- Advertisement -
சமையல் குறிப்புகள்

இந்த ரகசிய மசாலாவை பயன்படுத்தி ஒரு முறை சுவையான புடலங்காய் பொரியல் செய்து பாருங்கள். வேண்டாம் என்று சொல்பவர்களும் தட்டாமல் வாங்கி சாப்பிடுவார்கள்

- Advertisement -

பலருக்கும் காய்கறி என்றாலே கசப்பான விஷயம் தான். யாரும் இதனை விரும்பி சாப்பிடுவதில்லை. ஒரு சிலர் உடலுக்கு ஊட்டச்சத்து வேண்டுமே என்று சாப்பிடுகிறார்கள். ஒருசிலர் எதுவானாலும் பரவாயில்லை என்று இவற்றை ஒதுக்கவே முயற்சி செய்வார்கள். அவ்வாறு பலரும் விரும்பப்படாத ஒரு காய் புடலங்காய். ஒரு சில வீடுகளில் இவற்றை சமைத்து இருக்கவே மாட்டார்கள். ஆனால் இந்த புடலங்காயில் நீர் சத்து அதிகமாக இருக்கிறது. உடல் உஷ்ணத்தை குறைக்க வல்லது. இதனை வாரத்திற்கு ஒரு முறை உணவில் சேர்த்துக் கொள்வது என்பது மிகவும் நன்மை தரக்கூடியதாக இருக்கிறது. அவ்வாறு இந்த புடலங்காயை மிகவும் சுவையாக எப்படி செய்வது என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

தேவையான பொருட்கள்:
புடலங்காய் – கால் கிலோ, பெரிய வெங்காயம் – 1, எண்ணெய் – 5 ஸ்பூன், கடுகு – அரை ஸ்பூன், உளுத்தம் பருப்பு – அரை ஸ்பூன், கருவேப்பிலை – ஒரு கொத்து, மிளகாய் தூள் – ஒரு ஸ்பூன், உப்பு – முக்கால் ஸ்பூன், வேர்க்கடலை – ஒரு கைப்பிடி, காய்ந்த மிளகாய் – 4.

- Advertisement -

செய்முறை:
முதலில் புடலங்காயயின் உள்ளிருக்கும் விதைகளை நீக்கி தோல் சீவி பொடியாக நறுக்கிக் கொள்ளவேண்டும். பின்னர் வெங்காயத்தை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவேண்டும். அதன் பிறகு ஒரு மிக்ஸி ஜாரில் வேர்கடலை மற்றும் 4 காய்ந்த மிளகாய் சேர்த்து சற்று கொரகொரப்பாக அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு ஒரு கடாயை அடுப்பின் மீது வைத்து ஐந்து ஸ்பூன் எண்ணெய் ஊற்ற வேண்டும். எண்ணெய் நன்றாக காய்ந்ததும் அரை ஸ்பூன் கடுகு, அரை ஸ்பூன் உளுத்தம் பருப்பு சேர்த்து தாளிக்க வேண்டும். பின்னர் நறுக்கி வைத்துள்ள வெங்காயம் மற்றும் கறிவேப்பிலையை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.

- Advertisement -

வெங்காயம் நன்றாக வதங்கிய பின்னர் நறுக்கி வைத்துள்ள புடலங்காயை சேர்த்து சிறிது நேரம் வதக்க வேண்டும். இதனுடன் உப்பு மற்றும் கால் டம்ளர் தண்ணீர் சேர்த்து நன்றாக வேக வைக்கவேண்டும். புடலங்காய் பாதியளவு வெந்ததும் அதனுடன் ஒரு ஸ்பூன் மிளகாய்த்தூள் சேர்த்து நன்றாகக் கலந்துவிட வேண்டும்.

மிளகாய்த்தூளின் பச்சை வாசனை சென்றதும் அரைத்து வைத்துள்ள வேர்க்கடலை மற்றும் காய்ந்த மிளகாய் மசாலாவை இதனுடன் சேர்த்து நன்றாக பிரட்டி விட வேண்டும். இவை அனைத்தும் ஒன்று சேர்ந்து நன்றாக வேகும் வரை ஒரு தட்டு போட்டு மூடி அடுப்பை சிம்மில் வைக்க வேண்டும். ஐந்து அல்லது ஏழு நிமிடங்கள் கழித்து தட்டை திறந்து மீண்டும் ஒருமுறை நன்றாக கலந்துவிட வேண்டும்.

அவ்வளவுதான் சுவையான புடலங்காய் மசாலா பொரியல் தயாராகிவிட்டது. இதனை அனைத்து விதமான சாதத்துடனும் சேர்த்து சாப்பிடலாம். அல்லது சுட சுட சாதத்துடன் இந்த பொரியலை மட்டும் சேர்த்து பிசைந்தும் சாப்பிடலாம். அவ்வளவு அருமையான சுவையில் நாவில் எச்சில் சொட்டும் அளவிற்கு இருக்கும்.

- Advertisement -