
என்னதான் கத்தரிக்காய், முருங்கைக்காய், வெண்டைக்காய், கேரட், பீன்ஸ் என விதவிதமான காய்கறி உணவுகளை சமைத்துக் கொடுத்தாலும், குழந்தைகளிடம் ஒரு முறை இன்று சமையல் சிக்கன், மட்டன் என்று சொல்லிப் பாருங்கள். அவர்கள் முகத்தில் தனிப்பட்ட மகிழ்ச்சி தோன்றிவிடும். இவ்வாறு குழந்தைகளும் மாமிச உணவுகளை தான் அதிகமாக விரும்புகிறார்கள். அதில் சேர்க்கப்படும் மசாலாக்களின் மணமும், சுவையும் அவர்களை சந்தோஷப்படுத்துகிறது. அதனைக் கேட்ட உடனே சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் வந்துவிடுகிறது. இப்படி அசைவ பிரியர்களுக்கு ஏற்ற ஒரு சைவ உணவை கறி மசாலாவின் சுவையில் சமைத்து கொடுத்து பாருங்கள். நீங்கள் அதில் எத்தனை விதமான காய்கறிகள் சேர்த்து சமைத்திருந்தாலும், அவற்றில் ஒன்றைக் கூட மிச்சம் வைக்காமல் காலி செய்திடுவார்கள். வாருங்கள் இப்படி சுவையான வெஜிடபிள் மசாலா கிரேவியை எப்படி செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.
தேவையான பொருட்கள்:
பெரிய வெங்காயம் – 2, கேரட் – 1, உருளைக்கிழங்கு – 2, காலிஃப்ளவர் சிறியது – 1, பீன்ஸ் – 10, பச்சை பட்டாணி – அரை கப், இஞ்சி சிறிய துண்டு – 2, பச்சை மிளகாய் – 3, முந்திரி பருப்பு – 15, எண்ணெய் – 5 ஸ்பூன், கடுகு – அரை ஸ்பூன், சோம்பு – ஒரு ஸ்பூன், பட்டை சிறிய துண்டு – 1, ஏலக்காய் – 2 ,கிராம்பு – 2 பிரியாணி இலை – 1, உப்பு – ஒரு ஸ்பூன், தனி மிளகாய் தூள் – ஒரு ஸ்பூன், கறிவேப்பிலை – ஒரு கொத்து, கொத்தமல்லித்தழை – ஒரு கைப்பிடி.
செய்முறை:
முதலில் வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். பின்னர் கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு, காலிஃப்ளவர் இவை அனைத்து காய்களையும் சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும். பிறகு ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக்கொண்டு, அதில் நறுக்கி வைத்துள்ள வெங்காயம், இஞ்சி, இரண்டு துண்டு பச்சை மிளகாய் மற்றும் முந்திரி பருப்பு சேர்த்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் இவற்றுடன் சிறிதளவு தண்ணீர் விட்டு, பேஸ்ட் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும், பிறகு அடுப்பை பற்ற வைத்து, ஒரு கடாயை வைத்து கொண்டு, இரண்டு ஸ்பூன் எண்ணெய் ஊற்ற வேண்டும். எண்ணெய் நன்றாக காய்ந்ததும் நறுக்கி வைத்துள்ள காய்கறிகள் அனைத்தையும் இதில் சேர்த்து, 5 லிருந்து 10 நிமிடம் நன்றாக வதக்கிக் கொள்ள வேண்டும். பின்னர் இவற்றை வேறு ஒரு தட்டில் மாற்றிக்கொள்ள வேண்டும்.
பிறகு அதே கடாயில் 3 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, சோம்பு, கடுகு, பட்டை, கிராம்பு, ஏலக்காய் மற்றும் பிரியாணி இலை அனைத்தையும் சேர்த்து தாளிக்க வேண்டும். பிறகு கறிவேப்பிலை சேர்த்து வதக்கி விட வேண்டும். பின்னர் அரைத்து வைத்துள்ள விழுதை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கிக் கொள்ள வேண்டும்.
பிறகு இவற்றுடன் உப்பு மற்றும் மிளகாய் தூள் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். பின்னர் வதக்கி வைத்துள்ள காய்கறிகளை சேர்த்து ஒருமுறை கிளறி விட்டு, இவற்றுடன் தண்ணீர் ஊற்றி, மூடி போட்டு கொதிக்கவைக்க வேண்டும். பிறகு இவை அனைத்தும் சேர்ந்து நன்றாக வெந்ததும் இறுதியாக கொத்தமல்லி தழை தூவி இறக்க வேண்டும்.