
சிவன் கோவில் மட்டுமல்ல, பொதுவாகவே ஒரு கோவிலுக்கு நீங்கள் தானம் செய்யும் பொருட்களுக்கும், அதனால் உண்டாகக் கூடிய பலன்களுக்கும் தொடர்பு உண்டு. அம்மன் கோவில்களில் மஞ்சள் தானம் செய்ய, மாங்கல்ய பலம் நீடிக்கும். கோவிலில் அன்னதானம் செய்பவர்களுக்கு, செல்வம் பெருகும். இந்த வகையில் சிவன் கோவிலில் எந்தெந்த பொருட்களை தானம் செய்தால் நோய் நொடிகள் தீரும்? என்னும் ஆன்மிகம் சார்ந்த தகவலை தான் இந்த பதிவின் மூலம் பகிர்ந்து கொள்ள இருக்கிறோம்.
சிவன் கோவிலில் பிரதோஷ நாட்களில், அபிஷேக பொருட்களை தானம் செய்பவர்களுக்கு, செய்த பாவங்கள் எல்லாம் நீங்கி நன்மைகள் உண்டாகும். தீராத நோய் நொடிகள் தீருவதற்கு சிவன் கோவிலில் நல்லெண்ணெய் அல்லது இலுப்பை எண்ணெய் வாங்கிக் கொடுப்பது சிறந்த பலன்களை அளிக்கும் என்பது ஐதீகம். கோவிலில் சிவனுக்கு விளக்கு ஏற்றுவதற்கு இலுப்பை எண்ணெய் மற்றும் நல்லெண்ணெய் பயன்படுத்துகிறார்கள்.
இதில் ஏதாவது ஒன்றை வாங்கி கொடுத்தால் எப்பேர்பட்ட தீராத நோய்களும் குணமடையும் என்பது நம்பிக்கை. விளக்கு ஏற்றும் திரியை கூட நீங்கள் தானம் செய்ய, நீண்ட கால வலி, உடல் ரீதியான துன்பங்கள் மறைந்து நிவாரணம் கிடைக்கும். துப்புரவு பணி செய்ய தென்னந்துடைப்பம் வாங்கி கொடுக்க கொப்புளங்கள், கட்டிகள் போன்ற பிரச்சனைகளில் இருந்து குணம் காணலாம். சிவன் சொத்து குல நாசம் என்பார்கள். சிவனுக்கு நீங்கள் வாங்கிக் கொடுக்கும் ஒவ்வொரு பொருளும் அது அவருடைய சொத்தாகவே மாறிவிடுகிறது.
சிவபெருமானுக்கு யாகங்கள் செய்யும் பொழுது, அதற்குரிய குச்சிகளை வாங்கி கொடுத்தால் பெரும் பிணி தீரும். வியாதிகள் மூலம் அதிக அளவு தொந்தரவுகளை தொடர்ந்து சந்தித்து வருபவர்கள், இந்த தானத்தை செய்யலாம். குச்சிகளை சேகரித்து அதை நன்கு வெயிலில் காய வைத்து ஒரே அளவில் கட்டுகளாக கட்டிக் கொள்ள வேண்டும். இந்த யாக குச்சிகளை கோவிலில் சம்பந்தப்பட்டவர்களுக்கு சொல்லி, தானம் கொடுக்க வேண்டும். எவ்வளவு குச்சி கட்டுகள் யாகம் செய்ய நீங்கள் தானம் கொடுக்கிறீர்களோ, அவ்வளவு சீக்கிரம் உங்களுக்கு உடல் ரீதியாக ஏற்பட்டுள்ள தொந்தரவுகள் தீரும்.
அடிக்கடி சிறு சிறு உடல் உபாதைகள் மூலம் தொந்தரவுகளை சந்தித்து வருபவர்கள், அதிலிருந்து முழுமையான நிவாரணத்தை விரும்புபவர்கள் திங்கட் கிழமைகளில் சோமவார விரதம் இருந்து சிவபெருமான் கோவிலில் பச்சரிசி மாவினை தானம் செய்யலாம். சுத்தமான பச்சரிசியை ஊற வைத்து அதை வெயிலில் நன்கு உலர்த்தி காய வைத்து பின்னர் மெஷினில் கொடுத்து அரைத்து வைத்துக் கொள்ளுங்கள். இந்த பச்சரிசி மாவை தானமாக கொடுக்க வேண்டும். இந்த பச்சரிசி மாவை கோலம் போடுவதற்கு பயன்படுத்துமாறு சொல்லிக் கொடுக்க வேண்டும்.
இதையும் படிக்கலாமே:
கடன் தீர எமகண்ட நேர பரிகாரம்
சிவன் கோவில்களில் கோலம் போடுவதற்கு இந்த பச்சரிசி மாவினை நம் கையால் தயார் செய்து தானம் கொடுத்து வந்தால், அதை உண்ண வரும் சிறு உயிர்கள் மூலம் நமக்கு வரக்கூடிய சிறு சிறு உடல் உபாதைகள், தொடர்ந்து பிரச்சினைகளை கொடுக்கக்கூடிய தொந்தரவுகள், நோய் நொடிகள், பிணிகள் என்று நம்மை படுத்திக் கொண்டிருக்கும் அனைத்திற்கும் ஒரு முடிவு பிறக்கும் என்பது நம்பிக்கை. சிவன் கோவிலிலிருந்து விபூதியைத் தவிர எதுவும் எடுத்து வரக்கூடாது. அங்கு இருக்கும் வில்வ இலைகளை கூட, நாம் வீட்டிற்கு எடுத்து வந்து பயன்படுத்தக் கூடாது. வில்வம், எண்ணெய், அபிஷேகப் பொருட்கள், விளக்கு திரி போன்ற கோவிலுக்கு தேவைப்படக்கூடிய எண்ணற்ற பொருட்களை நாம் கேட்டு அறிந்து, தானம் கொடுப்பதன் மூலம், சிவ அருள் நமக்கு கிடைத்து, ஆரோக்கியமான நல்வாழ்வு கிட்டும்.