
இப்பொழுது வீட்டில் இருக்கும் குழந்தைகளுக்கு தினமும் ஒவ்வொரு விதமான ரெசிபிக்களை வீட்டிலேயே செய்து கொடுத்தால், குழந்தைகள் கடையில் விற்க கூடிய உடம்பிற்கு தீங்கு விளைவிக்கும் உணவு பொருட்கள் வாங்குவதை தவிர்த்து விடுவார்கள். அதற்காக தினமும் ஒரு புது ஸ்நாக்ஸ் என்று விதவிதமாக யோசித்து செய்ய வேண்டும். அதற்காக மிகவும் ஈஸியாகவும், குறைவான நேரத்திலும் செய்யக்கூடிய ஒரு சுவையான இந்த ரெசிப்பியை எப்படி செய்ய வேண்டும் என்பதை பற்றி தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இதனை மிகவும் எளிமையான முறையில் செய்து கொடுக்க முடியும். இதன் சுவையும் குழந்தைகள் அனைவருக்கும் மிகவும் பிடித்ததாகவே இருக்கும்.இது உடம்பிற்க்கும் மிகவும் ஆரோக்கியமான உணவுப் பொருளாகும்.
தேவையான பொருட்கள்:
வெள்ளை அவல் – ஒரு கப், கோதுமை மாவு – அரை கப், மிளகாய்த்தூள் – அரை ஸ்பூன், மஞ்சள் தூள் – கால் ஸ்பூன், பெரிய வெங்காயம் – 1, பச்சை மிளகாய் – 1, பெருங்காயத் தூள் – கால் ஸ்பூன், எண்ணெய் – 150 கிராம், உப்பு – அரை ஸ்பூன், கருவேப்பிலை – ஒரு கொத்து, கொத்தமல்லித்தழை – ஒரு கொத்து.
செய்முறை:
முதலில் ஒரு கப் வெள்ளை அவலை ஒரு கிண்ணத்தில் சேர்க்க வேண்டும். பிறகு அதனை இரண்டு முறை தண்ணீர் ஊற்றி சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும். பிறகு இரண்டு ஸ்பூன் தண்ணீர் தெளித்து சிறிது நேரம் அப்படியே ஊறவிட வேண்டும். பிறகு கைகளை வைத்து நன்றாக பிசைந்து விடும் பொழுது மாவு பதத்திற்கு வந்துவிடும்.
பிறகு ஒரு வெங்காயம் மற்றும் ஒரு பச்சை மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். பிறகு இந்த பிசைந்து வைத்துள்ள மாவில் அரை கப் கோதுமை மாவு சேர்த்து நன்றாக கலந்து விடவேண்டும். பின்னர் நறுக்கி வைத்துள்ள வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்க்க வேண்டும்.
பிறகு இவற்றுடன் அரை ஸ்பூன் மிளகாய்த் தூள், கால் ஸ்பூன் மஞ்சள் தூள், கால் ஸ்பூன் பெருங்காயத்தூள் சேர்த்து நன்றாகப் பிசைந்துக் கொள்ள வேண்டும். மாவு மிகவும் கெட்டியான பதத்தில் இருந்தது என்றால் லேசாக தண்ணீர் தெளித்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ள வேண்டும்.
பிறகு ஒரு தட்டில் ஒரு ஸ்பூன் எண்ணெய் தடவி, மாவை முழுவதுமாக உருண்டையாக செய்து, தட்டில் வைத்து பரப்பி விட வேண்டும். பிறகு உங்களுக்கு வேண்டிய வடிவத்தில் இதனை வெட்டி எடுத்துக் கொள்ளலாம். இவ்வாறு வெட்டி எடுத்த அனைத்தையும் சிறு துண்டுகளாக ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு பேனை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றிக் கொள்ள வேண்டும். பின்னர் எண்ணெய் சூடானதும் ஒவ்வொரு துண்டுகளாக அதில் வைத்து பொறிக்க வேண்டும். மாவு முழுவதுமாக சிவந்து வரும் வரை திருப்பிப் போட்டு பொரித்து எடுக்கவேண்டும். இவ்வாறு மீதமுள்ள அனைத்தையும் பொரித்து எடுத்தால் போதும். சுவையான ஸ்னாக்ஸ் ரெசிப்பி தயாராகிவிடும்.