- Advertisement -
சமையல் குறிப்புகள்

பத்தே நிமிடத்தில் செய்யக்கூடிய சத்தான மற்றும் சுவையான அவல் பொங்கலை நீங்களும் ஒருமுறை செய்து சாப்பிட்டு பாருங்கள். எவ்வளவு அருமையான சுவையில் இருக்கும் தெரியுமா

- Advertisement -

காலை வேளையில் சமைப்பதற்காக வீட்டில் அரிசி மாவு கோதுமை மாவு எதுவும் இல்லை என்றாலும் அல்லது ஏதாவது வித்தியாசமாக சமைக்க வேண்டும் என்றாலும் அவலை பயன்படுத்தி செய்யக்கூடிய இந்த பொங்கலை உடனடியாக செய்து கொடுத்து விடுங்கள். இதற்காக அதிக நேரம் செலவிட வேண்டிய அவசியம் இருக்காது. நினைத்த உடனே சட்டென்று செய்துவிடலாம். வாருங்கள் இந்த சுவையான அவல் பொங்கலை எப்படி தயார் செய்வது என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

செய்முறை விளக்கம்:
முதலில் ஒரு மிக்ஸி ஜாரில் ஒன்றரை கப் வெள்ளை அவலை எடுத்துக் கொண்டு சற்று கொரகொரப்பாக அரைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் 2 கேரட், 5 பீன்ஸ் மற்றும் இரண்டு பச்சை மிளகாயை சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக்கொள்ள வேண்டும்.

- Advertisement -

அதன் பிறகு அடுப்பை பற்ற வைத்து இரண்டு ஸ்பூன் நெய் சேர்த்து நெய் நன்றாக சூடானதும் அரை ஸ்பூன் கடுகு, அரை ஸ்பூன் சீரகம், அரை ஸ்பூன் மிளகு சேர்த்து தாளிக்க வேண்டும். பிறகு ஒரு கொத்து கறிவேப்பிலை, 10 முந்திரி மற்றும் நறுக்கி வைத்த காய்கறிகளை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.

காய்கறிகள் நன்றாக வதங்கியதும் ஒன்றரை கப் தண்ணீர் ஊற்றி அதில் அரை ஸ்பூன் உப்பு சேர்க்கவேண்டும் தண்ணீர் நன்றாகக் கொதிக்கும் வரை அடுப்பு வேகமான தீயில் இருக்க வேண்டும். சிறிது நேரத்தில் தண்ணீர் நன்றாக கொதித்ததும் பொடித்து வைத்துள்ள அவலை சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும்.

- Advertisement -

இப்போது அடுப்பின் தீயை சிம்மில் வைத்து விட வேண்டும். 5 நிமிடங்கள் கைவிடாமல் கிளறிக் கொண்டே இருக்க வேண்டும். இப்பொழுது அவல் தண்ணீருடன் சேர்ந்து நன்றாக வெந்து கெட்டியாக ஆரம்பிக்கும். அந்த சமயத்தில் சிறிது கொத்தமல்லி தழைகளை சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொண்டு இதனுடன் சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும். அவ்வளவுதான் சுவையான அவல் பொங்கல் தயாராகிவிட்டது.

பின்னர் இதனுடன் தொட்டுக்கொள்ள துருவிய தேங்காய் கால் கப், பொட்டுக்கடலை கால் கப், பச்சை மிளகாய் 3, புளி நெல்லிக்காய் அளவு, உப்பு கால் ஸ்பூன் இவை அனைத்தையும் மிக்ஸியில் சேர்த்து அதனுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து பேஸ்ட் பதத்திற்கு அரைத்துக் கொள்ளவேண்டும். பின்னர் ஒரு தாளிப்பு கரண்டியை அடுப்பில் வைத்து ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு கால் ஸ்பூன், சீரகம் கால் ஸ்பூன் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து அரைத்து வைத்துள்ள சட்னியில் சேர்த்து விட வேண்டும்.

பின்னர் செய்து வைத்ததுள்ள அவல் பொங்கலுடன் இந்த பொட்டுக்கடலை சட்னியை சேர்த்து வீட்டில் உள்ள அனைவருக்கும் பரிமாறி சாப்பிட கொடுத்து பாருங்கள். எப்போதும் சாப்பிடும் உணவை விட சற்று வித்தியாசமான சுவையில் அசத்தலாக இருக்கும். பலரும் அவலை விருப்பமாக சாப்பிட மாட்டார்கள் ஆனால் அவலில் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் அதிகமாக இருக்கின்றன. எனவே இவ்வாறு சுவையாக சமைத்து கொடுத்தால் வீட்டில் உள்ள அனைவரும் தட்டாமல் சாப்பிட்டு விடுவார்கள்.

- Advertisement -