- Advertisement -
சமையல் குறிப்புகள்

எலுமிச்சை பழ சாதத்துடன் இந்த ஒரு பொருளை சேர்த்து சமைத்து பாருங்கள். சுவையும், மணமும் எப்போதும் போல இல்லாமல் அதிகப்படியான சுவையுடன் இருக்கும்

- Advertisement -

காலையில் எழுந்து வீட்டு வேலைகளை முடித்து வேலைக்கு செல்லும் பெண்கள் தங்களுக்கு தேவையான மதிய உணவை தயார் செய்து கொள்வதற்கு நேரம் குறைவாக இருக்கின்ற சமயத்தில் தயிர் சாதம், லெமன் சாதம், புளியோதரை போன்ற வெரைட்டி சாதத்தை தான் செய்து கொள்வார்கள். இந்த எலுமிச்சை பழத்தில் விட்டமின் சி ஊட்டச் சத்து இருப்பதால் உடல் நலத்திற்கும் நல்ல ஊட்டச் சத்தைக் கொடுக்கிறது. எனவே இதனை அடிக்கடி சாப்பிடுவது தவறொன்றும் இல்லை. ஆனால் இதனை சமைக்கும் பொழுது இதனுடன் இந்த ஒரு பொருளை மட்டும் சேர்த்துக் கொண்டால் போதும் எப்போதும் செய்யும் லெமன் சாதத்தை விட அதிகப்படியான சுவையுடன் இருக்கும். வாருங்கள் இதனை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்:
சாதம் – கப், எலுமிச்சை பழம் – 2, கடுகு – அரை ஸ்பூன், உளுந்து – அரை ஸ்பூன், கடலைப்பருப்பு – ஒரு ஸ்பூன், வேர்க்கடலை ஒரு ஸ்பூன் முந்திரி 5 வெந்தயம் – கால் ஸ்பூன், சீரகம் – கால் ஸ்பூன், மஞ்சள் தூள் – கால் ஸ்பூன், பெருங்காயத்தூள் – கால் ஸ்பூன், எண்ணெய் – 6 ஸ்பூன், வரமிளகாய் – 3, பச்சை மிளகாய் – 3, மா இஞ்சி சிறிய துண்டு – 2, கருவேப்பிலை – ஒரு கொத்து, கொத்தமல்லித்தழை – ஒரு கொத்து, உப்பு – ஒரு ஸ்பூன்.

- Advertisement -

செய்முறை:
முதலில் மூன்று கப் சாதத்தை ஒரு கிண்ணத்தில் தனியாக எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் பச்சை மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவேண்டும். அதேபோல் மா இஞ்சியையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவேண்டும். எப்பொழுதும் சேர்க்கும் இஞ்சியை விட இந்த மா இஞ்சியை தயிர் சாதம் மற்றும் எலுமிச்சை பழ சாதத்துடன் சேர்த்து செய்யும் பொழுது நல்ல மணத்துடன் சுவையாக இருக்கும். பிறகு இரண்டு எலுமிச்சை பழத்தை சாறு பிழிந்து கொட்டைகள் இல்லாமல் தனியாக வடிகட்டி வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் அடுப்பை பற்ற வைத்து, அதன் மீது ஒரு கடாயை வைத்து, எண்ணெய் ஊற்ற வேண்டும். எண்ணெய் நன்றாக காய்ந்ததும் அரை ஸ்பூன் கடுகு, அரை ஸ்பூன் உளுந்து மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும். பின்னர் இவை பொரிந்ததும் கடலைப்பருப்பு, வேர்க்கடலை மற்றும் முந்திரி பருப்பு சேர்த்து பொன்னிறமாக வறுத்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

பிறகு இவற்றுடன் வரமிளகாய், மா இஞ்சி மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். பின்னர் கால் ஸ்பூன் மஞ்சள் தூள், கால் ஸ்பூன் பெருங்காயத்தூள் சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும். பிறகு இவை அனைத்தும் எண்ணெயில் நன்றாக வதங்கியதும் இவற்றுடன் எலுமிச்சை பழச்சாறு சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும்.

பின்னர் இறுதியாக உப்பு சேர்த்து ஒரு முறை கலந்து விட்டு, அடுப்பை அனைத்துவிட வேண்டும். பிறகு இந்த கலவையை கிண்ணத்தில் வைத்துள்ள சாதத்துடன் சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும். பிறகு இறுதியாக கொத்தமல்லி தழையை பொடியாக நறுக்கி சேர்த்து கலந்து விட்டால் போதும் சுவையான லெமன் சாதம் தயாராகிவிடும்.

- Advertisement -