
வாக்கு பஞ்சாங்கத்தின் படி சனிப்பெயர்ச்சி என்பது மார்ச் மாதம் 29ஆம் தேதி சனிக்கிழமை அன்று நிகழ இருக்கிறது. சனிப்பெயர்ச்சியால் பலவிதமான ராசிகளுக்கு பலவிதமான பலன்கள் உண்டாகும். ஒரு சில ராசிகளுக்கு சாதகமான பலன்களும் ஒரு சில ராசிகளுக்கு பாதகமான பலன்களும் உண்டாகும். அந்த பாதகமான பலன்களில் இருந்து வெளியே வருவதற்கு நாம் சில தெய்வங்களின் திருவடியில் சரணாகதி அடைய வேண்டும். அந்த தெய்வங்கள் யார் என்றும் அந்த தெய்வங்களை எந்த முறையில் சனிப்பெயர்ச்சி நாளன்று வழிபட்டால் சனிபகவானின் தாக்கத்திலிருந்து தப்பிக்க முடியும் என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.
நீதிமானாக கருதப்படுபவர் தான் சனி பகவான். நாம் நன்மைகள் செய்திருந்தோம் என்றால் சனிப்பெயர்ச்சியால் நமக்கு எந்தவித பாதிப்புகளும் ஏற்படாது. நாம் எந்த ஒரு செயலை செய்கிறோமோ அது இரட்டிப்பு மடங்காக நம்மை திரும்பி வந்து சேரும் காலம்தான் சனிப்பெயர்ச்சி காலம். அதனால் நன்மையை மட்டுமே செய்து நியாயமாக நீதி நேர்மையுடன் வாழ்பவர்களுக்கு சனிப்பெயர்ச்சியால் எந்தவித பாதிப்புகளும் ஏற்படாது. இருப்பினும் ஒரு சில தாக்கங்கள் அவர்களுக்கு ஏற்படும். சனிபகவானின் தாக்கத்திலிருந்து தப்பிப்பதற்கு நாம் மூன்று தெய்வங்களை சரணாகதி அடைய வேண்டும். அதுவும் சனிப்பெயர்ச்சி நடைபெறக்கூடிய அந்த நாளில் இந்த வழிபாட்டு முறைகளை நாம் பின்பற்றும்போது சனிபகவான் நம் மீது கருணைப் பார்வை பார்ப்பார் என்றே கூறலாம்.
முதலில் முழு முதல் கடவுளான விநாயகர் பெருமானை வழிபாடு செய்ய வேண்டும். அருகில் இருக்கக்கூடிய விநாயகர் ஆலயத்திற்கு ஒரு தேங்காயை எடுத்துக்கொண்டு செல்லுங்கள். அந்த தேங்காயை கையில் வைத்துக் கொண்டு விநாயகப் பெருமானை 27 முறை வலம் வந்து நம்முடைய உச்சந்தலையில் வைத்து விநாயகப் பெருமானை முழுமனதோடு வழிபாடு செய்துவிட்டு அந்த தேங்காயை சிதறு தேங்காயாக உடைக்க வேண்டும். இப்படி செய்வதன் மூலம் சனி பகவானின் தாக்கத்தை குறைத்துக் கொள்ள முடியும்.
அடுத்ததாக வாயு புத்திரனான ஹனுமானை வழிபாடு செய்ய வேண்டும். அருகில் இருக்கக்கூடிய ஹனுமான் ஆலயத்திற்கு சென்று அவருக்கு 27 வெற்றிலைகளில் ஸ்ரீ ராமஜெயம் என்று செந்தூரத்தில் எழுதி அதை மாலையாக கட்டி சாற்ற வேண்டும். 27 முறை அவரை வலம் வரவேண்டும். ஸ்ரீ ராமஜெயம் என்று 27 முறை பேப்பரில் எழுதியும் வைக்கலாம் 27 முறை மனதார அவருக்கு முன்பாக அமர்ந்து கூறவும் செய்யலாம். இப்படி செய்வதன் மூலமும் சனி பகவானின் தாக்கத்தை குறைத்துக் கொள்ள முடியும்.
அடுத்ததாக சனீஸ்வர பகவானின் குருவான காலபைரவரை நாம் சரணாகதி அடைந்தோம் என்றால் அவரின் அருளால் சனி பகவானின் தாக்கத்திலிருந்து தப்பிக்க முடியும். அன்றைய தினம் அருகில் இருக்கக்கூடிய கால பைரவரின் ஆலயத்திற்கு செல்லலாம் அல்லது வீட்டிலேயே கால பைரவரின் அஷ்டகத்தை படிக்கலாம். காலபைரவரின் மூல மந்திரத்தை கூறிவிட்டு நாய்க்கு அன்றைய தினம் உணவளிப்பதன் மூலம் காலபைரவரின் அருளால் சனி பகவானின் தாக்கத்தை குறைத்துக் கொள்ள முடியும்.
இந்த வழிபாடுகளோடு சிவபெருமானுக்குரிய கோளாறு பதிகத்தை பாராயணம் செய்வது, ஹனுமன் கவசத்தை பாராயணம் செய்வது போன்றவற்றையும் மேற்கொள்ளலாம். மேற்சொன்ன வழிபாட்டை சனி பெயர்ச்சி நாள் அன்று மட்டும்தான் செய்ய வேண்டும் என்று இல்லை. நமக்கு வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் செய்வதன் மூலம் நல்ல பலன்களை உண்டாகும். மேலும் அன்றைய தினத்தில் வறுமையால் கஷ்டப்படுபவர்களுக்கு உணவு தானம் செய்வதும் உடல் ஊனமுற்றவர்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி தருவதும் சிறந்த பலனை தரும்.
இதையும் படிக்கலாமே:கோரிக்கையை நிறைவேற்றும் குபேர பிரதோஷ பரிகாரம்
கர்ம வினையின் அடிப்படையில் நமக்கு பலன்களை தரக்கூடிய சனீஸ்வர பகவானை முழுமனதோடு எந்தவித பயமும் இல்லாமல் வழிபாடு செய்து அவரின் பரிபூரணமான அருளை பெற்று கர்ம வினைகளை தீர்த்து நிறைவான வாழ்க்கையை வாழ்வோம் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.