
திருக்கணித பஞ்சாங்கத்தின் படி இந்த வருடத்திற்கான சனிப்பெயர்ச்சி 29-3-2025 சனிக்கிழமை, நேற்று நேற்று இனிதே நடைபெற்றது. இதில் சில ராசிகளுக்கு சாதகமான பலன்கள் இருந்தது. சில ராசிகளுக்கு கொஞ்சம் சோதனை காலகட்டமாக இருக்கிறது. அதிலும் குறிப்பாக இந்த 6 ராசிக்காரர்கள் அடுத்த 2 1/2 வருடம் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும்.
அதற்காக பயந்து விடாதீர்கள். சனிபகவான் உங்களை சோதிப்பாரே தவிர, எந்த சூழ்நிலையிலும் கைவிடமாட்டார். நம்பிக்கையோடு அவரை வழிபாடு செய்பவர்களுக்கும், நேர் வழியில் நடப்பவர்களுக்கும் நிச்சயம் அவர் நன்மையை மட்டும் தான் செய்வார். சரி அடுத்த 2 1/2 வருடம் கவனமாக இருக்க வேண்டிய பட்டியலில் எந்தெந்த ராசிகள் இருக்கிறது.
அவர்கள் என்னென்ன விஷயங்களை பின்பற்றினால் வரும் பிரச்சினைகளில் இருந்து தப்பிக்கலாம். எந்த கோவிலுக்கு செல்ல வேண்டும், எந்த இறைவனை வழிபாடு செய்ய வேண்டும் என்பதை பற்றிய சில பரிகார முறைகளை தான் இன்றைய ஜோதிடம் சார்ந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம். மேஷம், சிம்மம், கன்னி, தனுசு, கும்பம், மீனம் இந்த 6 ராசிக்காரர்கள் அடுத்த இரண்டரை வருடத்திற்கு கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும்.
மேஷ ராசி அன்பர்களே, உங்களுக்கு ஏழரை சனி காலம் துவங்கி இருக்கிறது. உங்களுக்கு இந்த காலகட்டத்தில் பெருசாக எந்த பாதிப்பும் வராது என்றாலும், நீங்கள் சில விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். எந்த ஒரு வேலையும் பிளான் பண்ணாம பண்ணக்கூடாது. அவசர முடிவுகள் எடுக்கக் கூடாது. அடுத்த இரண்டரை ஆண்டுகளுக்கு நீங்கள் தினம் தினம் முருகனது திருப்பாதங்களை இருக்கப்பற்றிக் கொள்ளுங்கள். முருகனுக்கு உகந்த செவ்வாய்க்கிழமை, சஷ்டி, கிருத்திகை, தைப்பூசம், பங்குனி உத்திரம் எது வந்தாலும் சரி அந்த விசேஷத்தில் முருகனை பார்த்து வழிபாடு செய்வது சிறப்பான பலன்களை உங்களுக்கு கொடுக்கும். வாய்ப்பு கிடைத்தால் ஒரு முறை திருவெண்காடு புதன் ஸ்தலத்திற்கு சென்று வழிபாடு செய்வது நன்மையை கொடுக்கும்.
சிம்மராசி அன்பர்களே, இது உங்களுக்கு அஷ்டம சனி காலம். வார்த்தையில் ரொம்ப ரொம்ப கவனம் தேவை. நிதானமாக சிந்தித்துப் பேச வேண்டும். வாயால் உங்களுக்கு பிரச்சனை அதிகம் வரும். கூடுமானவரை வெளிநாட்டில் இருப்பவர்கள் விதியை மீறி நடக்கக் கூடாது. நேர்மையாக இருந்தால் உங்களுக்கு பிரச்சனைகள் இல்லை. குறுக்கு வழியை தேடாதீங்க. தேவை இல்லாத பிரச்சனைகளில் மன அமைதி கெடும், இரவு தூக்கம் இல்லாத சூழ்நிலை சில பேருக்கு உண்டாகும் கவனமாக இருக்கவும். ஏதாவது ஒரு மகான் வழிபாடு அல்லது சித்தர் வழிபாடு செய்வது உங்களுக்கு நன்மையை தரும். (காஞ்சி மகா பெரியவா, சாய்பாபா, வள்ளலார் இதுபோல மகான்கள்). வாய்ப்பு கிடைத்தால், பொங்கு சனி பகவான் திருக்கொள்ளிக்காடு தளத்திற்கு ஒருமுறை சென்று வருவது நன்மை தரும்.
