
காலையில் எழுந்து வீட்டு வேலைகளை செய்து, சமைத்து முடித்து, கணவரை வேலைக்கு அனுப்பி, பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பி, அதன் பின்னர் குளித்து முடித்து, வீட்டை சுத்தம்செய்து வேலைக்கு செல்லும் பெண்கள் பலர் இருக்கின்றனர். இப்படி வேலைக்கு செல்லும் பெண்கள் மாலை வீடு வந்ததும் மறுபடியும் வீட்டு வேலை செய்து, சமைத்து அவர்கள் உறங்கச் செல்வதற்கு மணி பதினொன்று, பன்னிரண்டு தொட்டுவிடும். இவ்வாறு வீட்டைப் பராமரிப்பதற்கே இன்றைய பெண்களுக்கு நேரம் சரியாக இருக்கிறது. வெளியில் சென்று வரும் பெண்கள் அவர்களின் அழகைப் பராமரித்து கொள்ள வேண்டும். ஒரு சிலருக்கு கழுத்தின் பின்பகுதி, கை, கால் பகுதி, முட்டி பகுதி போன்ற இடங்களில் கருமை படர்ந்து இருக்கும். இவற்றை பெரிதாக கண்டு கொள்ளவில்லை என்றாலும், சில நேரங்களில் ஆடை அணியும் பொழுது கை பகுதி, கழுத்துப் பகுதிகள் வெளியில் தெரிய வந்தால் அப்போது உங்கள் தோலின் நிறம் இரண்டு நிறத்தில் இருப்பது தெளிவாக தெரியும். எனவே இவற்றைத் தவிர்க்க உங்கள் உடல் முழுவதையும் பளிச்சென்று மாற இந்த சுலபமான பேக்கை நீங்களே தயார் செய்து கொள்ளுங்கள்.
தேவையான பொருள்:
ஷாம்பூ – 2 ஸ்பூன், சோடா உப்பு – ஒரு ஸ்பூன், காபி தூள் – 2 ஸ்பூன், கஸ்தூரி மஞ்சள் – ஒரு சிட்டிகை, எலுமிச்சை பழம் – பாதி அளவு.
செய்முறை:
முதலில் இரண்டு ஸ்பூன் ஷாம்புவை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த ஷாம்பு நீங்கள் தலைக்கு குளிக்க பயன்படுத்தும் எந்த வகை ஷாம்புவாக இருந்தாலும் சரிதான். பின்னர் இதனுடன் அரை எலுமிச்சை பழத்தை பிழிந்து, அதன் சாறை மட்டும் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
பிறகு இதனுடன் ஒரு ஸ்பூன் சோடா உப்பை சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். சோடா உப்பு சேர்த்ததும் நன்றாக நுரை பொங்கி வர ஆரம்பிக்கும். பின்னர் இதனுடன் ஒரு சிட்டிகை கஸ்தூரி மஞ்சள் சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும்.
பிறகு இறுதியாக இரண்டு ஸ்பூன் காபி பவுடர் சேர்த்து, 5 நிமிடத்திற்கு நன்றாக கலந்து கொண்டே இருக்க வேண்டும். இந்த காபிதூள் நிறம் மாறி டார்க் கலர் வரும் வரை கலந்து கொண்டே இருக்க வேண்டும். இவ்வாறு இதில் அனைத்து பொருட்களையும் சேர்த்து முடித்த பிறகு உங்கள் பேக் தயாராகிவிடும். இதில் சேர்த்துள்ள அனைத்து பொருட்களும் சுலபமாக வீட்டிலேயே இருக்க கூடிய பொருட்கள் தான்.
பின்னர் உங்கள் உடம்பில் எங்கெல்லாம் கருமை படர்ந்து இருக்கிறதோ, அந்த இடத்தில் இந்த கலவையில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து தடவி, 5 லிருந்து 10 நிமிடத்திற்கு நன்றாக அழுத்தமாக தேய்த்து விட வேண்டும். பின்னர் சிறிது நேரம் அப்படியே விட்டு விட்டு, குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இவ்வாறு வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை மட்டும் செய்து வரவேண்டும். பின்னர் கிடைக்கின்ற மாற்றத்தை நீங்களே உணர்ந்து கொள்வீர்கள்.