேவையான புரோட்டீன் சத்து அதிகம் இருக்கும் உணவுகளை சமைத்துக் கொடுப்பது தாய்மார்களின் கடமையாகும். அதிலும் குழந்தைகள் அவற்றை விருப்பமாக சாப்பிட வேண்டும். இவ்வாறு புரோட்டீன் சத்து அதிகமுள்ள பன்னீரை உணவுடன் சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது. ஆனால் இதனை பலரும் வீட்டில் செய்வதில்லை. ஹோட்டல்களுக்கும், ரெஸ்டாரண்ட்களுக்கும் செல்லும் பொழுது பன்னீர் கிரேவியை ஆர்டர் செய்து சாப்பிடுகிறார்கள். ஏனென்றால் அங்கு செய்யப்படும் பன்னீர் கிரேவியின் சுவை நாம் வீட்டில் செய்யும் கிரேவியின் சுவை போன்று இல்லாமல் மிகவும் சூப்பராக இருக்கும். எனவே குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள். அவ்வாறு ஹோட்டலில் செய்யும் அதே சுவையில் இந்த பன்னீர் கிரேவியை எப்படி செய்ய வேண்டும் என்பதை பற்றி தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து போகின்றோம்.
தேவையான பொருட்கள்:
வெங்காயம் – 2, தக்காளி – 3, குடைமிளகாய் – 1, தனி மிளகாய் தூள் – அரை ஸ்பூன், தனியா தூள் – ஒரு ஸ்பூன், உப்பு – ஒரு ஸ்பூன், இஞ்சி பூண்டு விழுது – ஒரு ஸ்பூன், எண்ணெய் – 4 ஸ்பூன், நெய் – ஒரு ஸ்பூன், தனியா – ஒரு ஸ்பூன், சீரகம் – அரை ஸ்பூன், சோம்பு – கால் ஸ்பூன், மிளகு – 12, வர மிளகாய் – 6.
செய்முறை:
முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து, அதில் ஒரு ஸ்பூன் தனியா, அரை ஸ்பூன் சீரகம், கால் ஸ்பூன் சோம்பு, 12 மிளகு மற்றும் நான்கு வரமிளகாய் சேர்த்து நன்றாக வறுக்க வேண்டும். பிறகு இதனுடன் சிறிய துண்டு பட்டை, 2 ஏலக்காய், 5 கிராம்பு இவற்றையும் சேர்த்து நன்றாக வறுத்து, ஆற வைத்து, மிக்ஸி ஜாரில் சேர்த்து பொடியாக அரைத்துக்கொள்ள வேண்டும்.
பிறகு அதே கடாயில் ஒரு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து, பன்னீரை சிறு சதுரங்களாக வெட்டி சேர்த்து, அடுப்பை மிதமான தீயில் வைத்து, பன்னீரை எண்ணெயில் வறுக்க வேண்டும். பிறகு இதனுடன் கால் ஸ்பூன் மிளகாய் தூள் சேர்த்து ஒன்றாக கலந்து விட வேண்டும். பிறகு பன்னீரை தனியாக எடுத்து வைத்து அதே கடாயில் குடமிளகாய், வெங்காயம் இவற்றை க்யூப்களாக நறுக்கி சேர்த்து வதக்க வேண்டும்.
பின்னர் இவற்றை தனியாக எடுத்து வைக்க வேண்டும். பிறகு மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து ஒரு ஸ்பூன் எண்ணெய் மற்றும் நெய் சேர்க்க வேண்டும். பிறகு இதில் ஒரு வெங்காயத்தை பொடியாக நறுக்கி சேர்க்க வேண்டும். பின்னர் ஒரு ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கிக் கொள்ள வேண்டும். பிறகு இவற்றுடன் கால் ஸ்பூன் மிளகாய்தூள், ஒரு ஸ்பூன் தனியா தூள் சேர்த்து வதக்க வேண்டும்.
பின்னர் 2 தக்காளியை மிக்ஸியில் சேர்த்து அரைத்து, அந்த தக்காளி பேஸ்டையும் இவற்றுடன் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். பிறகு இதனுடன் உப்பையும் சேர்த்து கலந்து விட்டு, அடுப்பை மிதமான தீயில் வைத்து எண்ணெய் பிரிந்து வரும் வரை கொதிக்க விட வேண்டும். பிறகு இவற்றுடன் வதக்கி வைத்துள்ள பன்னீர், குடைமிளகாய், வெங்காயம் இவற்றையும் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். பிறகு இறுதியாக அரைத்து வைத்துள்ள மசாலா பொடியை இரண்டு ஸ்பூன் அளவு சேர்த்து வதக்கி விட்டு, மசாலா கெட்டியாகும் வரை அடுப்பை சிம்மில் வைத்து விட வேண்டும். சிறிது நேரத்தில் சுவையான கடாய் பன்னீர் தயாராகிவிடும்.