கன்னி ராசி அன்பர்களே, இது உங்களுக்கு கண்டக சனி காலம். எதிரி தொல்லையால் அவதிப்படுவீர்கள். யாரை நம்பியும் எதற்கும் வாக்கு கொடுக்காதீர்கள். எந்த விஷயத்திலும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க. சில பல நன்மைகள் உங்களைத் தேடி வந்தாலும், அந்த நன்மையில் கூட கவனத்தோடு செயல்பட வேண்டிய காலம் இது. தினம் தினம் அனுமனை வழிபாடு செய்து, அனுமன் பாதங்களை இறுக்கப்பற்றி கொள்வது நல்லது. வாய்ப்பு கிடைத்தால் ஒரு முறை திருநாகேஸ்வரம்(நாகநாத சுவாமி திருக்கோவில்) சென்று ராகு பக வானை வழிபாடு செய்து வருவது நன்மை தரும்.
தனுசு ராசி அன்பர்களே, இது உங்களுக்கு அர்த்தாஷ்டம சனி காலகட்டம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். அடுத்தவர்கள் பிரச்சனையில் தலை கொடுக்கக் கூடாது. மூன்றாவது நபரை பற்றி பேசக்கூடாது. உங்களுடைய பிரச்சனைகளை வெளி ஆட்களுடன் பகிர்ந்து கொள்ளக்கூடாது. கவனமாக இருங்கள். உங்களுக்கும் சில பல நன்மைகளை சனி பகவான் கொடுப்பார். நீங்க தினமும் நரசிம்மரை வழிபாடு செய்வது நன்மையை தரும். வாய்ப்பு இருந்தால் ஒரு முறை சுக்கிரன் ஸ்தலமான கஞ்சனூர் சென்று வரவும்.
கும்ப ராசி அன்பர்களே, இது உங்களுக்கு பாத சனி நடக்கும் காலம். எந்த விஷயத்திலும் அவசரம் வேண்டாம். நிதானமாக இருக்க வேண்டும். உடல் உபாதைகளை உடனடியாக கவனிக்க வேண்டும். மருத்துவருடைய ஆலோசனையில் வியாதிகளுக்கு ட்ரீட்மென்ட் எடுத்துக் கொள்வது நல்லது. அடாவடியாக எந்த முடிவையும் எடுக்காதீங்க. குறித்த நேரத்திற்கு குறித்த வேலையை சோம்பேறித்தனம் இல்லாமல் செய்து விட்டால், நீங்க தப்பிச்சிட்டீங்க. நீங்கள் தினம் தினம் சிவபெருமான் வழிபாடு, பைரவர் வழிபாடு செய்யுங்கள். வரும் துன்பத்திலிருந்து தப்பிக்கலாம். வாய்ப்பு கிடைத்தால் சந்திர பகவானுக்குரிய ஸ்தலமான திங்களூர் ஒரு முறை சென்று வருவது நன்மை தரும்.
மீன ராசி அன்பர்களே இப்போது உங்களுக்கு ஜென்ம சனி காலகட்டம். உங்களுக்கு சனி பகவான் சில பல தொந்தரவுகளை கொடுப்பார். அதே சமயம் சில பல நன்மைகளையும் செய்து கொடுப்பார். எல்லா விஷயத்திலும் பொறுமையாக இருக்க வேண்டும். நீண்ட தூர பயணத்தின் போது வண்டி வாகனம் ஓட்டும் போது உணவு சம்பந்தப்பட்ட விஷயத்தில் எல்லாம் சரியாக இருங்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். அடுத்தவர்களுடைய பேச்சுக்கு மரியாதை கொடுத்து நடக்க வேண்டும். நீங்கள் தினம் தினம் விநாயகர் வழிபாடு செய்தால் தப்பித்துக் கொள்ளலாம். கீழ்பெரும்பள்ளம் கேது பகவானுக்கு உரிய ஸ்தலத்திற்கு வாய்ப்பு கிடைத்தால் ஒரு முறை சென்று வாருங்கள்.