
இந்த மாங்காய் சட்னி ரொம்பவே வித்தியாசமான சுவையுடன் இருக்கப் போகிறது. இதை நாம் சுட்டு செய்யப் போகிறோம். மாங்காய், வெங்காயத்தை சுட்டு செய்யப்படும் இந்த மாங்காய் சட்னி அட்டகாசமான சுவையில் இருக்கப் போகிறது. தினமும் ஒரே மாதிரியான சட்னி செய்து அலுத்து போனவர்கள், இப்படி செஞ்சு கொடுத்தா இட்லி, தோசை, சப்பாத்திக்கு கூட தொட்டுக்க சுவையாக இருக்கும். இதை முதலில் நம் முன்னோர்கள் அம்மியில் வைத்து அரைப்பார்கள். இப்பொழுது மிக்ஸியிலேயே அரைச்சு பார்க்கலாம்! டேஸ்டியான மாங்காய் சட்னி ரெசிபி செய்வது எப்படின்னு? நாமளும் தெரிஞ்சுக்குவோம் வாங்க.
பழுத்த பெரிய மாங்காய் – ஒன்று, பெரிய வெங்காயம் – இரண்டு, வரமிளகாய் – ஆறு, தேங்காய் துண்டுகள் – அரை கப், உப்பு – தேவையான அளவு. தாளிக்க: சமையல் எண்ணெய் – ஒரு டேபிள் ஸ்பூன், கடுகு – அரை டீஸ்பூன், உளுந்து – ஒரு டீஸ்பூன், கருவேப்பிலை – ஒரு கொத்து, காய்ந்த மிளகாய் – இரண்டு.
மாங்காய் சட்னி செய்வதற்கு முதலில் மாங்காயை சுட்டு எடுத்துக் கொள்ள வேண்டும். அடுப்பை பற்ற வைத்து மாங்காயை புல்கா செய்ய பயன்படுத்தும் கம்பியின் மீது வைத்து எல்லா புறமும் சுட்டு எடுத்துக் கொள்ளுங்கள். நேரடியாக் நெருப்பிலும் சுடலாம். இப்படி செய்யும் பொழுது மாங்காய் உடைய தோல் அப்படியே உரித்து விடலாம், உள்ளே நன்கு வெந்திருக்கும். இதே முறையில் நீங்கள் இரண்டு பெரிய வெங்காயத்தையும் நெருப்பு தணலில் சுட்டு எடுத்துக் கொள்ளுங்கள்.
பின்னர் வெங்காயத்தை தோல் உரித்து ஒன்றிரண்டாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள். மாங்காயையும் தோல் உரித்து கொட்டையை தவிர மீதி எல்லா பாகத்தையும் வெட்டி வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் ஒரு மிக்ஸி ஜாரை கழுவி எடுத்துக் கொள்ளுங்கள். அதில் இவற்றை சேர்த்து இதனுடன் காரத்திற்கு ஏற்ப வர மிளகாய், நறுக்கிய தேங்காய் துண்டுகளும் சேர்த்து தேவையான அளவிற்கு உப்பு போட்டு நைசாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
அரைத்து எடுத்த இந்த சட்னியுடன் ஒரு சிறு தாளிப்பு கொடுக்க வேண்டும். இதற்கு தாளிப்பு கரண்டி ஒன்றை அடுப்பில் வைத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு டேபிள் ஸ்பூன் அளவிற்கு சமையல் எண்ணெய் விட்டு காய விடுங்கள். எண்ணெய் நன்கு காய்ந்ததும் கடுகு போட்டு பொரிய விடுங்கள். கடுகு பொரிந்து வந்ததும் உளுந்து சேர்த்து பொன்னிறமாக வறுத்துக் கொள்ளுங்கள். பின்னர் ஒரு கொத்து கருவேப்பிலையை உருவி போட்டுக் கொள்ளுங்கள்.
பிறகு இரண்டு வரமிளகாயை காம்பு நீக்கி இரண்டாக கிள்ளி சேர்த்துக் கொள்ளுங்கள். இப்படி தாளிப்பு கொடுத்ததும் மாங்காய் சட்னியில் சேர்த்து கலந்து விட்டுக் கொள்ளுங்கள். ரொம்பவே சூப்பரான டேஸ்டியாக இருக்கக் கூடிய இந்த மாங்காய் சட்னி இதே மாதிரி நீங்களும் செஞ்சு பாருங்க, இனி உங்க வீட்டில் நீங்க தான் கிச்சன் கில்லாடின்னு பேர் வாங்கிடலாம். அந்த அளவிற்கு இதன் ருசி வித்தியாசமாகவும், அபாரமாகவும் இருக்கும், ட்ரை பண்ணி பாருங்க.