
நவகிரகங்களின் அருளால்தான் ஒருவர் நன்றாக வாழ்வதும் மோசமான நிலைக்குப் போவதும் அமைகிறது. நவகிரகங்கள் நம்முடைய கர்ம வினைகளின் அடிப்படையில் தான் செயல்படுகிறார்கள். மேலும் ஒவ்வொரு கிரகமும் பிறகிரகத்துடன் சேரும்பொழுது அந்த செயற்கையின் பலனாலும் நமக்கு பாதிப்புகள் என்பது உண்டாகும். பிறப்பு ஜாதகத்தில் நவகிரகங்கள் அமைந்திருக்கும் இடம் மட்டுமே தான் நம்முடைய கர்ம வினைகளின் அடிப்படையில் நடக்கிறது. அதற்கு பிறகு வரக்கூடிய பெயர்ச்சிகள், சேர்க்கைகள் போன்றவை பிரபஞ்சத்தின் அடிப்படையில் நடை பெறுகின்றன. இப்படி நடைபெறுவதால் பலருக்கும் சாதகமான சூழ்நிலையும் உண்டாகும் பாதகமான சூழ்நிலையும் உண்டாகும்.
இதில் சுக கிரகங்கள் என்றும் அசுப கிரகங்கள் என்றும் இருவகைகளாக பிரிப்பதுண்டு. சுப கிரகங்களில் ஒருவராக திகழக் கூடியவர் தான் சுக்கிர பகவான். சுக்ர பகவான் நம்முடைய அன்றாட வாழ்க்கைக்கு தேவையான பண வரவை தருவதோடு குடும்பத்தில் மகிழ்ச்சியையும் சந்தோஷத்தையும் தரக்கூடியவர். இவரால் ஏதேனும் தோஷங்கள் ஏற்பட்டிருக்கும் பட்சத்தில் குடும்பத்தில் இருக்கக்கூடிய தம்பதிகளுக்கு இடையே சண்டை சச்சரவுகள் ஏற்படுவதோடு பண நெருக்கடியையும் சந்திக்க நேரிடும். அப்படிப்பட்ட சுக்ர தோஷத்தை நீக்குவதற்கு செய்ய வேண்டிய ஒரு பரிகாரத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
சுக்கிர பகவானால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் நீங்குவதற்கு பலவிதமான பரிகாரங்களும் வழிபாட்டு முறைகளும் இருக்கின்றன. சுக்கிர பகவானுக்குரிய அதிதேவதை மகாலட்சுமி தாயார் திகழ்கிறார். மேலும் வெள்ளிக்கிழமை உகந்ந கிழமையாக திகழ்கிறது. சுக்கிர பகவானுக்குரிய பொருட்கள் என்று சில பொருட்கள் இருக்கின்றன. அந்த பொருட்களை நாம் அன்றாடம் பயன்படுத்துவதன் மூலம் சுக்கிர தோஷத்தில் இருந்து நம்மால் விடுபட முடியும். அதிலும் குறிப்பாக சுக்கிர பகவானுக்குரிய வெள்ளிக்கிழமையில் நாம் பயன்படுத்தும் பொழுது விரைவிலேயே சுக்கிரதோஷத்தில் இருந்து வெளிவர முடியும்.
அப்படிப்பட்ட பொருட்களும் மிகவும் முக்கியமான ஒரு பொருளாக திகழ்வதுதான் வாசனை மிகுந்த ஏலக்காய். ஏலக்காயை பயன்படுத்தி பலவிதமான தாந்திரீக பரிகாரங்களையும் வழிபாட்டு முறைகளையும் நாம் மேற்கொள்வதுண்டு. ஏலக்காயின் நறுமணம் காரணமாக ஏலக்காயை நாம் பயன்படுத்தும் பொழுது தெய்வங்களை ஈர்க்கக்கூடிய தன்மை உண்டாகும் என்றும் கூறப்படுகிறது. ஏலக்காயை மாலையாக தயார் செய்து தெய்வங்களுக்கு சாற்றி வழிபாடு செய்வதன் மூலம் நாம் வேண்டிய வரத்தை தெய்வங்கள் அருள்வார்கள் என்று கூட கூறி கேள்விப்பட்டிருக்கிறோம். அப்படிப்பட்ட ஏலக்காயை வைத்து செய்யக்கூடிய ஒரு எளிமையான பரிகாரம் சுக்கிரதோஷத்தில் இருந்து முற்றிலுமாக நம்மை வெளியே வரச் செய்யும்.
ஒரு லிட்டர் தண்ணீரை எடுத்து ஒரு பாத்திரத்தில் ஊற்றிக் கொள்ளுங்கள். அதில் 10 ஏலக்காயை போட்டு அந்த ஏலக்காயின் சாறு முழுவதும் தண்ணீரில் இறங்கும் வரை கொதிக்க வைத்துக் கொள்ளுங்கள். பிறகு அதை வடிகட்டி ஒரு பாட்டிலில் ஊற்றி வைத்துக் கொள்ளுங்கள். ஏலக்காய் தண்ணீர் தயாராகிவிட்டது. குடும்பத்தில் இருக்கக்கூடிய கணவனும் மனைவியும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் குளிக்கும் தண்ணீரில் இந்த ஏலக்காய் தண்ணீரை சிறிதளவு கலந்து குளித்து வரவேண்டும். அதேபோல் குளிப்பதற்கு முன்பாக முகம்,கை, கால்களில் தயிறை தடவிக்கொண்டு பிறகு குளிக்க வேண்டும். தயிரும் ஏலக்காயும் மகாலட்சுமி மற்றும் சுக்கிர பகவானின் அம்சம் பொருந்தியதாக திகழ்கிறது. இதை நாம் தொடர்ச்சியாக செய்வதன் மூலம் நம்மை பிடித்த தரித்திரம் நீங்குவதோடு சுக்கிரதோஷமும் விலகும். மகாலட்சுமியின் அருளால் அனைத்து விதமான மகிழ்ச்சிகளும் வாழ்க்கையில் உண்டாகும்.
இதையும் படிக்கலாமே: குலதெய்வ தோஷத்தை நீக்கும் தீப வழிபாடு
வீட்டிலேயே இருக்கக்கூடிய இந்த ஏலக்காயை பயன்படுத்தி நாம் செய்யக்கூடிய எளிமையான பரிகாரம் சுக்கிர தோஷத்தில் இருந்து நம்மை விடுவிக்கும். முழு நம்பிக்கையோடு செய்து முழு பலனையும் பெறுவோம் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.