
புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய நவராத்திரியை தான் பலரும் அதிக அளவில் வழிபாடு செய்வார்கள். ஆனால் தை மாதத்தில் வரக்கூடிய நவராத்திரியை வழிபாடு செய்யாமல் விட்டுவிடும் வழக்கமும் இருக்கிறது. தை மாதத்தில் வரக்கூடிய இந்த நவராத்திரியை நாம் சியாமளா நவராத்திரி என்று கூறுவது உண்டு. இந்த சியாமளா நவராத்திரி சமயத்தில் வீட்டில் எளிமையான முறையில் பூஜை செய்வதன் மூலம் நம்முடைய வாழ்க்கையில் நல்ல மகிழ்ச்சி உண்டாகும். மேலும் நம் குடும்பத்தில் இருக்கக்கூடிய ஒவ்வொருவருக்கும் புத்தி கூர்மை ஏற்பட்டு சிறப்பான வாழ்க்கையை வாழ்வார்கள். அப்படிப்பட்ட சியாமளா நவராத்திரியில் எந்த முறையில் வழிபாடு செய்ய வேண்டும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.
சியாமளா நவராத்திரி என்பது ஒவ்வொரு வருடமும் தை மாதத்தில் அமாவாசை முடிந்த மூன்றாவது நாள் அதாவது மூன்றாம் பிறை சந்திர தரிசன நாளன்று தொடங்கி தொடர்ச்சியாக 9 நாட்கள் நடைபெறக்கூடிய நவராத்திரி ஆகும். அதன் அடிப்படையில் இந்த வருடம் ஜனவரி மாதம் 30 ஆம் தேதி சியாமளா நவராத்திரி ஆரம்பம் ஆகிறது. இது பிப்ரவரி மாதம் 7ஆம் தேதி நிறைவடைகிறது.
இந்த நாளில் நாம் வீட்டில் கலசம் வைத்து வழிபாடு செய்தோம் என்றால் நம் வீட்டில் அளவில்லாத செல்வங்கள் பெருகும். யார் ஒருவர் புத்தி கூர்மையுடனும் ஞானத்துடன் செயலாற்றுகிறார்களோ அவர்களுக்கு வெற்றி கிடைக்கும். அந்த புத்தி கூர்மையையும், ஞானத்தையும் அருளக்கூடிய சரஸ்வதியின் மறு அவதாரமாக திகழக்கூடியவள் தான் சியாமளா தேவி. அப்படிப்பட்ட சியாமளா தேவிக்குரிய நவராத்திரி சமயத்தில் வீட்டில் தினமும் 9 நாட்கள் எளிமையான முறையில் பூஜை செய்தோம் என்றால் நம்முடைய வாழ்க்கையில் நாம் எடுக்கக்கூடிய முடிவுகள் சிறப்பான முடிவுகளாக அமைவதோடு அதனால் நாம் நல்ல வாழ்க்கையையும் அமைத்துக் கொள்ள முடியும்.
இந்த சியாமளா நவராத்திரியில் வீட்டில் கலசம் வைத்து வழிபாடு செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள் ஜனவரி மாதம் 30ஆம் தேதி பிரம்ம முகூர்த்த நேரத்தில் கலசம் கட்ட வேண்டும். இதற்கு பூஜை அறையில் ஒரு இடத்தை சுத்தம் செய்து பச்சரிசி மஞ்சள் தடவி அதற்கு மேல் பச்சரிசி மாவினால் கோலம் போட்டுக் கொள்ளுங்கள். பிறகு அந்த இடத்தில் தட்டை வைத்து அதற்கு மேல் சிவப்பு நிற துணியை விரித்து அதற்கு மேல் பச்சரிசியை பரப்பிக் கொள்ளுங்கள். வீட்டில் இருக்கக்கூடிய கலச சொம்பை எடுத்து சுத்தம் செய்து கலச நூலை அதன் கழுத்தில் மூன்று முறையோ அல்லது ஒன்பது முறையோ சுற்றி வைக்க வேண்டும்.
பிறகு அந்த சொம்பிற்குள் ஒரு எலுமிச்சம் பழம், ஒரு ரூபாய் நாணயம், சிறிது பச்சை கற்பூரம், சிறிது ஜவ்வாது போட்டு எச்சில் படாத சுத்தமான தண்ணீரை எடுத்து ஊற்ற வேண்டும். பிறகு 9 மா இலைகளை சுத்தம் செய்து அதற்கு நடுவே சந்தனம் குங்குமம் வைத்து காம்புகள் சொம்புக்குள் இருப்பது போல் வைக்க வேண்டும். அடுத்ததாக நல்ல தேங்காயாக ஒரு தேங்காயை எடுத்து சுத்தம் செய்து அது முழுவதும் மஞ்சளை தடவி நன்றாக காய வைத்து அந்த மஞ்சள் தேங்காயில் மூன்று இடத்தில் சந்தனம் குங்குமம் வைத்து அந்த மாவிலைக்கு மேல் வைத்து விட வேண்டும். பிறகு இந்த கலசத்திற்கு பச்சை நிற வஸ்திரத்தை கட்டி விட வேண்டும். இதுதான் கலசம் கட்டும் முறை. இந்த கலசத்திற்கு முன்பாக தினமும் நாம் வழிபாடு செய்தோம் என்றால் சியாமளா தேவியின் அருளால் நன்மைகள் உண்டாகும்.
இந்த சியாமளா நவராத்திரியில் கண்டிப்பான முறையில் தாம்பாள தட்டு வைக்க வேண்டும். இந்த தாம்பாள தட்டை கலசம் வைப்பவர்களும் வைக்க வேண்டும். கலசம் வைக்காதவர்களும் வைக்கலாம். இப்படி வைப்பதன் மூலம் கண்டிப்பான முறையில் சியாமளா தேவியின் அருளை நம்மால் பெற முடியும். இதற்கு ஒரு தாம்பாள தட்டை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் முழு தேங்காய், வாழைப்பழம், வாசனை நிறைந்த மலர், சிறிய முகம் பார்க்கும் கண்ணாடி, கண்ணாடி வளையல், பச்சை நிற துணி, தங்கம், வெள்ளி போன்றவற்றால் செய்யப்பட்ட நகை அல்லது நாணயம் இவற்றை வைத்து விட வேண்டும்.
தினமும் இதில் இருக்கக்கூடிய பூவையும் பழத்தையும் மட்டும் மாற்றிக்கொள்ளுங்கள். மற்றவை அப்படியே இருக்கட்டும். இந்த தாம்பாளத்தை வைத்து வழிபாடு செய்தாலும் சியாமளா தேவியின் அருளை நம்மால் பரிபூரணமாக பெற முடியும்.
இதையும் படிக்கலாமே:முன்னோர்களின் தோஷம் நீங்கி செல்வ செழிப்புடன் வாழ
ஒவ்வொரு தெய்வத்திற்கும் ஒவ்வொரு விதமான சக்திகள் இருக்கும். அந்த சக்திகளின் அடிப்படையில் அந்த தெய்வத்தை நாம் வழிபட்டால் நம்முடைய வேண்டுதல்கள் நிறைவேறும். இன்றைய காலகட்டத்தில் பலரும் சிறந்த முடிவை எடுக்காமல் கஷ்டப்பட்டு கொண்டு இருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்களும் சிறப்பான வாழ்க்கை வாழ்வதற்கு சியாமளா நவராத்திரி வழிபாடு நல்ல வழி காட்டும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.