
இன்றைய நவீன உலகத்தில் ஃபாஸ்ட் ஃபுட் உணவுகளை தான் அனைவரும் விருப்பமாக சாப்பிடுகின்றனர். அந்த உணவுகளில் எப்பொழுதும் போல நாம் சமைத்து சாப்பிடும் காய்கறிகளை தான் அரை வேட்காட்டுடன் அல்லது வேக வைக்காமல் பச்சையாக கொடுக்கின்றனர். அதன் மீது கொஞ்சம் சில்லி சாஸ், சோயா சாஸ், மற்றும் மயோனைஸ் இது போன்ற உணவு பொருட்களை சேர்த்து கொடுக்கும் பொழுது அதன் சுவை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்தமானதாக இருக்கிறது. ஆனால் வீட்டில் சுத்தம் செய்து நன்றாக வேகவைத்து, சுவையாக சமைத்து கொடுத்தால் அதனை தவிர்த்து, இவ்வாறு அரைவேட்காட்டுடனிருக்கும் உணவுகளையே விருப்பமாக சாப்பிடுகின்றனர். குழந்தைகள் வீட்டிலேயும் காய்கறிகளை தட்டாமல் சாப்பிட அவர்களுக்கு பிடித்த சுவையில் இப்படி வெஜிடபிள் மோமோஸ் செய்து கொடுங்கள். இதன் சுவை குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். இதனை கோதுமை மாவு வைத்து எப்படி செய்ய வேண்டும் என்பதை பற்றி தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.
தேவையான பொருட்கள்:
கோதுமை மாவு – ஒரு கப், கேரட் – 1, கோஸ் – 150 கிராம், காளான் – 150 கிராம், பெரிய வெங்காயம் – 1, இஞ்சி சிறிய துண்டு – 1, பூண்டு – 7 பல், எண்ணெய் – 7 ஸ்பூன், தனி மிளகாய் தூள் – ஒரு ஸ்பூன், மிளகுத் தூள் – ஒரு ஸ்பூன், உப்பு – ஒரு ஸ்பூன், கொத்தமல்லி தழை – ஒரு கொத்து, சோயா சாஸ் – 2 ஸ்பூன்.
செய்முறை:
முதலில் ஒரு கப் கோதுமை மாவை ஒரு கிண்ணத்தில் சேர்த்து, அதனுடன் அரை ஸ்பூன் உப்பு சேர்த்து, கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி, சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ள வேண்டும். பிறகு இதனை ஒரு தட்டு போட்டு மூடி, 15 நிமிடத்திற்கு அப்படியே ஊறவிட வேண்டும்.
பின்னர் இஞ்சி மற்றும் பூண்டை மிகவும் பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். பிறகு வெங்காயம், கேரட், கோஸ் மற்றும் குடைமிளகாய் இவை அனைத்தையும் சிறு துண்டுகளாக நறுக்கி வைக்க வேண்டும். பின்னர் அடுப்பை பற்ற வைத்து, அதன் மீது ஒரு கடாயை வைத்து, இரண்டு ஸ்பூன் எண்ணெய் ஊற்ற வேண்டும்.
எண்ணெய் நன்றாக காய்ந்ததும் அதில் நறுக்கிய இஞ்சி, பூண்டை சேர்த்து வறுக்க வேண்டும். பிறகு வெங்காயத்தையும் சேர்த்து, பொன்னிறமாக வதக்கி வைத்த பின்னர், பொடியாக நறுக்கி வைத்துள்ள காய்கறிகளையும் சேர்த்து, அதனுடன் அரை ஸ்பூன் உப்பு சேர்த்து, நன்றாக வதக்கிக் கொள்ள வேண்டும்.
பிறகு ஒரு ஸ்பூன் மிளகாய்த்தூள் சேர்த்து வதக்கிய பின்னர், ஒரு ஸ்பூன் மிளகுத்தூள் சேர்த்து கிளறி விட வேண்டும். பிறகு இறுதியாக சோயா சாஸ் சேர்த்து நன்றாக கலந்து விட்டு, கொத்தமல்லித் தழை தூவி இறக்க வேண்டும். பின்னர் பிசைந்து வைத்துள்ள மாவை சிறு சிறு உருண்டைகளாக பிடித்து, அதனை பூரி கட்டையின் மீது வைத்து சப்பாத்தி போல் தேய்த்து கொள்ள வேண்டும்.
பிறகு அதில் ஒரு ஸ்பூன் காய்கறி மசாலா சேர்த்து, அதனை உங்களுக்கு வேண்டிய வடிவத்தில் மடித்து விட வேண்டும். அதாவது சோமாஸ் போன்று மடித்துக்கொள்ளலாம். பின்னர் அடுப்பின் மீது ஒரு பேன் வைத்து, அதில் 5 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, செய்து வைத்துள்ள ஒவ்வொரு மோமோஸ்களையும் எண்ணெயில் அடுக்கி வைத்து, மூடி போட்டு, 20 நிமிடம் அடுப்பை மிதமான தீயில் வைத்து வேக விட்டு, அதன் பின்னர் பரிமாறினால் சுவையான மோமோஸ் தயாராகிவிடும்.